பாடல் #866: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)
காணும் பரிதியின் காலை இடத்திட்டு மாணும் மதியதன் காலை வலத்திட்டுப் பேணியே யிவ்வாறு பிழையாமற் செய்வீரேல் ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே.
விளக்கம் :
குரு கற்பித்த வழியில் தவறில்லாமல் சூரியக் கலையில் வலது பக்க மூக்கு வழியாக இயங்கும் மூச்சுக்காற்றை இடது பக்கம் இயங்கச் செய்தும் சந்திரக் கலையில் இடது பக்க மூக்கு வழியாக இயங்கும் மூச்சுக்காற்றை வலது பக்கம் இயங்கச் செய்து வந்தால் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் உடல் தளர்ச்சி அடையாமல் இருக்கும்.
சந்திர யோகம் செய்யும் யோகியர்கள் தமது குண்டலினி சக்தியை ஆறு ஆதார சக்கரங்கள் ஏழாவது சகஸ்ரதளம் எட்டாவது துவாதசாந்த வெளியைத் தாண்டிய ஒன்பதாவதான பரவெளியில் வீற்றிருக்கும் இறை சக்தியோடு கலக்கும்போது அந்த இறை சக்தியைத் தமக்குள் தேவ நாதமாக கேட்டு உணர்ந்து அந்த இறை சக்தியிலேயே மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தைத் தொடர்ந்தால் விரைவில் பரவெளியையும் தாண்டிய அண்டசராசரங்களில் இருந்து கொண்டு அனைத்து உலகங்களுக்கும் தினமும் காலையில் தோன்றி ஒளியைக் கொடுக்கின்ற மாபெரும் சூரியனைப் போன்ற இறைவனின் பேரொளி உருவத்தை தூய்மையான சங்கைப் போன்ற வெண்மை நிற ஜோதியாகத் தமக்குள் தரிசனம் செய்வார்கள்.
பாடல் #868: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும் பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும் அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப எதிரவ னீசன் இடமது தானே.
விளக்கம்:
சூரிய கலை சந்திர கலை ஆகிய இரண்டு நாடிகளும் உயிர்களின் உடலுக்கான காலத்தை அளக்கும் கருவிகளாகும். சூரிய கலை சந்திர கலை இரண்டும் தனித் தனியாக இருக்கும் வரை உயிர்கள் காலத்துக்கு கட்டுப் பட்டவையாகும். சந்திர யோகத்தால் இரு நாடிகளையும் மாற்றி சுழுமுனை வழியே மேலே கொண்டு செல்கிற யோகியின் உடலில் சூரிய கலையும் சந்திர கலையும் சகஸ்ரதளத்தில் ஒன்று சேரும் போது அங்கே அமுதம் விளையும். அங்கிருந்து தலைக்கு மேல் உள்ள துவாதசாந்த வெளியில் இறை சக்தியை ஒலியாக கேட்டு அதையும் தாண்டிய பரவெளியில் இறை சக்தியை ஒளியாக தரிசித்து அதையும் தாண்டிய அண்ட வெளியே சிவனது இருப்பிடம் என்பதை உணரலாம்.
மூலாதாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் குண்டலினியை எழுப்பி ஜோதியாக மணிப்பூரக சக்கரத்தில் செயல்பட வைத்து ஒவ்வொரு சக்கரங்களாக மேலே எழுப்பிச் சென்று சகஸ்ரதளத்தில் சேர்க்கும் சந்திரயோகப் பயிற்சிக்கு உறுதுணையாக இருக்கும் பிரணவ மந்திரத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. அந்த மந்திரத்தை குருவின் மூலம் அறிந்து உணர்ந்த யோகியர்கள் அனைத்துலகிற்கும் தந்தையான இறைவனுக்கு முன்பு மகனாக இருக்கும் தங்களின் ஆத்ம ஜோதியை தரிசிப்பார்கள்.
பாடல் #870: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)
ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும் ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள் ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல் வேதியன் அங்கே வெளிப்படுவன் தானே.
விளக்கம்:
நூல்களைக் கற்றாலும் அவற்றின் பயனை சிறிதும் உணராத அறிவிலிகள் நூல்களின் பயனை மற்றவர்கள் கூறினாலும் உணரமாட்டார்கள். குண்டலி சத்தியை அது தோன்றுகின்ற மணிபூரகத்தில் உணர்தலோடு மட்டுமில்லாது அதன் முடிவாகிய சந்திர மண்டலத்தில் சேர்த்தால் அங்கு சிவன் வெளிபடுவான்.
பாடல் #871: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)
பாம்பு மதியைத் தினலுறும் அப்பாம்பு தீங்கு கதிரையுஞ் சேரத் தினலுறும் பாம்பும் மதியும் பகைதீர்த் துடன்கொளீர் நீங்குதல் கொடானே நெடுந்தகை யானே.
விளக்கம்:
சந்திர யோகப் பயிற்சியின் மூலம் குண்டலினியாகிய பாம்பை உறக்கத்திலிருந்து எழுப்பிவிட்டால் அது நித்தமும் சந்திர கலையை உண்டு அதுவும் பத்தாதென்று சூடாகிய தீங்கைக் கொடுக்கும் சூரிய கலையையும் உண்டு வளரும். குண்டலினிக்கு இரையாக கலைகள் இருப்பதால் இரண்டும் பகையாளிகள் போல இருந்தாலும் சந்திர யோகப் பயிற்சியினால் குண்டலினியை ஒவ்வொரு மண்டலமாக மேலேற்றிச் சென்று கடைசியில் ஒன்பதாவதான பரவெளியில் இருக்கும் சந்திர மண்டலத்தோடு ஒன்று சேர்த்துவிட்டால் குண்டலினியும் கலைகளும் தமது பகையைத் தீர்த்து ஒன்றாகிவிடும். அதன் பிறகு மாபெரும் கருணையாளனான இறைவன் யோகியை விட்டு என்றும் நீங்காமல் இருப்பான்.
உட்கருத்து: சந்திர யோகப் பயிற்சியில் மூச்சுக்காற்றின் மூலமே குண்டலினியை வளர்த்து ஏழு சக்கரங்கள் எட்டாவது துவாதசாந்த வெளியைத் தாண்டிய ஒன்பதாவது பரவெளியில் இருக்கும் சந்திர மண்டலத்தோடு கலந்துவிட்டால் அதன் பிறகு யோகியர்களுக்கு மூச்சுக்காற்றோ உணவோ தேவையின்றி எவ்வளவு காலமும் இறைவனுடன் பேரின்பத்தில் இருக்கலாம்.
பாடல் #872: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)
அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப் பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று நயந்தரு பூரணை உள்ள நடத்தி வியந்தரு பூரணை மேவும் சசியே.
விளக்கம்:
குண்டலினியுடன் மேலே சென்ற சந்திரன் தலையின் மீது நிற்கும் குண்டலினியை உறங்காமல் கவனிக்கும். அதன் பின் கீழே சந்திரன் இறங்கிய போது உறங்கும். நன்மையைத் தரும் ஒளியை மனத்தில் இருக்கச் செய்தால் அப்போது முழுமையாகத் சந்திரக்கலை யோகியிடம் பொருந்தும்.
Complete Songs with their meanings from Thirumandhiram Fourth Thandhiram is given as PDF eBook in the following link for download. You can also view the actual book below that in an embedded viewer.
சந்திர யோகத்தில் குண்டலினியைச் சந்திர மண்டலத்தில் சேர்க்கும் வரையில் சோர்வு இன்றி யோகத்தில் முயன்று அதைச் சேர்த்தபின் உள் நாக்கில் பெருகும் அமிர்தத்தைப் பருகி வேறு எதுவும் தேவையின்றி மூச்சுக்காற்று சந்திர கலை இயங்காமல் சூரிய கலை இயங்கும் பொழுது உறங்குதல் வேண்டும்.
ஊழிக் காலங்கள் பல சென்றாலும் அழியாமல் உலகிலே வாழ்கின்ற யோகிகள் தாம் யோகத்தில் இருக்கின்ற நாழிகையையே தமது ஆயுளின் அளவுகோலாகக் கொண்டு எமனை எதிர்த்து நிற்பார்கள். ஆனால் சந்திர யோகத்தைப் பின்பற்றும் யோகியர்கள் ஊழிக்கு முதல்வனாய் உள்ள இறைவனே தாமாகி என்றும் இந்த உலகில் மீண்டும் வந்து பிறக்காத உயர் நிலையை அடைவார்கள்.