பாடல் #1525: ஐந்தாம் தந்திரம் – 19. தீவிரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி விரைவாக வருகின்ற தன்மை)
தாங்குமின் னெட்டுத் திசைக்குந் தலைமகள்
பூங்கமழ் பொய்கைப் புரிகுழ லாளோடு
மாங்கது சேரு மறிவுடை யாளர்க்குத்
தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தாஙகுமின னெடடுத திசைககுந தலைமகள
பூஙகமழ பொயகைப புரிகுழ லாளொடு
மாஙகது செரு மறிவுடை யாளரககுத
தூஙகொளி நீலந தொடரதலு மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தாங்குமின் எட்டு திசைக்கும் தலை மகள்
பூம் கமழ் பொய்கை புரி குழலாளோடும்
ஆங்கு அது சேரும் அறிவு உடையாளர்க்கு
தூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே.
பதப்பொருள்:
தாங்குமின் (சாதகர்கள் தங்களின் உள்ளத்திற்குள் தாங்கிக் கொண்டால்) எட்டு (எட்டு விதமான) திசைக்கும் (திசைகளுக்கும்) தலை (தலைவியாக) மகள் (வீற்றிருக்கின்ற இறைவி)
பூம் (நறுமணமிக்க மலரில் / சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில்) கமழ் (இருந்து வருகின்ற நறுமணம் பரந்து விரிகின்ற / இருந்து அருளானது உடல் முழுவதும் பரந்து விரிகின்ற) பொய்கை (ஊற்று பெருகும் குளத்தில் / அமிழ்தம் ஊறி பெருகுவதில்) புரி (அருள் புரிகின்ற) குழலாளோடும் (கூந்தலைக் கொண்ட இறைவியோடு)
ஆங்கு (அவள் இருக்கின்ற குளத்தில் / சகஸ்ரதளத்தில்) அது (தமது குண்டலினி சக்தியை) சேரும் (கொண்டு சேர்க்கின்ற) அறிவு (ஞானத்தை) உடையாளர்க்கு (அறிந்து கொண்டவர்களுக்கு)
தூங்கு (இது வரை நெற்றிக்கு நடுவில் தூங்கிக் கொண்டு இருந்த) ஒளி (ஜோதியாகிய) நீலம் (நீல நிற ஒளியானது விழிப்பு பெற்றதால் உருவாகும் பேரறிவு ஞானமானது) தொடர்தலும் (சாகதருக்கு எப்போதும் தொடர்ந்து) ஆமே (கொண்டே இருக்கும்).
விளக்கம்:
எட்டு விதமான திசைகளுக்கும் தலைவியாக வீற்றிருக்கின்ற இறைவியை சாதகர்கள் தங்களின் உள்ளத்திற்குள் தாங்கிக் கொண்டால் சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் இருந்து அருளானது உடல் முழுவதும் பரந்து விரிகின்ற அமிழ்தம் ஊறி பெருகுவதில் அருள் புரிகின்ற கூந்தலைக் கொண்ட இறைவியோடு அவள் இருக்கின்ற சகஸ்ரதளத்தில் தமது குண்டலினி சக்தியை கொண்டு சேர்க்கின்ற ஞானத்தை அறிந்து கொண்டவர்களுக்கு இது வரை நெற்றிக்கு நடுவில் தூங்கிக் கொண்டு இருந்த ஜோதியாகிய நீல நிற ஒளியானது விழிப்பு பெற்றதால் உருவாகும் பேரறிவு ஞானமானது சாகதருக்கு எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.