பாடல் #1308: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)
ஓரு மிதுவே யுரையுமித் தெய்வத்தைத்
தேரிற் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோண் மனவின்ப முத்தியுந்
தேரி லறியுஞ் சிவகாயந் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஒரு மிதுவெ யுரையுமித தெயவததைத
தெரிற பிறிதிலலை யானொனறு செபபககெள
வாரித திரிகொண மனவினப முததியுந
தெரி லறியுஞ சிவகாயந தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஓரும் இதுவே உரையும் இத் தெய்வத்தை
தேரில் பிறிது இல்லை யான் ஒன்று செப்பக் கேள்
வாரித் திரிகோண் மனம் இன்ப முத்தியும்
தேரில் அறியும் சிவ காயம் தானே.
பதப்பொருள்:
ஓரும் (சாதகர் தமக்குள் ஆராய்ந்து அறிகின்ற) இதுவே (இந்த புவனாபதி சக்கரமே) உரையும் (யானும் எடுத்துச் சொல்கின்ற) இத் (இந்த) தெய்வத்தை (தெய்வத்தைப் பற்றி)
தேரில் (உணர்ந்து அறிந்து கொண்டால்) பிறிது (வேறொரு தெய்வமே) இல்லை (தேவை இல்லை) யான் (யாம்) ஒன்று (ஒரு விஷயத்தை) செப்பக் (சொல்லும்படி) கேள் (கேளுங்கள்)
வாரித் (உங்களுக்கும் மானசீகமாக வருவித்த) திரிகோண் (மூன்று கோணங்களைக் கொண்ட இந்த புவனாபதி சக்கரத்தில்) மனம் (உங்களின் மனதை அசையாமல் வைத்து தியானித்தால்) இன்ப (பேரின்பமும்) முத்தியும் (முக்தியும்)
தேரில் (என்ன என்பதை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும்) அறியும் (அப்படி அறிந்து கொண்ட பிறகு) சிவ காயம் (சிவ உருவம் எது என்பதையும்) தானே (உங்களால் அறிந்து கொள்ள முடியும்).
விளக்கம்:
பாடல் #1307 இல் உள்ளபடி சாதகர்கள் தங்களுக்குள் ஆராய்ந்து அறிந்து கொண்ட மூன்று வித்தைகளால் தெரிந்து கொண்ட புவனாபதி சக்கரத்தில் வீற்றிருக்கும் இந்த தெய்வத்தைப் பற்றியே யாம் எடுத்துச் சொல்கிறோம். இந்த தெய்வத்தை முழுவதுமாக உணர்ந்து கொண்டால் வேறு ஒரு தெய்வம் எதுவும் தேவை இல்லை. யாம் சொல்கின்ற ஒரு விஷயத்தை கவனமாகக் கேளுங்கள். சாதகர்கள் தங்களுக்குள் மானசீகமாக வருவித்த மூன்று கோணங்களைக் கொண்ட இந்த புவனாபதி சக்கரத்தில் தங்களின் மனதை அசையாமல் வைத்து தியானித்தால் பேரின்பமும் முக்தியும் என்ன என்பதை முழுவதுமாக அவர்களால் அறிந்து கொள்ள முடியும். அப்படி அறிந்து கொண்ட பிறகு சிவ உருவம் எது என்பதையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியும்.