பாடல் #1315: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)
பூசிக்கும் போது புவனாபதி தன்னை
யாசற் றகத்தினி லாவாகனம் பண்ணிப்
பேசிப் பிராணப் பிரதிட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியான மதுசெய்யே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பூசிககும பொது புவனாபதி தனனை
யாசற றகததினி லாவாகனம பணணிப
பெசிப பிராணப பிரதிடடை யதுசெயது
தெசுற றிடவெ தியான மதுசெயயெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பூசிக்கும் போது புவனா பதி தன்னை
ஆசு அற்று அகத்தினில் ஆவாகனம் பண்ணிப்
பேசிப் பிராணப் பிரதிட்டை அது செய்து
தேசு உற்று இடவே தியானம் அது செய்யே.
பதப்பொருள்:
பூசிக்கும் (பூஜையை) போது (செய்யும் போது) புவனா (உலகங்களுக்கு) பதி (அதிபதியாக இருக்கின்ற இறைவனையும் இறைவியையும்) தன்னை (சாதகர் தமது)
ஆசு (மனதினில் எந்த விதமான அழுக்குகளும்) அற்று (இல்லாமல் தூய்மையான) அகத்தினில் (மனதிற்குள் மானசீகமாக) ஆவாகனம் (வெளியில் இருக்கின்ற புவனாபதி சக்கரத்தின் ஆற்றலை உள்ளுக்குள் வரும்படி) பண்ணிப் (செய்து)
பேசிப் (சக்கரத்திலுள்ள மந்திர பீஜங்களை அசபையாக செபித்து) பிராணப் (மூச்சுக் காற்றின் மூலம் உயிர் கொடுத்து) பிரதிட்டை (தமக்குள் வைக்கின்ற) அது (செயலை முறைப்படி) செய்து (செய்த பிறகு)
தேசு (இறையின் பேரொளி பொருந்திய ஆற்றலை) உற்று (மனதிற்குள் வைத்த சக்கரத்தோடு) இடவே (ஒன்றாகப் பொருந்தும் படி செய்து) தியானம் (தியானத்தை) அது (முறைப்படி) செய்யே (செய்ய வேண்டும்).
விளக்கம்:
பாடல் #1314 இல் உள்ளபடி புவனாபதி சக்கரத்தை முறைப்படி வரைந்து அதற்கு பூஜைகள் செய்யும் போது உலகங்களுக்கு அதிபதியாக இருக்கின்ற இறைவனையும் இறைவியையும் சாதகர் தமது மனதினில் எந்த விதமான அழுக்குகளும் இல்லாமல் தூய்மையான மனதிற்குள் மானசீகமாக வெளியில் இருக்கின்ற புவனாபதி சக்கரத்தின் ஆற்றலை உள்ளுக்குள் வரும்படி செய்ய வேண்டும். அதன் பிறகு சக்கரத்திலுள்ள மந்திர பீஜங்களை சத்தமாக உச்சரிக்காமல் அசபையாக மனதிற்குள் செபித்து மூச்சுக் காற்றின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து தமக்குள் வைக்க வேண்டும். அதன் பிறகு இறையின் பேரொளி பொருந்திய ஆற்றலை மனதிற்குள் வைத்த சக்கரத்தோடு ஒன்றாகப் பொருந்தும் படி செய்து முறைப்படி தியானம் செய்ய வேண்டும்.
