பாடல் #1667

பாடல் #1667: ஆறாம் தந்திரம் – 10. திருநீறு (உள்ளுக்குள் உணர்ந்ததை வெளிப்படுத்தும் தவ வேடம்)

அரசுட னாலத்தி யாகுமக் காரம்
விரவு கனலில் வியனுரு மாறி
நிரவிய நின்மலந் தான்பெற்ற நீத
ருருவம் பிரம னுயர்குல மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அரசுட னாலததி யாகுமக காரம
விரவு கனலில வியனுரு மாறி
நிரவிய நினமலந தானபெறற நீத
ருருவம பிரம னுயரகுல மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அரசு உடன் ஆல் அத்தி ஆகும் அக் காரம்
விரவு கனலில் வியன் உரு மாறி
நிரவிய நின் மலம் தான் பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர் குலம் ஆமே.

பதப்பொருள்:

அரசு (அரச மரம்) உடன் (அதனுடன்) ஆல் (ஆல மரம்) அத்தி (அத்தி மரம்) ஆகும் (ஆகிய மூன்று மரங்களின் சுள்ளிகளை) அக் (அந்த) காரம் (சாம்பல்)
விரவு (ஒன்றாக கலந்து) கனலில் (யாகத்தின் நெருப்பில் எரிந்து) வியன் (சிறப்பான) உரு (உருவமாக) மாறி (மாறி வருகின்ற திரு நீற்றை)
நிரவிய (உடல் முழுவதும் பூசிக் கொண்டு தவமிருந்து) நின் (எந்தவிதமான) மலம் (குற்றங்களும் இல்லாத நிலை) தான் (தாங்கள்) பெற்ற (அடையப் பெற்ற) நீதர் (தர்மத்தின் வடிவமாக இருக்கின்ற தவசிகளின்)
உருவம் (உருவமானது) பிரமன் (மனித நிலையை விட மேன்மை பெற்ற தேவர்களின்) உயர் (உயர்ந்த) குலம் (பிறப்பாகவே) ஆமே (ஆகி விடுகின்றது).

விளக்கம்:

அரச மரத்துடன் ஆல மரம் மற்றும் அத்தி மரம் ஆகிய மூன்று மரங்களின் சுள்ளிகளை ஒன்றாக கலந்து யாகத்தின் நெருப்பில் எரிந்து சிறப்பான உருவமாக மாறி வருகின்ற சாம்பலாகிய திரு நீற்றை உடல் முழுவதும் பூசிக் கொண்டு தவமிருந்து எந்தவிதமான குற்றங்களும் இல்லாத நிலையை அடையப் பெற்ற தர்மத்தின் வடிவமாக இருக்கின்ற தவசிகளின் உருவமானது மனித நிலையை விட மேன்மை பெற்ற தேவர்களின் உயர்ந்த பிறப்பாகவே ஆகி விடுகின்றது.

One thought on “பாடல் #1667

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.