பாடல் #61

பாடல் #61: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

பரனாய்ப் பராபரம் காட்டி உலகின்
தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரனாய் ஆகமம் ஓங்கிநின் றானே.

விளக்கம் :

பரமாகிய சிவமும் பராவாகிய சக்தியும் சேர்ந்து பராபரமாகிய அனைத்திற்கும் மேலான சதாசிவமூர்த்தி உலகின் தலைவனாய் நின்று எல்லா உயிர்களும் இறைவனை அடைய ஆகமங்களை அருளிய நேரத்தில் அமரர்களுக்கு குருவாய் நிற்கும் இறைவனை அரன் என்று அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு ஆகமங்கள் கூறும் ஞானத்தின் மொத்த அறிவு உருவமாக உயர்ந்து நின்றான்.

பாடல் #62

பாடல் #62: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.

விளக்கம்:

பரமாகிய சிவமும் பராவாகிய சக்தியும் சேர்ந்து சதாசிவம் எனும் மாபெரும் பரம்பொருளாக விளங்கி அந்தப் பரம்பொருள் மகேசுவரன், ருத்திரன், திருமால், பிரமன், ஈசுவரன் ஆகிய ஐவர்களும் சதாசிவமூர்த்தியிடமிருந்து பெற்றது மொத்தம் ஒன்பது ஆகமங்கள் ஆகும். அந்த ஒன்பது ஆகமங்களை எங்கள் குருவான நந்தி பெற்று எமக்கு அருளினான்.

பாடல் #63

பாடல் #63: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சித்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.

விளக்கம்:

எங்கள் குருவான நந்தியிடமிருந்து பெற்ற நல்வழியைக் காட்டும் ஒன்பது ஆகமங்கள் 1. காரணம், 2. காமிகம், 3. அமையப்பெற்ற வீரம், 4. உயர்வான சித்தம், 5. வாதுளம், 6. மற்றவைகளான யாமளம், 7. அனைத்துமாகும் காலோத்தரம், 8. நிறைவுடைய சுப்பிரம், 9. சொல்லிய மகுடம் ஆகியவையாகும்.

பாடல் #64

பாடல் #64: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடின்
என்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

விளக்கம்:

உயிர்கள் தன்னை அடைய இறைவன் அருளிய சிவாகமங்களை தொகுத்தால் பல கோடிகளாக இருக்கும் என்றாலும் இறைவனை எண்ணி அவனருள் வேண்டி அவன் கொடுக்கும் ஞானத்தை வைத்து அறிந்து கொள்ளலாம். அவ்வாறு இறைவன் கொடுத்த ஞானத்தை கொண்டு ஆகமத்தை உணராமல் வெறும் வார்த்தைகளைக் கொண்டு பொருள் புரியாமல் ஓதினால் அந்த எண்ண முடியாத கோடிகள் அனைத்தும் நீர் மேல் எழுதிய எழுத்துக்கள் போல யாருக்கும் உபயோகம் இல்லாமலேயே இருக்கும்.

பாடல் #65

பாடல் #65: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொல்லிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.

விளக்கம்:

மழைக்காலம் கோடைக்காலம் பனி பெய்யும் குளிர்காலம் என எல்லாக் காலமும் ஏரிகளெல்லாம் நீர்வற்றி அனைத்தும் யுகங்களின் முடிவான ஊழிக்காலத்தில் அழியும். ஆரிய மொழியாகிய சமஸ்கிருதத்திலும் தமிழிலும் வேதங்களையும் ஆகமங்களையும் புதுயுகத்தில் பிறக்கும் உயிர்களின் தாயான உமாதேவிக்கு அந்த உயிர்கள் இறைவனை அடையும் பொருட்டு உடனே வழங்கி இறைவன் மாபெரும் கருணை செய்தான்.

பாடல் #66

பாடல் #66: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே.

விளக்கம்:

மும்மலங்கள் உயிர்களைவிட்டு விலகுகின்ற முறையையும் மும்மலங்கள் உயிர்களைக் கட்டிப்போடும் முறையையும் பந்தபாசத்தால் பிறந்த இந்த உடலைவிட்டு உயிர் பிரிந்து போகும் முறையையும் இன்னும் பலவற்றை ஆகமங்கள் கூறுகின்றன. தமிழ் மொழி சமஸ்கிருத மொழி ஆகிய இரண்டு மொழியிலும் ஆகமங்கள் கூறி உணர்த்தும் ஒரே உண்மை இறைவன் வழங்கிய ஆகமங்களை அவன் அருளாலேயே ஞானம் பெற்று உணர வேண்டும்.

பாடல் #51

பாடல் #51: பாயிரம் – 2. வேதச் சிறப்பு

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.

விளக்கம்:

வேதங்களை விட இறைவன் வழங்கிய அறம் வேறொன்றும் இல்லை. ஓதுவதற்கும் அதன்படி நடப்பதற்கும் ஏற்ற அறங்கள் எல்லாம் வேத‍த்தில் உள்ளது. நமது முன்னோரான அறிவிற் சிறந்த ஞானிகள் அனைவரும் இறைவன் வழங்கிய வேதத்தை ஏன் எதற்கு என்கிற வீண் விவாதங்கள் செய்யாமல் அனைவரும் இறைவன் வழங்கிய வேதத்தை ஓதியே முக்தியைப் பெற்றார்கள்.

பாடல் #52

பாடல் #52: பாயிரம் – 2. வேதச் சிறப்பு

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதம் விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

விளக்கம்:

வேதங்கள் ஓதுபவர்கள் அனைவரும் வேதியர்கள் ஆக மாட்டார்கள். வேதங்களின் அர்த்தங்களை உணர்ந்து அதன்படி நடப்பவர்களே உண்மையான வேதியர்கள் ஆவார்கள். இறைவன் வேதங்களை வழங்கியது உயிர்கள் அறங்களை தெரிந்து கொண்டு அதன்படி நடந்து உண்மைப் பொருளான இறைவனை உணர்ந்து மெய்ப்பொருளான இறைவனை அடைவதற்க்காகவே.

பாடல் #53

பாடல் #53: பாயிரம் – 2. வேதச் சிறப்பு

இருக்குரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.

விளக்கம்:

சொல்லழகு மிகுந்த வேதத்தின் உள்ளே மந்திர வடிவாக இருப்பவனும் உணர்ந்து வேத‍த்தை சொல்லும் வேதியர் உள்ளத்தில் உணர்வாக இருப்பவனும் வேதம் சொல்லும் வழி நடக்கும் சிறந்த வேதியர்கள் ஓதும் வேதத்தின் சொற்களில் மறைப் பொருளாகவும் அனைத்தையும் உருவாக்கிய சக்தியாக நின்று அருளுபவனும் எம்பெருமான் முக்கண் முதல்வன் சிவபெருமானே ஆவான்.

பாடல் #54

பாடல் #54: பாயிரம் – 2. வேதச் சிறப்பு

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

விளக்கம்:

இறைவனை அடைந்து முக்தி பெறும் வழிகளாகிய சித்தாந்தம் (அறிந்த கருத்துக்கள்) அசித்தாந்தம் (அறியாத கருத்துக்கள்) மற்றும் இறைவனை மனதில் எப்போதும் நினைத்து அவனை பூஜிக்கும் பெருமைக்குரிய பக்தி வழியும் குருவானவர் அருளும் மாபெரும் சிவ வழியில் ஒன்று கூடும் சன்மார்க்க வழியும் ஆகிய இவை அனைத்தும் இறைவனை அடையும் ஒரு வழியே ஆகும் என்பதையே வேதங்கள் ஓதுகின்றன.