பாடல் #1503: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)
அதுவிது வாதிப் பரமென் றகல
மிதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடு
மதுவிதி நெஞ்சிற் றழிகின்ற வாறே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அதுவிது வாதிப பரமென றகல
மிதுவழி யெனறங கிறைஞசின ரிலலை
விதிவழி யெசெனறு வெநதனை நாடு
மதுவிதி நெஞசிற றழிகினற வாறெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அது இது ஆதி பரம் என்று அகலம்
இது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை
விதி வழியே சென்று வேந்தனை நாடும்
அது விதி நெஞ்சில் அழிகின்ற ஆறே.
பதப்பொருள்:
அது (அதுவும்) இது (இதுவும்) ஆதி (ஆதியாக இருக்கின்ற) பரம் (பரம் பொருள்) என்று (என்று நினைத்துக் கொண்டு) அகலம் (பரந்து விரிந்து இருக்கின்ற உலகில்)
இது (இதுவே) வழி (இறைவனை அடையும் வழி) என்று (என்று எடுத்துக் கொண்டு) அங்கு (அதன் மூலம்) இறைஞ்சினர் (இறைவனை அடைய முயற்சி செய்கின்றவர்கள்) இல்லை (யாரும் இல்லை)
விதி (தங்களுக்கு விதிக்கப் பட்ட) வழியே (வழியில்) சென்று (சென்று) வேந்தனை (தமக்குள் மறைந்து இருந்து தம்மை ஆளுகின்ற இறைவனை அடியவராக) நாடும் (தேடி அடைகின்ற)
அது (வழி முறையே) விதி (விதி என்று கடைபிடிக்கின்றவர்களின்) நெஞ்சில் (மனதில் இருந்து) அழிகின்ற (ஆசைகளை அழித்து) ஆறே (இறைவனிடம் சேர்க்கின்ற வழி முறை இதுவே ஆகும்).
விளக்கம்:
அதுவும் இதுவும் ஆதியாக இருக்கின்ற பரம் பொருள் என்று நினைத்துக் கொண்டு பரந்து விரிந்து இருக்கின்ற உலகில் இதுவே இறைவனை அடையும் வழி என்று எடுத்துக் கொண்டு அதன் மூலம் இறைவனை அடைய முயற்சி செய்கின்றவர்கள் யாரும் இல்லை. அப்படி இல்லாமல் தங்களுக்கு விதிக்கப் பட்ட வழியில் சென்று தமக்குள் மறைந்து இருந்து தம்மை ஆளுகின்ற இறைவனை அடியவராக தேடி அடைகின்ற வழி முறையே விதி என்று கடைபிடிக்கின்றவர்களின் மனதில் இருந்து ஆசைகளை அழித்து இறைவனிடம் சேர்க்கின்ற வழி முறை இதுவே ஆகும்.