பாடல் #455: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதலைந்தும் ஈரைந்தோ டேறிப்
பொழிந்து புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.
விளக்கம்:
ஆணும் பெண்ணும் சேர்ந்த போது இருபத்தைந்து தத்துவங்களில் (பாடல் #451 இல் காண்க) ஐந்து புலன்களைத் தவிர்த்து ஆணிடமிருந்து ஐந்து ஞானேந்திரியங்களும் ஐந்து கன்மேந்திரியங்களும் சேர்ந்து பெண்ணின் கருப்பைக்குள் பனிக்குட நீரில் உருவான கருமுட்டைக்குள் ஐந்து பூதங்களும் நான்கு அந்தக் கரணங்களும் சேர்த்து கருவாகி அதன்பின் உருவம் பெறும் போது ஐந்து புலன்களும் சேர்ந்து விட மீதி இருக்கும் புருடன் மட்டும் அந்தக் கருவுடம்பின் நெற்றி உச்சியின் உள்ளே சென்று ஒளிந்து கொண்டது.
உட்கருத்து: கரு உற்பத்தியில் இருபத்தைந்து தத்துவங்களும் அடங்கியிருக்கும் முறையில் முதலில் ஆணிடமிருந்து ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் சேர்ந்து பிறகு பெண்ணின் கருப்பைக்குள் செல்லும் போது ஐந்து பூதங்களும் அந்தக் கரணங்களும் சேர்ந்து கருவிலிருந்து குழந்தையாகும் போது ஐந்து புலன்களும் சேர்ந்து அந்தக் குழந்தை பிறக்கும் போது ஆன்மா புருவ மத்தியில் சென்று மாயையால் தன்னை மறைத்துக் கொள்கின்றது. மற்ற இருபத்து நான்கு தத்துவங்களையும் உயிர்கள் அறியவும் உணரவும் முடியும். கருவில் ஐந்து புலன்கள் கிடையாது உடல் முழுமையடைந்து பிறந்த பின்பே ஐந்து புலன்களும் தன் வேலைகளை செய்யும்.