பாடல் #1718: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)
தூய விமானமுந் தூலம தாகுமா
லாய சதாசிவ மாகுநற் சூக்கும
மாய பெலிபீடம் பத்திர லிங்கமா
மாய வரனிலை யாய்ந்துகொள்வார் கட்கே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தூய விமானமுந தூலம தாகுமா
லாய சதாசிவ மாகுநற சூககும
மாய பெலிபீடம பததிர லிஙகமா
மாய வரனிலை யாயநதுகொளவார கடகெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தூய விமானமும் தூலம் அதாகும் ஆல்
ஆய சதா சிவம் ஆகும் நல் சூக்குமம்
ஆய பெலி பீடம் பத்திர இலிங்கம் ஆம்
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள் ஆர்களுக்கே.
பதப்பொருள்:
தூய (தூய்மையான) விமானமும் (விமானம் என்று அழைக்கப் படுகின்ற இலிங்கத்தின் மேல் பகுதியானது {பாணம்}) தூலம் (தீயவற்றை அழித்து உலகிற்கு நன்மையை தருகின்ற தூல வடிவமே) அதாகும் (பிரபஞ்சமாகி பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டு) ஆல் (இருக்கின்றது ஆதலால்)
ஆய (இலிங்கத்தின் அடிப் பகுதியாக இருக்கின்ற {ஆவுடையார்}) சதா (பரம் பொருளாகிய) சிவம் (சிவபெருமானின் பிரபஞ்ச சக்தி) ஆகும் (ஆகும்) நல் (அது உலகத்திற்கு நன்மையானதை கொடுக்கின்ற) சூக்குமம் (நுண்ணிய வடிவம் ஆகும்)
ஆய (இலிங்கத்தின் நடுப் பகுதியாக இருக்கின்ற) பெலி (பலி) பீடம் (பீடமானது) பத்திர (தம்மிடம் வேண்டி வருபவர்களை பாதுகாக்கின்ற) இலிங்கம் (இலிங்க) ஆம் (வடிவம் ஆகும்)
ஆய (இவ்வாறு இருக்கின்ற) அரன் (இறைவனின்) நிலை (நிலையை) ஆய்ந்து (ஆராய்ந்து) கொள் (அறிந்து கொள்ளுகின்ற) ஆர்களுக்கே (உயிர்களால் மட்டுமே இலிங்கத்தின் உண்மையை உணர முடியும்).
விளக்கம்:
விமானம் என்று அழைக்கப் படுகின்ற இலிங்கத்தின் மேல் பகுதியானது {பாணம்} தீயவற்றை அழித்து உலகிற்கு நன்மையை தருகின்ற தூல வடிவமே பிரபஞ்சமாகி பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டு இருக்கின்றது. ஆதலால் இலிங்கத்தின் அடிப் பகுதியாக இருக்கின்ற {ஆவுடையார்} பரம் பொருளாகிய சிவபெருமானின் பிரபஞ்ச சக்தியாக உலகத்திற்கு நன்மையை கொடுக்கின்ற நுண்ணிய வடிவமாக இருக்கின்றது. இலிங்கத்தின் நடுப் பகுதியாக இருக்கின்ற பலி பீடமானது தம்மிடம் வேண்டி வருபவர்களை பாதுகாக்கின்ற இலிங்க வடிவமாக இருக்கின்றது. இவ்வாறு இருக்கின்ற இறைவனின் நிலையை ஆராய்ந்து அறிந்து கொள்ளுகின்ற உயிர்களால் மட்டுமே இலிங்கத்தின் உண்மையை உணர முடியும்.