பாடல் #1277

பாடல் #1277: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

வீச மிரண்டுள நாதத் தெழுவன
வீசமு மொன்று விரைந்திடு மேலுற
வீசமும் நாதமு மெழுந்துட னொத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.

விளக்கம்:

பாடல் #1276 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்படும் சத்தத்திலிருந்து வெளிப்படும் மந்திர ஒலிகள் இரண்டு வகைகளாக இருக்கின்றது. இவை இரண்டுமே சத்தத்திலிருந்து வெளிப்பட்டு மேல் நோக்கி ஒன்றின் மேல் ஒன்றாக விரைவாக எழுந்து கொண்டே இருக்கின்றது. இந்த இரண்டு விதமான மந்திர ஒலிகளும் ஏரொளிச் சக்கரத்தின் சத்தத்துடன் சரிசமமாகச் சேர்ந்து ஒன்றாக வெளிப்பட்ட பிறகு ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்பட்டு அண்ட சராசரங்கள் முழுவதும் விரிந்து பரவி இருக்கின்ற வெளிச்சத்தோடும் சரிசமாகப் விரிந்து பரவுவதை பாடல் #1276 இல் உள்ளபடி உலகத்திலுள்ள இறைவனை அடைய விரும்பி சாதகம் செய்யும் உயிர்கள் காணலாம்.

பாடல் #1278

பாடல் #1278: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத் தளவினில்
விரிந்தது வுட்கட்ட மெட்டெட்டு மாகில்
விரிந்தது விந்து விரையது வாமே.

விளக்கம்:

பாடல் #1277 இல் உள்ளபடி அண்ட சராசரங்கள் அனைத்திற்கும் விரிந்து பரவுகின்ற வெளிச்சம் அதிகமாகும் போது மந்திர ஒலிகள் அளவில் குறைந்து மறைந்து விடும். அதன் பிறகு வெளிச்சமும் சத்தமும் அளவில் சரிசமாக விரிந்து பரவும் போது அதன் உள் அமைப்பில் ஒன்றோடு ஒன்று அறுபத்து நான்கு மடங்கு அளவில் இருக்கும்படி ஆகி விட்டால் அதுவே பாடல் #1276 இல் உள்ளபடி உலகத்திலுள்ள இறைவனை அடைய விரும்பி சாதகம் செய்யும் உயிர்கள் அனைத்திற்கும் முக்திக்கு வழிகாட்டும் வித்தாக ஆகிவிடும்.

பாடல் #1279

பாடல் #1279: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

விரையது விந்து விளைந்தன வெல்லாம்
விரையது விந்து விளைந்த வுயிரும்
விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் றானே.

விளக்கம்:

பாடல் #1278 இல் உள்ளபடி முக்திக்கு வழிகாட்டும் வித்தாக இருக்கின்ற ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சத்திலிருந்தே அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்தும் உருவாகி இருக்கின்றன. அந்த வெளிச்சத்திலிருந்தே அனைத்து உயிர்களும் உருவாகி இருக்கின்றன. அந்த வெளிச்சத்திலிருந்தே இந்த உலகங்களும் உருவாகி இருக்கின்றன. ஏரொளிச் சக்கரத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்ற சாதகர்களும் இந்த மூல விதையின் வெளிச்சத்திலிருந்தே உருவாகி இருக்கின்றார்கள்.

குறிப்பு: அனைத்தையும் உருவாக்குகின்ற மூல விதையாக சாதகருக்குள்ளிருந்து வெளிப்படும் ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சம் இருந்தாலும் இவை அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பது அசையா சக்தியான இறைவனே ஆகும்.