பாடல் #1422: ஐந்தாம் தந்திரம் – 1. சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் முதலாவது
வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியோர்
பூதாந்த போதாந்த மாகப் புனஞ்செய்ய
நாதாந்த பூரண ஞானநே யத்தரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
வெதாநதஞ சுததம விளஙகிய சிததாநதம
நாதாநதங கணடொர நடுககறற காடசியொர
பூதாநத பொதாநத மாகப புனஞசெயய
நாதாநத பூரண ஞானநெ யததரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
வேத அந்தம் சுத்தம் விளங்கிய சித்த அந்தம்
நாத அந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியோர்
பூத அந்தம் போத அந்தம் ஆக புனம் செய்ய
நாத அந்தம் பூரணம் ஞான நேயத்தரே.
பதப்பொருள்:
வேத (வேதங்களின்) அந்தம் (எல்லையாக இருக்கின்றவனை) சுத்தம் (மும்மலங்களும் நீங்கிய பரிசுத்தமான நிலையில்) விளங்கிய (விளங்குகின்ற) சித்த (எண்ணங்களின்) அந்தம் (எல்லையாக இருக்கின்றவனை)
நாத (நாதத்தின்) அந்தம் (எல்லையாக இருக்கின்றவனை) கண்டோர் (கண்டு தரிசித்தவர்கள்) நடுக்கு (அசைகின்ற எண்ணங்கள்) அற்ற (இல்லாமல்) காட்சியோர் (எப்போதும் தரிசித்துக் கொண்டே இருக்கின்றவர்கள்)
பூத (ஐந்து பூதங்களுக்கும்) அந்தம் (எல்லையாக இருக்கின்றவனை) போத (கற்றுக் கொடுக்கின்ற அனைத்து ஞானத்திற்கும்) அந்தம் (எல்லையாக இருக்கின்ற) ஆக (இறைவனாகவே ஆகுகின்ற) புனம் (பக்குவத்தை) செய்ய (பெறுவதற்கான செயல்களை செய்து)
நாத (நாதத்தின்) அந்தம் (எல்லையாக இருக்கின்ற இறைவனை) பூரணம் (பரிபூரணமாக உணர்ந்து கொள்பவர்களே) ஞான (பேரறிவு ஞானமாகவும்) நேயத்தரே (பேரன்பாகவும் ஒன்றாக கலந்து இருப்பவர்கள் ஆவார்கள்).
விளக்கம்:
வேதங்களின் எல்லையாக இருக்கின்றவனும் மும்மலங்களும் நீங்கிய பரிசுத்தமான நிலையில் விளங்குகின்ற எண்ணங்களின் எல்லையாக இருக்கின்றவனும் நாதத்தின் எல்லையாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனை கண்டு தரிசித்தவர்கள் அசைகின்ற எண்ணங்கள் இல்லாமல் எப்போதும் தரிசித்துக் கொண்டே இருக்கின்றவர்கள். ஐந்து பூதங்களுக்கும் எல்லையாக இருக்கின்றவனும் கற்றுக் கொடுக்கின்ற அனைத்து ஞானத்திற்கும் எல்லையாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனாகவே ஆகுகின்ற பக்குவத்தை பெறுவதற்கான செயல்களை செய்து நாதத்தின் எல்லையாக இருக்கின்ற இறைவனை பரிபூரணமாக உணர்ந்து கொள்பவர்களே பேரறிவு ஞானமாகவும் பேரன்பாகவும் ஒன்றாக கலந்து இருப்பவர்கள் ஆவார்கள்.
குறிப்பு: இறைவனை அடைந்து அவனது பேரறிவு ஞானமாகவும் பேரன்பாகவும் ஒன்றாக கலந்து இருப்பவர்களே ஞான நேயத்தர்கள் ஆவார்கள்.