பாடல் #1666: ஆறாம் தந்திரம் – 10. திருநீறு (உள்ளுக்குள் உணர்ந்ததை வெளிப்படுத்தும் தவ வேடம்)
கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகிற்
றங்கா வினைகளுஞ் சாருஞ் சிவநெறி
சிங்கார மான திருவடி சேர்வரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கஙகாளன பூசுங கவசத திருநீறறை
மஙகாமற பூசி மகிழவரெ யாமாகிற
றஙகா வினைகளுஞ சாருஞ சிவநெறி
சிஙகார மான திருவடி செரவரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கங்காளன் பூசும் கவச திரு நீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாம் ஆகில்
தங்கா வினைகளும் சாரும் சிவ நெறி
சிங்காரம் ஆன திருவடி சேர்வரே.
பதப்பொருள்:
கங்காளன் (உயிர்களின் எலும்பை மாலையாக அணிந்து இருக்கின்ற இறைவன்) பூசும் (தனது உடலில் பூசுகின்ற) கவச (சாம்பல் கவசமாகிய) திரு (திரு) நீற்றை (நீற்றை)
மங்காமல் (கொஞ்சமும் மங்காமல் பிரகாசமாகத் தெரியும் படி) பூசி (பூசிக் கொண்டு) மகிழ்வரே (மகிழ்ச்சியை அடைபவர்களாக) யாம் (தாங்கள்) ஆகில் (இருந்தால்)
தங்கா (அவர்களிடம் தங்காமல் விலகி ஓடி விடும்) வினைகளும் (அனைத்து வினைகளும்) சாரும் (அவர்களுடன் சேர்ந்தே இருக்கும்) சிவ (சிவப் பரம்பொருளை) நெறி (அடைகின்ற வழி முறை)
சிங்காரம் (பேரழகு) ஆன (ஆக இருக்கின்ற) திருவடி (இறைவனின் திருவடியை) சேர்வரே (அவர்கள் சென்று அடைவார்கள்).
விளக்கம்:
உயிர்களின் எலும்பை மாலையாக அணிந்து இருக்கின்ற இறைவன் தனது உடலில் பூசுகின்ற சாம்பல் கவசமாகிய திரு நீற்றை கொஞ்சமும் மங்காமல் பிரகாசமாகத் தெரியும் படி பூசிக் கொண்டு மகிழ்ச்சியை அடைபவர்களாக தாங்கள் இருந்தால் அனைத்து வினைகளும் அவர்களிடம் தங்காமல் விலகி ஓடி விடும். சிவப் பரம்பொருளை அடைகின்ற வழி முறை அவர்களுடன் சேர்ந்தே இருக்கும். அதன் வழியே சென்று பேரழகாக இருக்கின்ற இறைவனின் திருவடியை அவர்கள் அடைவார்கள்.