பாடல் #1565: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)
மினக்குறி யாளனை வேதியர் வேதத்
தினக்குறி யாளனை ஆதிப் பிரானை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்
நயக்குறி காணிலர னெறியா குமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மினககுறி யாளனை வெதியர வெதத
தினககுறி யாளனை யாதிப பிரானை
நினைககுறி யாளனை ஞானக கொழுநதின
நயககுறி காணிலர னெறியா குமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மினல் குறி ஆளனை வேதியர் வேதத்தின்
அக் குறி ஆளனை ஆதி பிரானை
நினை குறி ஆளனை ஞான கொழுந்தின்
நய குறி காணில் அரன் நெறி ஆகுமே.
பதப்பொருள்:
மினல் (மின்னல் போன்ற ஒளியும் ஒலியும் சேர்ந்த) குறி (வடிவமாக) ஆளனை (இருப்பவனை) வேதியர் (அந்தணர்கள்) வேதத்தின் (ஓதுகின்ற வேதத்தின்)
அக் (உட்பொருள்) குறி (வடிவமாக) ஆளனை (இருப்பவனை) ஆதி (ஆதியிலிருந்தே) பிரானை (இருக்கின்ற தலைவனை)
நினை (அடியவர்கள் நினைக்கின்ற) குறி (வடிவமாகவே) ஆளனை (வந்திருந்து அருளுபவனை) ஞான (ஞானத்தின்) கொழுந்தின் (உச்சியான நிலையில்)
நய (அன்பின்) குறி (வடிவமாகவே) காணில் (கண்டு தரிசித்தால்) அரன் (அதுவே அவனை அடைவதற்கான) நெறி (வழி முறையாக) ஆகுமே (ஆகி விடும்).
விளக்கம்:
மின்னல் போன்ற ஒளியும் ஒலியும் சேர்ந்த வடிவமாக இருப்பவனை அந்தணர்கள் ஓதுகின்ற வேதத்தின் உட்பொருள் வடிவமாக இருப்பவனை ஆதியிலிருந்தே இருக்கின்ற தலைவனை அடியவர்கள் நினைக்கின்ற வடிவமாகவே வந்திருந்து அருளுபவனை ஞானத்தின் உச்சியான நிலையில் அன்பின் வடிவமாகவே கண்டு தரிசித்தால் அதுவே அவனை அடைவதற்கான வழி முறையாக ஆகி விடும்.
கருத்து:
இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளில் எந்த வழி முறையில் சென்றாலும் அனைத்திற்கும் பொதுவாக இருப்பது அன்பின் வழியாக இறைவனை அடைவதே ஆகும்.