பாடல் #1310: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)
எட்டா கியசத்தி யெட்டாகும் யோகத்துக்
கட்டாகி நாதாந்தத் தெட்டுங் கலப்பித்
தொட்டாத விந்துவுந் தானற் றொழிந்து
கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
எடடாகிய சததி யெடடாகும யொகததுக
கடடாகி நாதாநதத தெடடுங கலபபித
தொடடாத விநதுவுந தானற றெழிநது
கிடடா தொழிநதது கீழான மூடரககெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகி நாத அந்தத்து எட்டும் கலப்பித்து
ஒட்டாத விந்துவும் தான் அற்று ஒழிந்து
கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே.
பதப்பொருள்:
எட்டாகிய (எட்டு விதமாக இருக்கின்ற) சத்தி (சக்திகளே) எட்டாகும் (எட்டு விதமான) யோகத்துக் (யோகங்களின் பூரண சக்தியாக இருக்கின்றார்கள்)
கட்டாகி (இந்த எட்டு விதமான சக்திகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து) நாத (நாதமாகிய) அந்தத்து (எல்லையாக இருக்கின்ற பராசக்தியில்) எட்டும் (எட்டு சக்திகளும்) கலப்பித்து (கலந்து ஒன்றாகும் போது)
ஒட்டாத (அந்தப் பராசக்தியோடு ஒட்டாமல் தனியாக பிரிந்து நிற்கின்ற) விந்துவும் (சாதகரின் ஆன்ம ஒளியும்) தான் (தான் எனும் அகங்காரத்தை) அற்று (நீக்கி) ஒழிந்து (அழிந்து இல்லாமல் போகும்)
கிட்டாது (இந்த நிலை கிடைக்காமல்) ஒழிந்தது (அழிந்து போய்விடும்) கீழான (இறைவனைப் பற்றிய ஞானம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாத கீழ்மையான) மூடர்க்கே (முட்டாள்களுக்கு).
விளக்கம்:
பாடல் #1309 இல் உள்ளபடி சாதகர்கள் தங்களின் யோகத்தினால் அடையக் கூடிய எட்டு விதமான சித்திகளில் இருக்கின்ற எட்டு விதமான சக்திகளே எட்டு விதமான யோகங்களுக்கும் பூரண சக்திகளாக இருக்கின்றார்கள். இந்த எட்டு விதமான சக்திகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து நாத எல்லையாக இருக்கின்ற பராசக்தியோடு ஒன்றாகக் கலந்து நிற்கும் போது அவர்களோடு ஒட்டாமல் தனியாக பிரிந்து நிற்கின்ற சாதகரின் ஆன்ம ஒளியும் தான் எனும் அகங்காரம் நீங்கி அழிந்து போகும். தான் என்பது முற்றிலும் அழிந்து இறைவியோடு ஒன்றாக நிற்கின்ற இந்த நிலை இறைவனைப் பற்றிய ஞானம் கிடைத்தும் அதை சரியாகப் பயன்படுத்தாத கீழ்மையான முட்டாள்களுக்கு கிடைக்காமல் அழிந்து போகும்.