பாடல் #1694: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)
சோதி விசாகந் தொடர்ந்திருந் தேள்நண்டு
வோதிய நாளே யுணர்வது தானென்று
நீதியு ணீர்மை நினைந்தவர்க் கல்லது
வாதியு மேது மறியகி லானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சொதி விசாகந தொடரநதிருந தெளநணடு
வொதிய நாளெ யுணரவது தானெனறு
நீதியு ணீரமை நினைநதவரக கலலது
வாதியு மெது மறியகி லானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சோதி விசாகம் தொடர்ந்து இரும் தேள் நண்டு
ஓதிய நாளே உணர்வது தான் என்று
நீதி உள் நீர்மை நினைந்தவர்க்கு அல்லது
ஆதியும் ஏதும் அறிய கிலானே.
பதப்பொருள்:
சோதி (பௌர்ணமி அன்று) விசாகம் (விசாக நட்சத்திரம் வருகின்ற நாளில் இருந்து) தொடர்ந்து (ஆரம்பித்து) இரும் (அடுத்து வருகின்ற) தேள் (விருச்சிக இராசியிலிருந்து) நண்டு (கடக இராசி வரை உள்ள நாள்களில்)
ஓதிய (குருவிடமிருந்து பெற்ற மந்திரத்தை ஓதிக் கொண்டு இருந்தால்) நாளே (ஒரு நாளில்) உணர்வது (உணர்ந்து கொள்ள முடியும்) தான் (தாமாக இருப்பது) என்று (இறைவனே என்று)
நீதி (அதன் பிறகு இதுவரை தாம் செய்கின்ற அனைத்து செயல்களுக்கு) உள் (உள்ளும்) நீர்மை (இறைவனே இருந்து செய்கின்றான் என்பதை உணர்ந்து தான் என்கின்ற தன்மை) நினைந்தவர்க்கு (இல்லாமல் இறைவனை நினைக்க முடிந்தவர்களைத்) அல்லது (தவிர வேறு யாருக்கும்)
ஆதியும் (இறைவன் முதலாகிய) ஏதும் (அனைத்து உண்மைகளையும்) அறிய (அறிந்து கொள்ளுவது) கிலானே (இயலாது).
விளக்கம்:
பௌர்ணமி அன்று விசாக நட்சத்திரம் வருகின்ற நாளில் இருந்து ஆரம்பித்து அடுத்து வருகின்ற விருச்சிக இராசியிலிருந்து கடக இராசி வரை உள்ள நாள்களில் குருவிடமிருந்து பெற்ற மந்திரத்தை ஓதிக் கொண்டு இருந்தால் ஒரு நாளில் தாமாக இருப்பது இறைவனே என்று உணர்ந்து கொள்ள முடியும். அதன் பிறகு இதுவரை தாம் செய்கின்ற அனைத்து செயல்களுக்கு உள்ளேயும் இறைவனே இருந்து செய்கின்றான் என்பதை உணர்ந்து தான் என்கின்ற தன்மை இல்லாமல் இறைவனை நினைக்க முடிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் இறைவன் முதலாகிய அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ளுவது இயலாது.