பாடல் #1313: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)
இட்ட விதழ்க ளிடையந் தரத்திலே
யட்ட வாவிட்டதின் மேலே யுவ்விட்டுக்
கிட்ட விதழ்களின் மேலே குரோஞ்சுரோம்
விட்ட வாமாத்தாங் குரோங்கென்று மேவிடே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
இடட விதளக ளிடையந தரததிலெ
யடட வாவிடடதின மெலெ யுவவிடடுக
கிடட விதழகளின மெலெ குரொஞசுரொம
விடட வாமாததாங குரொஙகெனறு மெவிடெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
இட்ட இதழ்கள் இடை அந்தரத்திலே
அட்ட ஆ இட்டு அதன் மேலே உவ் இட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே குரோம் சுரோம்
இட்டு ஆம் ஆத்து ஆம் குரோம் என்று மேவிடே.
பதப்பொருள்:
இட்ட (ஏற்கனவே வரைந்த வட்டத்தைச் சுற்றி) இதழ்கள் (இதழ்களை வரைந்து) இடை (அதன் நடுவில்) அந்தரத்திலே (வெற்று இடத்திலே)
அட்ட (எட்டு முறை) ஆ (ஹா எனும் எழுத்தை) இட்டு (வரைந்து) அதன் (அதற்கு) மேலே (உச்சியில்) உவ் (உ எழுத்தை சேர்த்து) இட்டுக் (எழுத வேண்டும்)
கிட்ட (இப்படி நெருக்கமாக வரையப்பட்ட எட்டு) இதழ்களின் (இதழ்களுக்குள் அவை அமர்ந்திருக்கும் வட்டத்திற்கு) மேலே (மேல் இதழ்களை ஒட்டியவாறு) குரோம் (க்ரோம்) சுரோம் (ஸ்ரோம் என்ற பீஜங்களை)
இட்டு (எழுதி விட்டு அந்த இதழ்களுக்கு மேலே) ஆம் (ஹாம்) ஆத்து (ஹாத்) ஆம் (ஹாம்) குரோம் (க்ரோம்) என்று (ஆகிய பீஜங்களை) மேவிடே (எழுத வேண்டும்).
விளக்கம்:
பாடல் #1312 இல் உள்ளபடி வரைந்த பதினாறு அட்சர எழுத்துக்களைக் கொண்ட வட்டத்தைச் சுற்றி எட்டு இதழ்களை வரைந்து அந்த இதழ்களின் நடுவில் இருக்கும் வெற்று இடத்தில் எட்டு முறை ‘ஹா’ எனும் எழுத்தை வரைந்து அதற்கு உச்சியில் ‘உ’ எழுத்தை சேர்த்து எழுத வேண்டும். இப்படி நெருக்கமாக வரையப்பட்ட எட்டு இதழ்களுக்குள் அவை அமர்ந்திருக்கும் வட்டத்திற்கு மேல் இதழ்களை ஒட்டியவாறு ‘க்ரோம்’ ‘ஸ்ரோம்’ என்ற பீஜங்களை எழுதி விட்டு அந்த இதழ்களுக்கு மேலே ‘ஹாம் ஹாத்’ மற்றும் ‘ஹாம் க்ரோம்’ ஆகிய பீஜங்களை எழுத வேண்டும்.