திருமந்திரத்தில் சைவம் – பகுதி 1 எனும் தலைப்பைப் பற்றி திருமந்திரத் திண்ணை எனும் குழுவில் Zoom நேரலையில் 19-08-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
Year: 2023
திருமூலர் தனது சீடர்களுடன்
திருமூலர் தனது ஏழு சீடர்களுடன் திருவாவடுதுறை கோமூக்தீஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்திருக்கும் ஓவியம். 1912 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருமந்திரம் புத்தகத்தில் உள்ளது.

திருமந்திரத்தில் சைவம் – பகுதி 2
திருமந்திரத்தில் சைவம் – பகுதி 2 எனும் தலைப்பைப் பற்றி திருமந்திரத் திண்ணை எனும் குழுவில் Zoom நேரலையில் 16-09-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
திருமந்திரத்தில் சைவம் – பகுதி 3
“திருமந்திரத்தில் சைவம் – பகுதி 3” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 22-10-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
திருமந்திரத்தில் வேடம்
“திருமந்திரத்தில் வேடம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 18-06-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
திருமந்திரத்தில் நவ குண்டம்
“திருமந்திரத்தில் நவ குண்டம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 19-02-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
தீவினைகளை நீக்கி நல்வினைகளை பெறுதல்
பாடல் #1742
பாடல் #1742: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
நாணுநல் லீசானம் நடுவுச்சி தானாகுந்
தாணுவின் றன்முகந் தற்புருட மாகுங்
காணு மகோர மிருதையங் குய்யமாம்
வாணுறு வாமமாஞ் சத்திநற் பாதமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
நாணுநல லீசானம நடுவுசசி தானாகுந
தாணுவின றனமுகந தறபுருட மாகுங
காணு மகொர மிருதையங குயயமாம
வாணுறு வாமமாஞ சததிநற பாதமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
நாணு நல் ஈசானம் நடு உச்சி தான் ஆகும்
தாணுவின் தன் முகம் தற்புருடம் ஆகும்
காணும் அகோரம் இருதையம் குய்யம் ஆம்
வாண் உறு வாமம் ஆம் சத்தி நல் பாதமே.
பதப்பொருள்:
நாணு (அறிவு வடிவமாக) நல் (நன்மையைக் கொடுக்கின்ற) ஈசானம் (இறைவனின் ஈசான முகமானது) நடு (நடுவில்) உச்சி (உச்சியாக இருக்கின்ற) தான் (இறைவியின் தலை உச்சி) ஆகும் (ஆகும்)
தாணுவின் (முக்தியாகிய நிலை பேற்றை கொடுக்கின்ற) தன் (இறைவியின்) முகம் (திருமுகமே) தற்புருடம் (இறைவனது தற்புருடமாகிய திருமுகம்) ஆகும் (ஆகும்)
காணும் (கண்களால் அருளைக் கொடுக்கின்ற) அகோரம் (இறைவனின் அகோர முகமானது) இருதையம் (இறைவியின் இருதயமாகும்) குய்யம் (இறைவியின் கீழ்) ஆம் (பகுதியாக இருப்பது)
வாண் (அமிழ்தம் பெற்று) உறு (மேல் நிலையைக் கொடுக்கின்ற) வாமம் (இறைவனின் வாமதேவ முகம்) ஆம் (ஆகும்) சத்தி (இறைவனின் சத்தியோசாத முகமானது) நல் (நன்மையைக் கொடுக்கின்ற) பாதமே (இறைவியின் திருவடிகளாகும்).
விளக்கம்:
இறைவனின் ஐந்து திருமுகங்களோடு பாடல் #1741 இல் உள்ளபடி இறைவி சென்று சேரும்போது அறிவு வடிவமாக இருக்கின்ற இறைவனின் ஈசான முகம் இறைவியின் தலை உச்சியாகவும், முக்தியாகிய நிலை பேற்றைக் கொடுக்கின்ற இறைவனது தற்புருட முகம் இறைவியின் திருமுகமாகவும், கண்களால் அருளைக் கொடுக்கின்ற இறைவனின் அகோர முகம் இறைவியின் இருதயமாகவும், அமிழ்தம் பெற்று மேல் நிலையைக் கொடுக்கின்ற இறைவனின் வாமதேவ முகம் இறைவியின் கீழ் பகுதியாகவும், நன்மையைக் கொடுக்கின்ற இறைவனின் சத்தியோசாத முகம் இறைவியின் திருவடிகளாகவும் விளங்கும்.

பாடல் #1741
பாடல் #1741: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
சத்தி தானிற்கின்ற வைமுகஞ் சாற்றிடி
லுத்தர வாம முரையற் றிருந்திடுந்
தத்துவம் புரவி தற்புருடன் சீர
மத்த வகோர மகுடத்தீசா னனே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சததி தானிறகினற வைமுகஞ சாறறிடி
லுததர வாம முரையற றிருநதிடுந
தததுவம புரவி தறபுருடன சீர
மதத வகொர மகுடததீசா னனெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சத்தி தான் நிற்கின்ற ஐம் முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரை அற்று இருந்திடும்
தத்துவம் புரவி தற்புருடன் சீரம்
அத்த அகோரம் மகுடத்து ஈசானனே.
பதப்பொருள்:
சத்தி (இயங்குகின்ற சக்தியாகிய இறைவியானவள்) தான் (தானாக) நிற்கின்ற (நிற்கின்ற அசையாத சக்தியாகிய இறைவனின்) ஐம் (ஐந்து) முகம் (முகங்களோடு) சாற்றிடில் (இணைந்து விட்டால்)
உத்தரம் (வடக்கு நோக்கி இருக்கின்ற) வாமம் (வாமதேவமாகிய திருமுகம்) உரை (பேச்சு) அற்று (இல்லாமல்) இருந்திடும் (இறைவியின் ஆற்றலுக்கு உட்பட்டு விடும்)
தத்துவம் (மேற்கு நோக்கி இருக்கின்ற சத்தியோசாதமாகிய திருமுகத்தின் தன்மையானது) புரவி (குதிரையைப் போல் விரைந்து இயங்கும்) தற்புருடன் (கிழக்கு நோக்கி இருக்கின்ற தற்புருடமாகிய திருமுகம்) சீரம் (சிகப்பான இரத்தத்தின் ஓட்டம் போல இயங்கும்)
அத்த (இறைவி இறைவனில் பாதியாகி) அகோரம் (தெற்கு நோக்கி இருக்கின்ற அகோரமாகிய திருமுகத்தில் சேர்ந்து) மகுடத்து (நடுவில் இருவரும் இணைந்து மகுடமாக மேல் நோக்கி இருக்கின்ற) ஈசானனே (ஈசானமாகிய திருமுகத்தில் வீற்றிருப்பார்கள்).
விளக்கம்:
ஆதியிலிருந்தே தானாக இருக்கின்ற அசையாத சக்தியாகிய இறைவனின் ஐந்து விதமான திருமுகங்களோடு அசையும் சக்தியாகிய இறைவி சேர்ந்து விட்டால் வடக்கு நோக்கி இருக்கின்ற வாமதேவ திருமுகம் அமைதியாகி இறைவியின் ஆற்றலுக்கு உட்பட்டு விடும். மேற்கு நோக்கி இருக்கின்ற சத்தியோசாத திருமுகம் குதிரையின் ஓட்டம் போல இயங்கும். கிழக்கு நோக்கி இருக்கின்ற தற்புருட திருமுகம் சிகப்பான இரத்த ஓட்டம் போல இயங்கும். தெற்கு நோக்கி இருக்கின்ற அகோர திருமுகத்தில் இறைவனும் இறைவியும் சரிபாதியாக இருப்பார்கள். நடுவில் மேல் நோக்கி இருக்கின்ற ஈசான திருமுகத்தில் இறைவனும் இறைவியும் இணைந்து மகுடம் போல உயர்ந்து இருப்பார்கள்.

பாடல் #1740
பாடல் #1740: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
இருளார்ந்த கண்டமு மேந்து மழுவுஞ்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையு
மருளார்ந்த சிந்தையெம் மாதிப் பிரானைத்
தெருளார்ந் தென்னுள்ளே தெளிந்திருந் தேனே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
இருளாரநத கணடமு மெநது மழுவுஞ
சுருளாரநத செஞசடைச சொதிப பிறையு
மருளாரநத சிநதையெம மாதிப பிரானைத
தெருளாரந தெனனுளளெ தெளிநதிருந தெனெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருள் ஆர்ந்த செம் சடை சோதி பிறையும்
அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதி பிரானை
தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே.
பதப்பொருள்:
இருள் (ஆலகால விஷத்தை அருந்தியதால் கருமை) ஆர்ந்த (நிறைந்த) கண்டமும் (திருக்கழுத்தும்) ஏந்து (திருக்கரத்தில் ஏந்தி இருக்கின்ற) மழுவும் (பாசங்களை அறுக்கின்ற மழுவும்)
சுருள் (சுருள்) ஆர்ந்த (நிறைந்த) செம் (செம்மையான) சடை (சடையும்) சோதி (அந்த சடையின் மேல் ஜோதியாகப் பிரகாசிக்கும்) பிறையும் (பிறை நிலாவும்)
அருள் (அருள்) ஆர்ந்த (நிறைந்த) சிந்தை (சிந்தையும் கொண்டு விளங்குகின்ற) எம் (எமது) ஆதி (ஆதிப் பரம்பொருளாகிய) பிரானை (இறைவனை)
தெருள் (தெளிவான அறிவினால்) ஆர்ந்து (ஆராய்ந்து) என் (எனக்கு) உள்ளே (உள்ளே) தெளிந்து (தெளிவாக உணர்ந்து) இருந்தேனே (இருக்கின்றேன்).
விளக்கம்:
ஆலகால விஷத்தை அருந்தியதால் கருமை நிறைந்த திருக்கழுத்தும், திருக்கரத்தில் ஏந்தி இருக்கின்ற பாசங்களை அறுக்கின்ற மழுவும், சுருள் நிறைந்த செம்மையான சடையும், அந்த சடையின் மேல் ஜோதியாகப் பிரகாசிக்கும் பிறை நிலாவும் அருள் நிறைந்த சிந்தையும் கொண்டு விளங்குகின்ற எமது ஆதிப் பரம்பொருளாகிய இறைவனை தெளிவான அறிவினால் ஆராய்ந்து எனக்கு உள்ளே தெளிவாக உணர்ந்து இருக்கின்றேன்.
