பாடல் #1506: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)
வாசித்தும் பூசித்து மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்கில்
மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
நேசத் திருத்த நினைவறி யாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
வாசிததும பூசிதது மாமலர கொயதிடடும
பாசிக குளததிலவீழ கலலா மனமபாரகில
மாசறற சொதி மணிமிடற றணணலை
நெசித திருதத நினைவறி யாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
வாசித்தும் பூசித்தும் மா மலர் கொய்து இட்டும்
பாசி குளத்தில் வீழ் கல் ஆய் மனம் பார்கில்
மாசு அற்ற சோதி மணி மிடற்று அண்ணலை
நேசத்து இருத்த நினைவு அறியாரே.
பதப்பொருள்:
வாசித்தும் (இறைவனை போற்றி பாடியும் மந்திரங்களை செபித்தாலும்) பூசித்தும் (பூஜை செய்தாலும்) மா (அதிக அளவில்) மலர் (மலர்களை) கொய்து (கொய்து வந்து) இட்டும் (சாற்றினாலும்)
பாசி (பாசி படிந்த) குளத்தில் (குளத்தில்) வீழ் (விழுந்த) கல் (கல்லை) ஆய் (போலவே) மனம் (மனம் மாயையில் மூழ்கி இருக்கின்ற நிலையை) பார்கில் (பார்த்தால்)
மாசு (மாசு மரு எதுவும்) அற்ற (இல்லாத தூய்மையான) சோதி (சோதியாக) மணி (நீல நிற) மிடற்று (கழுத்தைக் கொண்டு) அண்ணலை (அனைத்திற்கும் எஜமானராக இருக்கின்ற இறைவனை)
நேசத்து (தங்களின் தூய்மையான அன்பில்) இருத்த (வைத்து இருக்கும்) நினைவு (எண்ணத்தை அவர்கள்) அறியாரே (அறியாமல் இருக்கின்றார்கள்).
விளக்கம்:
இறைவனை போற்றி பாடியும் மந்திரங்களை செபித்தாலும், பூஜை செய்தாலும், அதிக அளவில் மலர்களை கொய்து வந்து சாற்றினாலும், பாசி படிந்த குளத்தில் விழுந்த கல்லை போலவே மனம் மாயையில் மூழ்கி இருக்கின்ற நிலையை பார்த்தால் மாசு மரு எதுவும் இல்லாத தூய்மையான சோதியாக நீல நிற கழுத்தைக் கொண்டு அனைத்திற்கும் எஜமானராக இருக்கின்ற இறைவனை தங்களின் தூய்மையான அன்பில் வைத்து இருக்கும் எண்ணத்தை அவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.
கருத்து:
பாசி நிறைந்த குளத்தில் கல் விழுகின்ற போது சிறிது நேரம் பாசியானது அகன்று பின்னர் மூடிக்கொள்ளும். அதுபோல மாயையில் மூழ்கி இருக்கின்ற மனமானது பூசை முதலியன செய்யும் போது சிறிது அளவு மனம் தெளியும், பின்னர் அதனை அன்போடு தொடர்ந்து செய்யாமல் போனால் மறுபடியும் மாயையில் மூழ்கிவிடும். எனவே மாயையில் மூழ்கி இருக்கின்ற மனதில் இறைவனைப் பற்றிய எண்ணம் வருவதில்லை.