பாடல் #1337

பாடல் #1337: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

மெல்லிய லாகிய மெய்ப்பொரு டாடன்னைச்
சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும்
பல்லியல் பாகப் பரந்தெழு நாள்பல
நல்லியல் பாக நடந்திடுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெலலிய லாகிய மெயபபொரு டாடனனைச
சொலலிய லாலெ தொடரநதங கிருநதிடும
பலலியல பாகப பரநதெழு நாளபல
நலலியல பாக நடநதிடுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மெல் இயல் ஆகிய மெய் பொருள் ஆள் தன்னை
சொல் இயல் ஆலே தொடர்ந்து அங்கு இருந்திடும்
பல் இயல்பு ஆகப் பரந்து எழும் நாள் பல
நல் இயல்பு ஆக நடந்திடும் தானே.

பதப்பொருள்:

மெல் (மென்மையான) இயல் (தன்மையைக்) ஆகிய (கொண்டு) மெய் (உண்மைப்) பொருள் (பொருளின்) ஆள் (உருவமாகவே விளங்குகின்ற) தன்னை (இறைவியானவள்)
சொல் (சாதகர் குருவிடமிருந்து பெற்ற மந்திரங்களை செபிக்கும்) இயல் (தன்மைக்கு) ஆலே (ஏற்ற படியே) தொடர்ந்து (சாதகரைத் தொடர்ந்து) அங்கு (அவர் இருக்கும் இடத்திலேயே அவருடன் சேர்ந்து) இருந்திடும் (வீற்றிருப்பாள்)
பல் (அதன் பிறகு நல் வினை தீய வினை ஆகியவற்றால் பல) இயல்பு (விதங்கள்) ஆகப் (ஆகவே) பரந்து (உலகம் முழுவதும் பரந்து விரிந்து) எழும் (சாதகருக்குள்ளிருந்து எழுந்து செல்லும் சக்தியானது) நாள் (கடந்து செல்கின்ற நாள்கள்) பல (பலவற்றையும் / பல காலங்களையும்)
நல் (நல் வினை கொண்ட) இயல்பு (தன்மை) ஆக (ஆகவே மாற்றி) நடந்திடும் (அனைத்தும் நன்மையாகவே நடக்கும்படி) தானே (அருளும்).

விளக்கம்:

பாடல் #1336 இல் உள்ளபடி மென்மையான தன்மையைக் கொண்டு உண்மைப் பொருளின் உருவமாகவே விளங்குகின்ற இறைவியானவள் சாதகர் குருவிடமிருந்து பெற்ற மந்திரங்களை செபிக்கும் தன்மைக்கு ஏற்ற படியே சாதகரைத் தொடர்ந்து அவர் இருக்கும் இடத்திலேயே அவருடன் சேர்ந்து வீற்றிருப்பாள். அதன் பிறகு சாதகருக்குள்ளிருந்து எழுந்து உலகம் முழுவதும் பரந்து செல்லும் சக்தியானது நல் வினை தீய வினை ஆகியவற்றால் பல விதமாகக் கடந்து செல்கின்ற பல நாள்களையும் நல் வினை கொண்ட நாட்களாகவே மாற்றி அனைத்தும் நன்மையாகவே நடக்கும்படி அருளும்.

பாடல் #1338

பாடல் #1338: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நடந்திடு நாவினினு ண்மைக ளெல்லாந்
தொடர்ந்திடுஞ் சொல்லொடுஞ் சொற்பொரு டானுங்
கடந்திடுங் கல்விக் கரசிவ னாகப்
படர்ந்திடும் பாரிற் பகையில்லைத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நடநதிடு நாவினினு ணமைக ளெலலாந
தொடரநதிடுஞ சொலலொடுஞ சொறபொரு டானுங
கடநதிடுங கலவிக கரசிவ னாகப
படரநதிடும பாரிற பகையிலலைத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நடந்திடும் நாவினில் உண்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லோடும் சொற் பொருள் தானும்
கடந்திடும் கல்விக்கு அரசு இவன் ஆகப்
படர்ந்திடும் பாரில் பகை இல்லை தானே.

பதப்பொருள்:

நடந்திடும் (அனைத்தும் நன்மையாகவே நடந்து கொண்டு இருக்கின்ற) நாவினில் (சாதகரின் நாக்கில்) உண்மைகள் (உண்மை என்று அறியப்படும் சத்தியங்கள்) எல்லாம் (அனைத்தும் கிடைக்கப் பெறும்)
தொடர்ந்திடும் (அதன் பிறகு சாதகரைத் தொடர்ந்து வருகின்ற) சொல்லோடும் (அவர் சொல்லுகின்ற அனைத்து) சொற் (வார்த்தைகளும்) பொருள் (உடனே உண்மைப் பொருளாக) தானும் (மாறி உண்மையாகவே ஆகிவிடும்)
கடந்திடும் (அவரது நாக்கை கடந்து செல்கின்ற அனைத்து விதமான) கல்விக்கு (கல்விக்கும் / ஞானத்திற்கும்) அரசு (அரசனாகவே) இவன் (சாதகரும்) ஆகப் (ஆகி விடுவார்)
படர்ந்திடும் (அதன் பிறகு படர்ந்து விரிந்து இருக்கும் இந்த) பாரில் (உலகத்தில்) பகை (பகை என்று அறியப்படுகின்ற மும்மலங்கள், பசி, தாகம், தூக்கம் ஆகிய எதுவும்) இல்லை (சாதகருக்கு இல்லாமல்) தானே (போய் விடும்).

விளக்கம்:

பாடல் #1337 இல் உள்ளபடி அனைத்தும் நன்மையாகவே நடந்து கொண்டு இருக்கின்ற சாதகரின் நாக்கில் உண்மை என்று அறியப்படும் சத்தியங்கள் அனைத்தும் கிடைக்கப் பெறும். அதன் பிறகு சாதகர் சொல்கின்ற அனைத்து வார்த்தைகளும் அவரது சொல்லைத் தொடர்ந்து உடனே உண்மையாகவே ஆகி செயல்படும். அதனால் அவரது நாக்கிலிருந்து வருகின்ற அனைத்து விதமான சொற்களாகிய ஞானத்திற்கும் அரசனாகவே சாதகரும் ஆகிவிடுவார். அதன் பிறகு படர்ந்து விரிந்து இருக்கும் இந்த உலகத்தில் பகை என்று அறியப்படுகின்ற மும்மலங்கள், பசி, தாகம், தூக்கம் ஆகிய எதுவும் சாதகருக்கு இல்லாமல் போய் விடும்.

பாடல் #1339

பாடல் #1339: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பகையில்லைக் கௌமுத லைந்து மேலாகு
நகையில்லைச் சக்கர நன்றறி வார்க்குத்
தொகையில்லைச் சொல்லிய பல்லுயி ரெல்லாம்
வகையில்லை யாக வணங்கிடுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பகையிலலைக கௌமுத லைநது மெலாகு
நகையிலலைச சககர நனறறி வாரககுத
தொகையிலலைச சொலலிய பலலுயி ரெலலாம
வகையிலலை யாக வணஙகிடுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பகை இல்லை கௌ முதல் ஐந்தும் மேல் ஆகும்
நகை இல்லை சக்கரம் நன்று அறிவார்க்கு
தொகை இல்லை சொல்லிய பல் உயிர் எல்லாம்
வகை இல்லை ஆக வணங்கிடும் தானே.

பதப்பொருள்:

பகை (இந்த உலகத்தில் பகை என்று அறியப்படுகின்ற எதுவும்) இல்லை (சாதகருக்கு இல்லை) கௌ (நிலம்) முதல் (முதலாகிய) ஐந்தும் (ஐந்து பூதங்களால் ஆகிய அவரது உடலும்) மேல் (மேன்மை) ஆகும் (நிலை பெறும்)
நகை (இந்த உலகத்தில் இழிவானது என்று அறியப்படுகின்ற எதுவும்) இல்லை (இல்லாமல் போய்விடும்) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தை) நன்று (தமக்குள் மிகவும் நன்றாக) அறிவார்க்கு (அறிந்து கொண்டவர்களுக்கு)
தொகை (ஒரு கூட்டமாகவும்) இல்லை (இல்லாமல்) சொல்லிய (சொல்லப்படுகின்ற) பல் (அனைத்து வகையான) உயிர் (உயிர்கள்) எல்லாம் (எல்லாவற்றையும்)
வகை (பல வகைகளாகப் பிரித்து பார்ப்பதும்) இல்லை (இல்லாமல் அனைத்தையும் இறைவனாகவே பார்க்கின்ற சாதகரை) ஆக (இறைவியாகவே) வணங்கிடும் (அனைத்து உயிர்களும் வணங்கி) தானே (அன்பு செலுத்தும்).

விளக்கம்:

பாடல் #1338 இல் உள்ளபடி இந்த உலகத்தில் பகை என்று அறியப்படுகின்ற எதுவும் இல்லாத சாதகரின் நிலம் முதலாகிய ஐந்து பூதங்களால் ஆகிய உடலும் மேன்மை நிலை பெறும். இந்த உலகத்தில் இழிவானது என்று அறியப்படுகின்ற எதுவும் நவாக்கிரி சக்கரத்தை தமக்குள் மிகவும் நன்றாக அறிந்து கொண்ட சாதகர்களுக்கு இல்லாமல் போய்விடும். உயிர்கள் என்று உலகத்தவர்களால் சொல்லப்படுகின்ற அனைத்து வகையான உயிர்களையும் ஒரு கூட்டமாகவும் இல்லாமல் பல வகைகளாகப் பிரித்து பார்ப்பதும் இல்லாமல் அனைத்தையும் இறைவனாகவே பார்க்கின்ற சாதகர்களை அனைத்து உயிர்களும் இறைவியாகவே போற்றி வணங்கி அன்பு செலுத்தும்.

திருமந்திரத்தில் கேள்வி கேட்டு அமைதல்

திருமந்திரம் முதல் தந்திரத்தில் 21 ஆவதாக உள்ள “கேள்வி கேட்டு அமைதல்” தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 22-08-2021 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமூலர் – வரலாறு

திருமூலர் வாழ்க்கை வரலாறைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் 19-06-2021 அன்று Zoom நேரலையில் நிகழ்த்திய கலந்துரையாடல்.

பாடல் #1307

பாடல் #1307: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ககராதி யோரைந்துங் காணிய பொன்மை
யகராதி யோரக் கரத்தமே போலுஞ்
சகராதி நாலஞ்சு தான்சுத்த வெண்மை
மகராதி மூவித்தை காமிய முத்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காரதி யொரைநதுங காணிய பொனமை
யகராதி யொர ககரததமெ பொலுஞ
சராதி நாலஞசு தானசுதத வெணமை
மகராதி மூவிததை காமிய முததியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ககர ஆதி ஓர் ஐந்தும் காணிய பொன்மை
அகர ஆதி ஓர் அக் அரத்தமே போலும்
சகர ஆதி நால் அஞ்சு தான் சுத்த வெண்மை
மகர ஆதி மூவித்தை காமிய முத்தியே.

பதப்பொருள்:

ககர (ககாரம் / க எழுத்து) ஆதி (எழுத்திற்கு மூலமாக இருக்கின்ற) ஓர் (ஒரு) ஐந்தும் (ஐந்து எழுத்துக்களும்) காணிய (தங்களுக்குள் தரிசித்தால்) பொன்மை (அவை பொன் நிறத்தில் இருக்கும்)
அகர (அகாரம் / அ எழுத்து) ஆதி (எழுத்திற்கு மூலமாக இருக்கின்ற) ஓர் (ஒரு) அக் (சுத்த) அரத்தமே (சிவப்பு நிறமே) போலும் (போல இருக்கும்)
சகர (சகாரம் / ச எழுத்து) ஆதி (எழுத்திற்கு மூலமாக இருக்கின்ற) நால் அஞ்சு (நான்கும் ஐந்தும் பெருக்கி வரும் இருபது எழுத்துக்களும்) தான் (தமது தன்மையில்) சுத்த (சுத்தமான) வெண்மை (வெள்ளை நிறத்தில் இருக்கும்)
மகர (உயிர்களுக்கு) ஆதி (ஆதியிலிருந்தே தொடர்ந்து வருகின்ற) மூவித்தை (படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்றின் பிறவிச் சுழற்சியில் சிக்கி இருக்கும் சுத்த வித்தையிலிருந்து மேலுள்ள மந்திரங்களைத் ஞானமாகத் தெரிந்து கொள்கின்ற அபர வித்தை பெற்று அதன் பிறகு அதை தமக்குள்ளேயே அனுபவ பூர்வமாக உணருகின்ற பர வித்தையைப் பெற்றால்) காமிய (ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற அனைத்து கர்மங்களும் அழிந்து) முத்தியே (முத்தியை இறையருளால் அடையலாம்).

விளக்கம்:

ககர எழுத்திற்கு (க) மூலமாக இருக்கின்ற ஐந்து எழுத்துக்களையும் சாதகர்கள் தங்களுக்குள் தரிசித்துப் பார்த்தால் அவை பொன் நிறத்தில் இருக்கும். அது போலவே இரண்டாவது எழுத்தான அகர எழுத்திற்கு (அ) மூலமாக இருக்கின்ற எழுத்துக்கள் அனைத்துமே சுத்தமான சிவப்பு நிறத்தில் இருக்கும். அது போலவே மூன்றாவது எழுத்தான சகர எழுத்திற்கு (ச) மூலமாக இருக்கின்ற இருபது எழுத்துக்களும் சுத்தமான வெள்ளை நிறத்தில் இருக்கும். உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கின்ற புவனாபதி சக்கரத்தில் இருக்கின்ற இந்த மூன்று எழுத்துக்களையும் அதன் மூல எழுத்துக்களாகிய இருபத்தாறு எழுத்துக்களையும் மானசீகமாகத் தமக்குள் தரிசிக்கும் சாதகர்களுக்கு ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்றின் பிறவிச் சுழற்சியில் சிக்கி இருக்கும் சுத்த வித்தையிலிருந்து இந்த மூன்று எழுத்துக்களையும் ஞானமாகத் தெரிந்து கொள்கின்ற அபர வித்தை பெற்று அதன் பிறகு அதை தமக்குள்ளேயே அனுபவ பூர்வமாக உணருகின்ற பர வித்தையைப் பெற்றால் ஆதியிலிருந்தே தம்மைத் தொடர்ந்து வருகின்ற அனைத்து கர்ம வினைகளும் நீங்கி முக்தியை இறையருளால் அடைவார்கள்.

பாடல் #1308

பாடல் #1308: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ஓரு மிதுவே யுரையுமித் தெய்வத்தைத்
தேரிற் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோண் மனவின்ப முத்தியுந்
தேரி லறியுஞ் சிவகாயந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒரு மிதுவெ யுரையுமித தெயவததைத
தெரிற பிறிதிலலை யானொனறு செபபககெள
வாரித திரிகொண மனவினப முததியுந
தெரி லறியுஞ சிவகாயந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஓரும் இதுவே உரையும் இத் தெய்வத்தை
தேரில் பிறிது இல்லை யான் ஒன்று செப்பக் கேள்
வாரித் திரிகோண் மனம் இன்ப முத்தியும்
தேரில் அறியும் சிவ காயம் தானே.

பதப்பொருள்:

ஓரும் (சாதகர் தமக்குள் ஆராய்ந்து அறிகின்ற) இதுவே (இந்த புவனாபதி சக்கரமே) உரையும் (யானும் எடுத்துச் சொல்கின்ற) இத் (இந்த) தெய்வத்தை (தெய்வத்தைப் பற்றி)
தேரில் (உணர்ந்து அறிந்து கொண்டால்) பிறிது (வேறொரு தெய்வமே) இல்லை (தேவை இல்லை) யான் (யாம்) ஒன்று (ஒரு விஷயத்தை) செப்பக் (சொல்லும்படி) கேள் (கேளுங்கள்)
வாரித் (உங்களுக்கும் மானசீகமாக வருவித்த) திரிகோண் (மூன்று கோணங்களைக் கொண்ட இந்த புவனாபதி சக்கரத்தில்) மனம் (உங்களின் மனதை அசையாமல் வைத்து தியானித்தால்) இன்ப (பேரின்பமும்) முத்தியும் (முக்தியும்)
தேரில் (என்ன என்பதை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும்) அறியும் (அப்படி அறிந்து கொண்ட பிறகு) சிவ காயம் (சிவ உருவம் எது என்பதையும்) தானே (உங்களால் அறிந்து கொள்ள முடியும்).

விளக்கம்:

பாடல் #1307 இல் உள்ளபடி சாதகர்கள் தங்களுக்குள் ஆராய்ந்து அறிந்து கொண்ட மூன்று வித்தைகளால் தெரிந்து கொண்ட புவனாபதி சக்கரத்தில் வீற்றிருக்கும் இந்த தெய்வத்தைப் பற்றியே யாம் எடுத்துச் சொல்கிறோம். இந்த தெய்வத்தை முழுவதுமாக உணர்ந்து கொண்டால் வேறு ஒரு தெய்வம் எதுவும் தேவை இல்லை. யாம் சொல்கின்ற ஒரு விஷயத்தை கவனமாகக் கேளுங்கள். சாதகர்கள் தங்களுக்குள் மானசீகமாக வருவித்த மூன்று கோணங்களைக் கொண்ட இந்த புவனாபதி சக்கரத்தில் தங்களின் மனதை அசையாமல் வைத்து தியானித்தால் பேரின்பமும் முக்தியும் என்ன என்பதை முழுவதுமாக அவர்களால் அறிந்து கொள்ள முடியும். அப்படி அறிந்து கொண்ட பிறகு சிவ உருவம் எது என்பதையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியும்.

பாடல் #1309

பாடல் #1309: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ஏகப் பராசத்தி யீசற்கா மங்கமே
யாகப் பராவித்தை யாமுத்தி சித்தியே
யேகப் பராசத்தி யாகச் சிவகுரு
யோகப் பராசத்தி யுண்மை யெட்டாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எகப பராசததி யீசறகா மஙகமெ
யாகப பராவிததை யாமுததி சிததியெ
யெகப பராசததி யாகச சிவகுரு
யொகப பராசததி யுணமை யெடடாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏகப் பராசத்தி ஈசற்கு ஆம் அங்கமே
ஆகப் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகப் பராசத்தி ஆகச் சிவ குரு
யோகப் பராசத்தி உண்மை எட்டாமே.

பதப்பொருள்:

ஏகப் (ஒன்றாகிய) பராசத்தி (பரா சக்தியே) ஈசற்கு (இறை) ஆம் (அவருக்கு) அங்கமே (சரி பாதி அங்கமாக இருக்கின்றாள்)
ஆகப் (அவளே தனது திருமேனியில்) பராவித்தை (சாதகர்கள் அனுபவத்தில் உணருகின்ற பரா வித்தையாகவும்) ஆம் (இருக்கின்றாள்) முத்தி (முக்தியாகவும்) சித்தியே (சாதகர்கள் அடையக்கூடிய சித்திகளாகவும் அவளே இருக்கின்றாள்)
ஏகப் (ஒன்றாகிய) பராசத்தி (பரா சக்தியே) ஆகச் (பார்க்கின்ற) சிவ குரு (குருவாக இருக்கும் இறைவனாகவும் இருக்கின்றாள்)
யோகப் (யோகத்தினால் அடையக் கூடிய எட்டுவிதமான சித்திகளில்) பராசத்தி (பரா சக்தியானவள்) உண்மை (பேருண்மையின்) எட்டாமே (எட்டு விதமான சக்திகளாகவும் இருக்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1308 இல் உள்ளபடி சாதகர்கள் அறிந்து கொண்ட சிவ உருவமாக இருப்பவள் ஒன்றாகிய பரா சக்தியே. அவளே இறைவனுக்கு சரி பாதி அங்கமாகவும் இருக்கின்றாள். தனது திருமேனியில் சாதகர்கள் அனுபவத்தில் உணருகின்ற பரா வித்தையாகவும், சாதகர்களுக்கு கிடைக்கும் முக்தியாகவும், அவர்கள் அடையக் கூடிய சித்திகளாகவும் அவளே இருக்கின்றாள். ஒன்றாகிய பரா சக்தியே சாதகர்கள் பார்க்கின்ற குருவாக இருக்கும் இறைவனாகவும் இருக்கின்றாள். சாதகர்கள் தங்களின் யோகத்தினால் அடையக் கூடிய எட்டு விதமான சித்திகளில் பேருண்மையாக இருக்கின்ற எட்டு விதமான சக்திகளாகவும் பரா சக்தியே இருக்கின்றாள்.

பாடல் #1310

பாடல் #1310: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

எட்டா கியசத்தி யெட்டாகும் யோகத்துக்
கட்டாகி நாதாந்தத் தெட்டுங் கலப்பித்
தொட்டாத விந்துவுந் தானற் றொழிந்து
கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எடடாகிய சததி யெடடாகும யொகததுக
கடடாகி நாதாநதத தெடடுங கலபபித
தொடடாத விநதுவுந தானற றெழிநது
கிடடா தொழிநதது கீழான மூடரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகி நாத அந்தத்து எட்டும் கலப்பித்து
ஒட்டாத விந்துவும் தான் அற்று ஒழிந்து
கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே.

பதப்பொருள்:

எட்டாகிய (எட்டு விதமாக இருக்கின்ற) சத்தி (சக்திகளே) எட்டாகும் (எட்டு விதமான) யோகத்துக் (யோகங்களின் பூரண சக்தியாக இருக்கின்றார்கள்)
கட்டாகி (இந்த எட்டு விதமான சக்திகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து) நாத (நாதமாகிய) அந்தத்து (எல்லையாக இருக்கின்ற பராசக்தியில்) எட்டும் (எட்டு சக்திகளும்) கலப்பித்து (கலந்து ஒன்றாகும் போது)
ஒட்டாத (அந்தப் பராசக்தியோடு ஒட்டாமல் தனியாக பிரிந்து நிற்கின்ற) விந்துவும் (சாதகரின் ஆன்ம ஒளியும்) தான் (தான் எனும் அகங்காரத்தை) அற்று (நீக்கி) ஒழிந்து (அழிந்து இல்லாமல் போகும்)
கிட்டாது (இந்த நிலை கிடைக்காமல்) ஒழிந்தது (அழிந்து போய்விடும்) கீழான (இறைவனைப் பற்றிய ஞானம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாத கீழ்மையான) மூடர்க்கே (முட்டாள்களுக்கு).

விளக்கம்:

பாடல் #1309 இல் உள்ளபடி சாதகர்கள் தங்களின் யோகத்தினால் அடையக் கூடிய எட்டு விதமான சித்திகளில் இருக்கின்ற எட்டு விதமான சக்திகளே எட்டு விதமான யோகங்களுக்கும் பூரண சக்திகளாக இருக்கின்றார்கள். இந்த எட்டு விதமான சக்திகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து நாத எல்லையாக இருக்கின்ற பராசக்தியோடு ஒன்றாகக் கலந்து நிற்கும் போது அவர்களோடு ஒட்டாமல் தனியாக பிரிந்து நிற்கின்ற சாதகரின் ஆன்ம ஒளியும் தான் எனும் அகங்காரம் நீங்கி அழிந்து போகும். தான் என்பது முற்றிலும் அழிந்து இறைவியோடு ஒன்றாக நிற்கின்ற இந்த நிலை இறைவனைப் பற்றிய ஞானம் கிடைத்தும் அதை சரியாகப் பயன்படுத்தாத கீழ்மையான முட்டாள்களுக்கு கிடைக்காமல் அழிந்து போகும்.

பாடல் #1311

பாடல் #1311: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ஏதும் பலமா மியந்திரா சன்னடி
யோதிக் குருவி னுபதேச முட்கொண்டு
நீதங்கு மங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச்செம்பிற் சட்கோணந் தானிடே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எதும பலமா மியநதிரா சனனடி
யொதிக குருவி னுபதெச முடகொணடு
நீதஙகு மஙக நியாசந தனைபபண்ணிச
சாதங கெடசசெமபிற சடகொணந தானிடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏதும் பலமாம் இயந்திர ஆசன் அடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீ தங்கும் அங்க நியாசம் தனைப் பண்ணிச்
சாதம் கெடச் செம்பில் சட் கோணம் தான் இடே.

பதப்பொருள்:

ஏதும் (எந்த விதமான) பலமாம் (சக்திகளையும் பெறுவதற்கு) இயந்திர (உதவுகின்ற புவனாபதிச் சக்கரத்திற்கு) ஆசன் (சரிசமமான அதிபதிகளாக இருக்கின்ற இறைவன் இறைவியின்) அடி (திருவடிகளை பற்றிக் கொண்டு)
ஓதிக் (அந்தத் திருவடிகளைப் போற்றி வணங்கி) குருவின் (சாதகர் தமது குருவிடம்) உபதேசம் (முறைப்படி உபதேசம் கேட்டுப் பெற்றுக் கொண்ட மந்திரங்களை) உட்கொண்டு (முழுவதுமாக உள் வாங்கிக் கொண்டு)
நீ (சாதகர் தாம்) தங்கும் (வீற்றிருக்கும் இடத்தில்) அங்க (தமது உடல் அங்கங்களால்) நியாசம் (குரு உபதேசித்த நியமங்களை) தனைப் (அவர் உபதேசித்த முறைப்படியே) பண்ணிச் (சரியாகச் செய்து)
சாதம் (தமது பிறவி முழுவதும்) கெடச் (இல்லாமல் போகும்படி) செம்பில் (செப்புத் தகட்டில்) சட் (ஆறு) கோணம் (கோணம் வரும்படி) தான் (இரண்டு பெரிய முக்கோணங்களை) இடே (வரைந்து வையுங்கள்).

விளக்கம்:

பாடல் #1310 இல் உள்ளபடி அட்டாங்க யோகத்தின் மூலம் பெறுகின்ற அட்டமா சித்திகளைப் போன்ற எந்த விதமான சக்திகளையும் பெறுவதற்கு உதவும் புவனாபதிச் சக்கரத்திற்கு சரிசமமான அதிபதிகளாக இருக்கின்ற இறைவன் இறைவியின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு போற்றி வணங்க வேண்டும். அதன் பலனாக இறைவன் சாதகருக்கு சரியான குருவைக் காண்பித்து அருளுவார். அந்த குருவிடம் முறைப்படி உபதேசம் பெற்ற மந்திரங்களையும் நியமங்களையும் முழுவதுமாக உள் வாங்கி உணர்ந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு குரு உபதேசித்த மந்திரங்களையும் நியமங்களையும் அவர் உபதேசித்த முறைப்படியே ஓதி தமது உடல் அங்கங்களால் சரியாகச் செய்து தமக்கு இனிப் பிறவியே வேண்டாம் என்று வேண்டி செப்புத் தகட்டில் ஆறு கோணங்கள் வரும்படி இரண்டு பெரிய முக்கோணங்களை வரைந்து வைக்க வேண்டும்.