பாடல் #1439: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)
உடலான வைந்தையு மோரொன்று மைந்து
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
படலான கேவலப் பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுற்றல் சித்தாந்த மார்கமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
உடலான வைநதையு மொரொனறு மைநது
மடலான மாமாயை மறறுளள நீவப
படலான கெவலப பாசந துடைததுத
திடமாயத தனையுறறல சிததாநத மாரகமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
உடல் ஆன ஐந்தையும் ஓர் ஒன்று ஐந்து
மடல் ஆன மா மாயை மற்று உள்ள நீவ
படல் ஆன கேவல பாசம் துடைத்து
திடம் ஆய் தனை உற்றல் சித்தாந்த மார்கமே.
பதப்பொருள்:
உடல் (மனித உடலாக) ஆன (இருக்கின்ற) ஐந்தையும் (பஞ்ச பூதங்களையும் [நிலம் – தசைகளும் எலும்புகளும், நீர் – இரத்தமும், உமிழ் நீரும், நெருப்பு – உணவை செரிக்கும் சூடு, காற்று – மூச்சுக் காற்று, ஆகாயம் – மனம், புத்தி, அறிவு]) ஓர் (அதை ஒன்றின் மேல்) ஒன்று (ஒன்றாக மூடி இருக்கின்ற) ஐந்து (ஐந்து வகையான கோசங்களையும் [அன்ன மயம், பிராண மயம், மனோ மயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம்] கடந்து நின்று)
மடல் (அதையும் தாண்டி விரிந்து) ஆன (இருக்கின்ற) மாமாயை (சுத்த மாயையும்) மற்று (மற்றும்) உள்ள (இருக்கின்ற அனைத்து தத்துவங்களையும்) நீவ (தாண்டிச் சென்று)
படல் (இறைவனை அடைவதற்கு தடையாக) ஆன (இருக்கின்ற) கேவல (மாயையிலேயே மயங்கி இருக்கின்ற கேவல நிலைக்குக் காரணமாக இருக்கின்ற) பாசம் (பாசங்களையும்) துடைத்து (முழுவதுமாக நீக்கி விட்டு)
திடம் (உறுதி) ஆய் (ஆக) தனை (தனக்குள் இருக்கும் இறைவனை) உற்றல் (உற்று கவனித்த படியே இருப்பதே) சித்தாந்த (சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற) மார்கமே (கடும் சுத்த மார்க்கத்தின் வழியாகும்).
விளக்கம்:
மனித உடலாக இருக்கின்ற ஐந்து விதமான பஞ்ச பூதங்களையும் அதை ஒன்றின் மேல் ஒன்றாக மூடி இருக்கின்ற ஐந்து வகையான கோசங்களையும் கடந்து நின்று அதையும் தாண்டி விரிந்து இருக்கின்ற சுத்த மாயையும் மற்றும் இருக்கின்ற அனைத்து தத்துவங்களையும் தாண்டிச் சென்று இறைவனை அடைவதற்கு தடையாக மாயையிலேயே மயங்கி இருக்கின்ற கேவல நிலைக்குக் காரணமாக இருக்கின்ற பாசங்களையும் முழுவதுமாக நீக்கி விட்டு உறுதியாக தனக்குள் இருக்கும் இறைவனை மட்டுமே உற்று கவனித்த படியே இருப்பதே சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற கடும் சுத்த மார்க்கத்தின் வழியாகும்.
பஞ்ச பூதங்கள்:
- நிலம் – தசைகளும் எலும்புகளும்
- நீர் – இரத்தமும் உமிழ் நீரும்
- நெருப்பு – உணவை செரிக்கும் சூடு
- காற்று – மூச்சுக் காற்று
- ஆகாயம் – மனம் புத்தி அறிவு
பஞ்ச கோசங்கள்:
- அன்ன மய கோசம் – உணவால் ஆகிய உறை
- பிராண மய கோசம் – காற்றால் ஆகிய உறை
- மனோ மய கோசம் – மனம் / எண்ணங்களால் ஆகிய உறை
- விஞ்ஞான மய கோசம் – அறிவு / புத்தி ஆகிய உறை
- ஆனந்த மய கோசம் – பேரின்பத்தால் ஆகிய உறை