பாடல் #1553: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)
தூரறி வாளர் துணைவர் நினைப்பிலாப்
பாரறி வாளர் படுபயன் றானுண்பர்
காரறி வாளர் கலந்து பிறப்பர்கள்
நீரறி வார்நெடு மாமுகி லாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தூரறி வாளர துணைவர நினைபபிலாப
பாரறி வாளர படுபயன றானுணபர
காரறி வாளர கலநது பிறபபரகள
நீரறி வாரநெடு மாமுகி லாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலா
பார் அறிவாளர் படு பயன் தான் உண்பர்
கார் அறிவாளர் கலந்து பிறப்பர்கள்
நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே.
பதப்பொருள்:
தூர் (மும் மலங்களை மட்டுமே) அறிவாளர் (அறிந்து கொண்டவர்கள்) துணைவர் (தன்னுடன் துணையாகவே நிற்கின்ற இறைவனை பற்றிய) நினைப்பு (நினைவே) இலா (இல்லாதவர்களாக இருக்கின்றார்கள்)
பார் (உலக அறிவை மட்டுமே) அறிவாளர் (அறிந்து கொண்டவர்கள்) படு (அதற்குள்ளேயே விழுந்து கிடந்து) பயன் (அதன் பயன்களை) தான் (தானே) உண்பர் (அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள்)
கார் (மாயை எனும் இருளால் அறிந்து கொள்ளக் கூடியதை மட்டுமே) அறிவாளர் (அறிந்து கொண்டவர்கள்) கலந்து (வினைகளோடு கலந்து) பிறப்பர்கள் (மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார்கள்)
நீர் (இறைவன் எனும் மேகத்தில் இருந்து ஆன்மா எனும் நீராக தாம் வந்து இருக்கின்றோம் என்பதை) அறிவார் (உணர்ந்து கொண்டவர்களுக்கு) நெடு (நீண்ட) மா (மாபெரும்) முகில் (மேகத்தை போல அருளை மழையாகப் பொழிபவனாக) ஆமே (இறைவன் இருக்கின்றான்).
விளக்கம்:
மும் மலங்களை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் தன்னுடன் துணையாகவே நிற்கின்ற இறைவனை பற்றிய நினைவே இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். உலக அறிவை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் அதற்குள்ளேயே விழுந்து கிடந்து அதன் பயன்களை தானே அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள். மாயை எனும் இருளால் அறிந்து கொள்ளக் கூடியதை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் வினைகளோடு கலந்து மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார்கள். இறைவன் எனும் மேகத்தில் இருந்து ஆன்மா எனும் நீராக தாம் வந்து இருக்கின்றோம் என்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு நீண்ட மாபெரும் மேகத்தை போல அருளை மழையாகப் பொழிபவனாக இறைவன் இருக்கின்றான்.