பாடல் #1066

பாடல் #1066: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

நின்றா ளவன்ற னுடலு முயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக வென்னுட் புகுந்துணர் வாகியே
நின்றாள் பரஞ்சுட ரேடங்கை யாளே.

விளக்கம்:

பாடல் #1065 இல் உள்ளபடி மூன்று மண்டலங்களிலும் நிறைந்து நிற்கின்ற திரிபுரை சக்தியானவள் இறைவனோடு ஒன்றாக சேர்ந்து எமக்குள் உடலாகவும் உயிராகவும் உணர்வாகவும் இருக்கின்றாள். அதுபோலவே அனைத்து உயிர்களிலும் இருக்கின்றாள். இவள் இறைவனை அடையும் சிவகதிக்கான வழியைக் கொடுக்கும் ஞானத்தின் மொத்த உருவமாக பராசக்தி எனும் பெயருடனும் சிவகதியை சொல்கின்ற அனைத்து சொற்களாகவும் இருக்கின்றாள்.

குறிப்பு: ஏடங்கை (ஏடு ஏந்திய கை) என்பது எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட அனைத்து வார்த்தைகளாகவும் இருப்பவள் என்று பொருள்.

பாடல் #1067

பாடல் #1067: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

ஏடங்கை நங்கை யிறைஎங்கண் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடுந் திருமுறை பார்ப்பனி பாதங்கள்
சூடுமென் சென்னிவாய்த் தோத்திரஞ் சொல்லுமே.

விளக்கம்:

பாடல் #1066 இல் உள்ளபடி சிவகதியைச் சொல்கின்ற அனைத்து சொற்களாகவும் இருக்கின்ற திரிபுரை சக்தியே எங்கள் இறைவியாகும். அவள் மூன்று கண்களை உடையவள். உருவமில்லாத அவளே படிகம் போன்ற ஊடுருவிப் பார்க்கும் திருமேனியை விரும்பி வெள்ளைத் தாமரையில் அமர்ந்து கொண்டு எப்போதும் வேதங்களை ஓதிக் கொண்டிருக்கும் பிரம்மனின் தேவியான சரஸ்வதியாக இருக்கின்றாள். இவளது திருப்பாதங்களை தரிசித்து எமது தலைமேல் தாங்கி அவளின் தோத்திரங்களை எப்போதும் எமது வாய் சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

கருத்து:

திரிபுரை சக்தியானவள் பிரம்மனின் தேவியான சரஸ்வதி எனும் பெயருடன் உயிர்கள் வாழும் வாழ்க்கைக்குத் தேவையான அறிவைக் (கல்வி) கொடுத்து அருளுவதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். முக்கண்ணி என்பது மூன்று காலங்களையும் பார்க்கின்ற இறைவியானவள் உயிர்களின் சென்ற பிறவிகளின் கர்மங்களைப் பார்த்து இந்த பிறவியை படைப்பதையும் இந்தப் பிறவியின் கர்மங்களைப் பார்த்து பின்பு வரும் பிறவிகளை தீர்மானித்து சிவகதியை அடைய வைப்பதையும் குறிக்கின்றது. வெள்ளைத் தாமரையில் அமர்ந்திருக்கும் படிகம் போன்ற உருவம் என்பது தூய்மையான எண்ணங்களுடன் அனைத்தையும் ஊடுருவிப் பார்க்கின்ற ஞானத்தின் உருவமாக இருப்பதைக் குறிக்கின்றது. திருமுறை பாடும் பார்ப்பனி என்பது உயிர்கள் சிவகதி அடைவதற்கு தமது கர்மங்களைத் தீர்க்க பல பிறவிகளை எடுக்க வேண்டும் என்பதற்காக வேதங்களை ஓதிக்கொண்டே படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவும் அவருக்கு சக்தியாக சரஸ்வதியும் இருப்பதைக் குறிக்கின்றது.

பாடல் #1068

பாடல் #1068: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

தோத்திரஞ் செய்து தொழுது துணையடி
வாய்த்திட வேத்தி வழிபடு வாரிரும்
பார்த்திடு மங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூம்பிள்ளை யாகுமாம் ஆதிக்கே.

விளக்கம்:

பாடல் #1067 இல் உள்ளபடி தோத்திரங்களை சொல்லி யாம் வழிபடும் திரிபுரை சக்தியின் திருவடிகளை யாரெல்லாம் போற்றி வழிபடுகிறார்களோ அவர்களுக்குத் துணையாக திரிபுரை இருக்கின்றாள். அவள் தனது திருக்கரங்களில் வில்லைப் போன்ற கரும்பையும் இரும்பாலான அங்குசத்தையும் பாசக் கயிறையும் வைத்துக் கொண்டு மென்மையான திருமேனியைக் கொண்ட ஆதிசக்தியாக இருக்கின்றாள்.

கருத்து:

திரிபுரை சக்தியானது சரஸ்வதி எனும் பெயருடன் உயிர்களின் வாழ்க்கைக்குத் தேவையான அறிவைக் (கல்வி) கொடுத்து துணையாக இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். வில்லைப் போன்ற கரும்பு மாயையை அழித்தலையும், பாசக் கயிறு மாயையால் மறைத்தலையும், அங்குசம் அடியவர்கள் மாயையில் சிக்கித் தவிக்கும் போது தடுப்பதையும் குறிக்கின்றது.

பாடல் #1069

பாடல் #1069: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

ஆதி விதமிகுத் தண்டந்த மாலங்கை
நீதி மலரின்மே னேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேற்
சோதி மிகுத்துமுக் காலமுந் தோன்றுமே.

விளக்கம்:

ஆதியாக இருக்கும் திரிபுரை சக்தி பல விதங்களில் நிறைந்து இருக்கும் அண்டத்திலுள்ள அனைத்தையும் காத்து அருளுகின்ற திருமாலின் தங்கை என்று அழைக்கப்படுகின்ற பார்வதி தேவி அடியவர்களின் மனசாட்சியாக இருக்கும் நெஞ்சத் தாமரையில் அமர்ந்திருக்கிறாள். அவளின் திருநாம மந்திரத்தை அந்தத் தாமரைக்கு நடுவில் மானசீகமாக வைத்து அந்த மந்திரத்தை செபித்து வரும் அடியவர்களின் உள்ளொளி பெருகி முக்கால ஞானமும் அவர்களுக்கு கிடைத்துவிடும்.

குறிப்பு: திரிபுரை சக்தியாக இருக்கும் பார்வதி தேவியை வழிபடுபவர்கள் தங்களது குருவின் மூலம் அவளின் திருநாம மந்திரத்தை மந்திர தீட்சையாகப் பெற்று செபிக்க வேண்டும். அவ்வாறு செபிப்பவர்களுக்கு மூன்று காலங்களிலும் நடப்பவற்றை அறிந்து கொள்ளும் ஞானம் கிடைக்கும்.

பாடல் #1070

பாடல் #1070: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

மேதாதி யீரெட்டு மாகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே.

விளக்கம்:

உடலை இயக்குகின்ற மேதை முதலான பதினாறு கலைகளாக இருந்து அனைத்தையும் இயக்குகின்ற மென்மையான இயல்பைக் கொண்ட வேதங்கள் கூறும் பராபரை என்பவள் திரிபுரை சக்தியாகும். அவளே அனைத்திற்கும் ஆதாரமாக இருந்து எங்கும் பரந்து வியாபித்து இருப்பவள். அவளே நாதத்தின் முதலாகிய இறைவனுடன் சேர்ந்து நல்லருளைத் தருகிறாள்.

குறிப்பு: பதினாறு கலைகள் என்பது உயிர்களின் உடலின் இயக்கத்திற்கு காரணமாக இருக்கின்றது. அவை கீழ்வருமாறு:

  1. மேதைக்கலை
  2. அருக்கீசக்கலை
  3. விடக்கலை
  4. விந்துக்கலை
  5. அர்த்தசந்திரன் கலை
  6. நிரோதினிக்கலை
  7. நாதக்கலை
  8. நாதாந்தக்கலை
  9. சக்திக்கலை
  10. வியாபினிக்கலை
  11. சமனைக்கலை
  12. உன்மனைக்கலை
  13. வியோமரூபினிக்கலை
  14. அனந்தைக்கலை
  15. அனாதைக்கலை
  16. அனாசிருதைக்கலை

பாடல் #1071

பாடல் #1071: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப்
பொருளுற்றுச் சேவடி போற்றுவன் யானே.

விளக்கம்:

பாடல் #1070 இல் உள்ளபடி திரிபுரை சக்தி கொடுத்த நல்லருளைப் பெற்று உணர்ந்தவர்கள் அதை எடுத்துச் சொல்லும் போது அதைக் கேட்கும் மனிதர்களே நீங்கள் கேட்டதை உணர்ந்து உலகப் பொருட்களைப் பற்றிக் கொண்டு மாயையில் மயங்கி இருக்கும் உங்களுடைய சிந்தனையை மாற்றி உலகங்கள் அனைத்தையும் இயக்குகின்ற திரிபுரை சக்தியின் தலைவனாகவும் அடியவர்கள் வணங்கிப் போற்றும் உண்மைப் பொருளாகவும் இருக்கும் இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு அவனது திருவடிகளையே போற்றி வணங்கும் என்னோடு சேர்ந்து போற்றி வணங்குங்கள்.

பாடல் #1072

பாடல் #1072: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

ஆன வராக முகத்தி பதத்தினள்
ஈன வராக மிடிக்கு முசலத்தொ
டேனை யுழுபடை ஏந்திய வெண்ணகை
ஊன மறவுணர்ந் தாருள்ளத் தோங்குமே.

விளக்கம்:

பாடல் #1071 இல் உள்ளபடி இறைவனின் திருவடிகளைப் போற்றி வணங்குபவர்களின் உள்ளத்தில் திரிபுரை சக்தியானவள் வராஹி எனும் பெயர் கொண்டு பன்றியின் முகத்தோடும் அதற்கேற்ற திருவடிகளோடும் வந்து கீழ்மையான எண்ணத்தை இடித்து மாற்றுகின்ற இரும்பு உலக்கையையும் அந்த எண்ணத்தை சீர்படுத்த உழுகின்ற ஏர் கலப்பையையும் மனதை ஒருநிலைப் படுத்துகின்ற வெண்மையான சங்கையும் கைகளில் ஏந்தி இருக்கின்றாள். அவளின் உருவத்தை மறந்து உருவமற்ற திரிபுரை சக்தியை உணர்ந்தவர்களின் உள்ளத்தில் அவள் ஓங்கி நிற்கின்றாள்.

கருத்து: திரிபுரை சக்தியானது அடியவர்களின் உள்ளத்தில் வராஹி எனும் உருவத்தில் ஓங்கி நிற்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். திரிபுரை சக்தியைப் போற்றி வணங்குபவர்களின் உள்ளத்தில் அவள் வராஹி உருவம் கொண்டு வந்து தனது கைகளிலுள்ள இரும்பு உலக்கையால் கீழ்மையான எண்ணங்களை இடித்து அதை ஏர் கலப்பையால் சீர்படுத்தி அவர்களின் மனதை வெண்மையான சங்கினால் ஒருநிலைப் படுத்தி அவர்களின் உள்ளத்தில் ஓங்கி நிற்கின்றாள்.

பாடல் #1073

பாடல் #1073: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

ஓங்காரி யென்பா ளவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்
ஆங்காரி யாகியே யைவரைப் பெற்றிட்டு
ரீங்காரத் துள்ளே யினிதுஇருந் தாளே.

விளக்கம்:

பாடல் #1072 இல் உள்ளபடி அனைத்திலும் ஓங்கி நிற்கின்ற திரிபுரை சக்தியானவள் ஒரு பெண் பிள்ளையாக இருக்கின்றாள். அவள் என்றுமே நீங்காத பச்சை நிறத்தை உடையவள். அவளே அனைத்திலும் மேலானவளாக நின்று ஐந்து தேவர்களான பிரம்மன் விஷ்ணு உருத்திரன் மகேஸ்வரன் சதாசிவன் ஆகியோரை படைத்து அவர்களின் செயல்களாகவே எப்போதும் இனிமையுடன் இருக்கின்றாள்.

கருத்து: திரிபுரை சக்தியானவள் ஐந்து தேவர்களின் செயல்களாக இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். பெண் பிள்ளை என்பது திரிபுரை தனக்கு என்று எதுவும் செய்யாமல் அனைவருக்கும் தேவையானதை எப்போதும் செய்கின்றவளாக இருப்பதைக் குறிக்கின்றது. நீங்காத பச்சை நிறத்தை உடையவள் என்பது எப்போதும் இளமையாகவே இருப்பதைக் குறிக்கின்றது. ரீங்காரத்தின் உள்ளே என்பது நிற்காமல் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் சக்தியைக் குறிக்கின்றது. இனிது இருந்தாள் என்பது அவள் செய்யும் அனைத்து செயல்களும் நன்மையாகவே இருப்பதைக் குறிக்கின்றது.

பாடல் #1074

பாடல் #1074: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

தானே தலைவி யெனநின்ற தற்பரை
தானே யுயிர்வித்துத் தந்த பதினாலும்
வானோர் தலமு மனமுநற் புத்தியுந்
தானே சிவகதித் தன்மையு மாமே.

விளக்கம்:

பாடல் #1073 இல் உள்ளபடி நன்மையாகவே இருக்கும் திரிபுரை சக்தியானவள் அனைத்திற்கும் தலைவியாக ஆதியிலிருந்தே தானாகவே நிற்கின்ற அசையும் சக்தியாகும். அவளே பதினான்கு உலகங்களையும் படைத்து அவற்றிற்கு உயிரூட்டினாள். அவளே தேவர்களின் உலகலமாகவும் உயிர்களின் மனமாகவும் நல்ல புத்தியுமாகவும் இருக்கின்றாள். அடியவர்கள் சென்று அடையும் சிவகதியாகவும் அவளே இருக்கின்றாள்.

பாடல் #1027

பாடல் #1027: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

மாட்டிய குண்டத்தி னுள்ளெழு வேதத்துள்
ஆட்டிய காலொன் றிரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழ
நாட்டுஞ் சுரரிவர் நல்லொளி தானே.

விளக்கம்:

நவகுண்டத்தினுள் எழும் அக்னியுடன் ஓதுகின்ற மந்திரங்களும் ஒன்றாக சேர்ந்து எழும்புகின்றது. அவ்வாறு எழும்புகின்ற அக்னி அடியும் முடியுமாக (நெருப்புச் சுடரின் அடிப்பாகமும் உச்சியும்) இரண்டாக குண்டத்தினுள்ளே அலைகின்றது. அவ்வாறு அலைகின்ற அக்னி ஒரு கையாகவும் காற்று ஒரு கையாகவும் ஆகிய இரண்டு கைகளும் ஒன்றாகச் சேர்ந்து விரைவாக எரிகின்றது. அப்படி விரைந்து எரியும் அக்னியில் நல்ல ஒளியாய் தேவர்கள் வந்து நின்று நல்லாசிகள் வழங்குவார்கள்.