பாடல் #1570: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)
ஆதிப் பிரானுல கேழு மளந்தவ
னோதக் கடலு முயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையி னின்றபரா சத்தி
யாதிகட் டெய்வமு மந்தமு மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஆதிப பிரானுல கெழு மளநதவ
னொதக கடலு முயிரகளு மாயநிறகும
பெதிப பிலாமையி னினறபரா சததி
யாதிகட டெயவமு மநதமு மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஆதி பிரான் உலகு ஏழும் அளந்தவன்
ஓத கடலும் உயிர்களும் ஆய் நிற்கும்
பேதிப்பு இலாமையில் நின்ற பராசத்தி
ஆதி கண் தெய்வமும் அந்தமும் ஆமே.
பதப்பொருள்:
ஆதி (ஆதியிலிருந்தே இருக்கின்ற) பிரான் (தலைவனாகிய இறைவனே) உலகு (உலகங்கள்) ஏழும் (ஏழையும்) அளந்தவன் (அவற்றின் தேவைக்கு ஏற்ப அளந்து படைத்தான்)
ஓத (அலைகளால் பேரிரைச்சல் கொண்டு இருக்கின்ற) கடலும் (கடல்களும்) உயிர்களும் (அது சூழ்ந்து நிற்கின்ற உலகத்தில் வாழ்கின்ற உயிர்களும்) ஆய் (ஆகிய அனைத்துமாக) நிற்கும் (அவனே நிற்கின்றான்)
பேதிப்பு (அவை அனைத்தில் இருந்தும் வேறு பட்டு) இலாமையில் (இல்லாதவனாக) நின்ற (ஒன்றாகவே கலந்து நிற்கின்ற இறைவனே) பராசத்தி (அசையும் சக்தியாகவும் இருந்து அனைத்தையும் இயக்குகின்றான்)
ஆதி (ஆதியிலிருந்தே) கண் (அனைத்தையும் பார்க்கின்றவனாகவும் பார்க்கப் படுகின்ற பொருளாகவும் இருக்கின்ற) தெய்வமும் (தெய்வமாகவும்) அந்தமும் (அனைத்தையும் ஊழிக் காலத்தில் அழிக்கின்ற தெய்வமாகவும்) ஆமே (அவனே இருக்கின்றான்).
விளக்கம்:
ஆதியிலிருந்தே இருக்கின்ற தலைவனாகிய இறைவனே ஏழு உலகங்களையும் அவற்றின் தேவைக்கு ஏற்ப அளந்து படைத்தான். அலைகளால் பேரிரைச்சல் கொண்டு இருக்கின்ற கடல்களும் அது சூழ்ந்து நிற்கின்ற உலகத்தில் வாழ்கின்ற உயிர்களும் ஆகிய அனைத்துமாக அவனே நிற்கின்றான். அவை அனைத்தில் இருந்தும் வேறு பட்டு இல்லாதவனாக ஒன்றாகவே கலந்து நிற்கின்ற இறைவனே அசையும் சக்தியாகவும் இருந்து அனைத்தையும் இயக்குகின்றான். ஆதியிலிருந்தே அனைத்தையும் பார்க்கின்றவனாகவும் பார்க்கப் படுகின்ற பொருளாகவும் இருக்கின்ற தெய்வமாகவும் அனைத்தையும் ஊழிக் காலத்தில் அழிக்கின்ற தெய்வமாகவும் அவனே இருக்கின்றான்.
கருத்து:
உயிர்களுக்குள் இருக்கின்ற இறைவனே உயிர்கள் வெளிப்புறத்தில் பார்க்கின்ற அனைத்துமாகவும் இருக்கின்றான் அனைத்தையும் இயக்குகின்றான் என்பதை உணர்ந்து வழி படுதலே அவனை அடைவதற்கு எளிதான வழியாகும்.