பாடல் #1520

பாடல் #1520: ஐந்தாம் தந்திரம் – 18. மந்த தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி படிப்படியாக வருகின்ற தன்மை)

செய்யன் கரியன் வெளியனற் பச்சைய
னெய்த வுணர்ந்தவ ரெய்து மிறைவனை
மையன் கண்ணறப் பகடுரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

செயயன கரியன வெளியனற பசசைய
னெயத வுணரநதவ ரெயது மிறைவனை
மையன கணணறப பகடுரி பொரததவெங
கைய னிவனெனறு காதலசெய வீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன்
எய்த உணர்ந்தவர் எய்தும் இறைவனை
மையன் கண் அற பகடு உரி போர்த்த வெம்
கையன் இவன் என்று காதல் செய்வீரே.

பதப்பொருள்:

செய்யன் (சிவந்த மேனியில் அருளை வழங்குபவன்) கரியன் (கரிய மேனியில் மாயையால் மறைக்கின்றவன்) வெளியன் (வெள்ளை மேனியில் அண்ட சராசரங்களிலும் ஜோதியாய் பரவி இருக்கின்றவன்) நற் (நன்மையைத் தந்து) பச்சையன் (பச்சை மேனியில் ஆன்மாக்களை காத்து அருளுகின்றவன்)
எய்த (இப்படி பலவிதமான தன்மைகளை) உணர்ந்தவர் (கண்டு உணர்ந்து கொண்டவர்களுக்கு) எய்தும் (அவர்கள் கண்ட தன்மையிலேயே அருளை வழங்குகின்ற) இறைவனை (இறைவனை)
மையன் (கருமை நிறம் கொண்டு) கண் (அகங்காரத்தை) அற (இல்லாமல் செய்து) பகடு (யானையின் தோல் போன்ற ஆணவத்தை) உரி (உரித்து எடுத்து) போர்த்த (தம்மேல் போர்த்திக் கொண்டு) வெம் (நெருப்புக் கணலை)
கையன் (கையில் கொண்டு பிறவிகளை அறுத்து) இவன் (முக்தியை அருளபவன் இவனே) என்று (என்று உணர்ந்து) காதல் (அவன் மேல் பேரன்பு) செய்வீரே (கொள்ளுங்கள்).

விளக்கம்:

சிவந்த மேனியில் அருளை வழங்குபவன் கரிய மேனியில் மாயையால் மறைக்கின்றவன் வெள்ளை மேனியில் அண்ட சராசரங்களிலும் ஜோதியாய் பரவி இருக்கின்றவன் நன்மையைத் தந்து பச்சை மேனியில் ஆன்மாக்களை காத்து அருளுகின்றவன் இப்படி பலவிதமான தன்மைகளை கண்டு உணர்ந்து கொண்டவர்களுக்கு அவர்கள் கண்ட தன்மையிலேயே அருளை வழங்குகின்ற இறைவனை கருமை நிறம் கொண்டு அகங்காரத்தை இல்லாமல் செய்து யானையின் தோல் போன்ற ஆணவத்தை உரித்து எடுத்து தம்மேல் போர்த்திக் கொண்டு நெருப்புக் கணலை கையில் கொண்டு பிறவிகளை அறுத்து முக்தியை அருளபவன் அவனே என்று உணர்ந்து அவன் மேல் பேரன்பு கொள்ளுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.