பாடல் #1665: ஆறாம் தந்திரம் – 9. தவ வேடம் (அகத் தவத்தின் தன்மையை புற வேடத்தில் காட்டுவது)
நூலுஞ் சிகையு முணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்று மந்தணர் பாப்பார் பரமுயி
ரோரொன் றிரண்டெனி லோங்கார மோதிலே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
நூலுஞ சிகையு முணராரநின மூடரகள
நூலது வெதாநதம நுணசிகை ஞானமாம
பாலொனறு மநதணர பாபபார பரமுயி
ரொரொன றிரணடெனி லொஙகார மொதிலெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்
நூல் அது வேத அந்தம் நுண் சிகை ஞானம் ஆம்
பால் ஒன்றும் அந்தணர் பாப்பார் பரம் உயிர்
ஓர் ஒன்று இரண்டு எனில் ஓங்காரம் ஓதிலே.
பதப்பொருள்:
நூலும் (பூணூலுக்கும்) சிகையும் (குடுமிக்கும்) உணரார் (உள்ள உட் பொருளை உணராதவர்கள்) நின் (முழு) மூடர்கள் (மூடர்களாக இருக்கின்றார்கள்)
நூல் (பூணூல்) அது (என்பது) வேத (வேதத்தை) அந்தம் (முழுதும் அறிந்து உணர்ந்ததை குறிப்பதாகும்) நுண் (தலை உச்சியில் இருக்கும்) சிகை (குடுமி என்பது) ஞானம் (உண்மை ஞானத்தை) ஆம் (உணர்ந்ததை குறிப்பதாகும்)
பால் (வேதப் பொருளாகிய இறைவனை உணர்ந்து அவனோடு) ஒன்றும் (ஒன்றி இருக்கின்ற) அந்தணர் (அந்தணர்களே) பாப்பார் (தமக்குள் பார்க்கின்றார்கள்) பரம் (பரம்பொருளாகிய இறைவனே) உயிர் (தமது உயிராகவும் இருப்பதை)
ஓர் (ஒரே பொருளாக) ஒன்று (ஒன்று பட்டு இருக்கின்ற) இரண்டு (இறைவன் ஆன்மா ஆகிய இரண்டும்) எனில் (என்று உணர்ந்தால் அது) ஓங்காரம் (ஓங்காரத்தை) ஓதிலே (ஓதியே உணர்ந்தது ஆகும்).
விளக்கம்:
பூணூலுக்கும் குடுமிக்கும் உள்ள உட் பொருளை உணராதவர்கள் முழு மூடர்களாக இருக்கின்றார்கள். பூணூல் என்பது வேதத்தை முழுதும் அறிந்து உணர்ந்ததை குறிப்பதாகும். தலை உச்சியில் இருக்கும் குடுமி என்பது உண்மை ஞானத்தை உணர்ந்ததை குறிப்பதாகும். வேதப் பொருளாகிய இறைவனை உணர்ந்து அவனோடு ஒன்றி இருக்கின்ற அந்தணர்களே பரம்பொருளாகிய இறைவனே தமது உயிராகவும் இருப்பதை தமக்குள் பார்க்கின்றார்கள். ஒன்று பட்டு இருக்கின்ற இறைவன் ஆன்மா ஆகிய இரண்டும் ஒரே பொருளே என்பதை ஓங்காரத்தை ஓதியே அவர்கள் உணர்ந்தார்கள்.
குறிப்பு:
சுவடிகளில் இந்தப் பாடல் “தவ வேடம்” தலைப்பிலேயே உள்ளது. ஆனால் சில புத்தகங்களில் அடுத்து வருகின்ற “திரு நீறு” தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் பொருள் தவ வேடத்திற்கே பொருத்தமாக இருக்கின்றது.