பாடல் #1350

பாடல் #1350: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஆமே சதாசிவ நாயகி யானவ
ளாமே யதோமுகத் துள்ளறி வானவ
ளாமே சுவையொளி யூரோசை கொண்டவ
ளாமே யனைத்துயிர் தன்னுளு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆமெ சதாசிவ நாயகி யானவ
ளாமெ யதொமுகத துளளறி வானவ
ளாமெ சுவையொளி யூரொசை கொணடவ
ளாமெ யனைததுயிர தனனுளு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆமே சதாசிவ நாயகி ஆனவள்
ஆமே அதோ முகத்து உள் அறிவு ஆனவள்
ஆமே சுவை ஒளி ஊறு ஓசை கொண்டவள்
ஆமே அனைத்து உயிர் தன் உளும் ஆமே.

பதப்பொருள்:

ஆமே (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் அசையும் சக்தியாகிய பரா சக்தியே) சதாசிவ (அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தியின்) நாயகி (சரி பாதியான இறைவியாகவும்) ஆனவள் (இருக்கின்றாள்)
ஆமே (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் அசையும் சக்தியாகிய பரா சக்தியே) அதோ (இறைவனின் ஐந்து முகங்களில் கீழ் நோக்கிய முகமாகிய அதோ) முகத்து (முகத்தில்) உள் (அண்ட சராசரங்களையும் அதிலுள்ள அனைத்தையும் தாங்கி இருக்கின்ற) அறிவு (அறிவாகவும்) ஆனவள் (அவளே இருக்கின்றாள்)
ஆமே (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் அசையும் சக்தியாகிய பரா சக்தியே) சுவை (புலன்களின் மூலம் உயிர்கள் உணர்கின்ற உணர்வுகளில் சுவைக்கின்ற உணர்வு) ஒளி (பார்க்கின்ற உணர்வு) ஊறு (தொடுகின்ற உணர்வு) ஓசை (கேட்கின்ற உணர்வு) கொண்டவள் (ஆகிய அனைத்து உணர்வுகளையும் அறிகின்ற உயிர்களுக்கான ஞானத்தை தனக்குள்ளே கொண்டவள்)
ஆமே (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் அசையும் சக்தியாகிய பரா சக்தியே) அனைத்து (அண்ட சராசரங்களில் உள்ள அனைத்து) உயிர் (உயிர்களையும்) தன் (தமக்கு) உளும் (உள்ளேயே தாங்கிக் கொண்டவள்) ஆமே (ஆகவும் இருக்கின்றாள்).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் அசையும் சக்தியாகிய பரா சக்தியே அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தியின் சரி பாதியான இறைவியாக இருக்கின்றாள். அவளே இறைவனின் ஐந்து முகங்களில் கீழ் நோக்கிய முகமாகிய அதோ முகத்தில் அண்ட சராசரங்களையும் அதிலுள்ள அனைத்தையும் தாங்கி இருக்கின்ற அறிவாகவும் இருக்கின்றாள். அவளே புலன்களின் மூலம் உயிர்கள் உணர்கின்ற உணர்வுகளில் சுவைக்கின்ற உணர்வு, பார்க்கின்ற உணர்வு, தொடுகின்ற உணர்வு, கேட்கின்ற உணர்வு ஆகிய அனைத்து உணர்வுகளையும் அறிகின்ற உயிர்களுக்கான ஞானத்தை தனக்குள் கொண்டிருக்கின்றாள். அவளே அண்ட சராசரங்களில் உள்ள அனைத்து உயிர்களையும் தனக்குள் தாங்கிக் கொண்டு இருக்கின்றாள்.

திருமூலர் அபிசேகம் ஆராதனை

2022 வருட பிறப்பை முன்னிட்டு திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள திருமூலர் சந்நிதியில் நடைபெற்ற அபிசேகம் மற்றும் ஆராதனை.