பாடல் #1523: ஐந்தாம் தந்திரம் – 19. தீவிரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி விரைவாக வருகின்ற தன்மை)
கன்னிக்கும் பெண்பிள்ளை யப்பனார் தோட்டத்தி
லெண்ணிக்கு மேழேழ் பிறவி யுணர்விக்கு
முண்ணிற்ப தெல்லா மொழிவ முதல்வனைக்
கண்ணுற்று நின்ற கனியது வாகுமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கனனிககும பெணபிளளை யபபனார தொடடததி
லெணணிககு மெழெழ பிறவி யுணரவிககு
முணணிறப தெலலா மொழிவ முதலவனைக
கணணுறறு நினற கனியது வாகுமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கன்னிக்கும் பெண் பிள்ளை அப்பனார் தோட்டத்தில்
எண்ணிக்கும் ஏழ் ஏழ் பிறவி உணர்விக்கும்
உள் நிற்பது எல்லாம் ஒழிவது முதல்வனை
கண் உற்று நின்ற கனி அது ஆகுமே.
பதப்பொருள்:
கன்னிக்கும் (எப்போதும் இளமையுடன் இயங்கிக் கொண்டே இருக்கின்ற) பெண் (பெண் தன்மை கொண்ட) பிள்ளை (பிள்ளையாகிய இறைவியின் அருட் சக்திக்கு) அப்பனார் (அப்பாவாக / தந்தையாக இருக்கின்ற இறைவனுக்கு சொந்தமாகிய) தோட்டத்தில் (அண்ட சராசரங்கள் எனும் தோட்டத்தில் இருக்கும்)
எண்ணிக்கும் (எண்ணிலடங்காத அளவிற்கு இருக்கின்ற பிறவிகளை) ஏழ் (ஏழும்) ஏழ் (ஏழும் கூட்டி வரும் மொத்தம் பதினான்கு உலகங்களிலும்) பிறவி (பல விதமாக எடுக்கின்ற அனைத்து பிறவிகளையும்) உணர்விக்கும் (சாதகருக்கு உணர வைத்து)
உள் (சாதகருக்குள்) நிற்பது (நிற்கின்ற) எல்லாம் (மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஆகிய அனைத்தையும்) ஒழிவது (அழிய வைக்கின்ற) முதல்வனை (ஆதி மூலமாகிய இறைவனை அடைய செய்து)
கண் (சாதகரின் கண்ணிற்கு) உற்று (உள்ளே) நின்ற (நின்று) கனி (அனைத்தையும் உணர வைக்கின்ற பேரின்ப ஞானமாக) அது (அந்த அருள் சக்தியே) ஆகுமே (இருக்கின்றாள்).
விளக்கம்:
எப்போதும் இளமையுடன் இயங்கிக் கொண்டே இருக்கின்ற பெண் தன்மை கொண்ட பிள்ளையாகிய இறைவியின் அருட் சக்திக்கு தந்தையாக இருக்கின்ற இறைவனுக்கு சொந்தமாகிய அண்ட சராசரங்கள் எனும் தோட்டத்தில் இருக்கும் எண்ணிலடங்காத அளவிற்கு இருக்கின்ற மொத்தம் பதினான்கு உலகங்களிலும் பல விதமாக எடுக்கின்ற அனைத்து பிறவிகளையும் சாதகருக்கு உணர வைத்து, சாதகருக்குள் நிற்கின்ற மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஆகிய அனைத்தையும் அழிய வைக்கின்ற ஆதி மூலமாகிய இறைவனை அடைய செய்து சாதகரின் கண்ணிற்கு உள்ளே நின்று அனைத்தையும் உணர வைக்கின்ற பேரின்ப ஞானமாக அந்த அருள் சக்தியே இருக்கின்றாள்.