பாடல் #829

பாடல் #829: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்
தலைவனு மாயிடுந் தன்வழி போகந்
தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே.

விளக்கம் :

பாடல் #828 ல் உள்ளபடி வெற்றி பெற்ற தலைவன் தன் ஆன்மாவை அறிந்தவன் ஆவான். அவனைச் சிவயோகம் தானே வந்தடையும். தன்னைத் தானே வசப்படுத்தி ஆளும் திறமை அவனுக்கு வரும். ஐந்து பூதங்களும் அவன் வசமாகி அவன் விருப்பப்படி நடக்கும்.

பாடல் #830

பாடல் #830: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சு தொன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே.

விளக்கம் :

பரியங்க யோகம் ஐந்து நாழிகைப் பொழுது மட்டுமே செய்ய வேண்டும். அதற்கு மேலும் பயின்றால் ஆறாவது நாழிகையில் துணைவி துணைவன்பால் கொள்ளும் போகம் அதிகமாகி நெஞ்சம் பூரித்து சிற்றின்பத்தில் ஆழ்ந்துவிடுவார். ஐந்து நாழிகைப் பொழுது போகத்தில் யோகம் செய்வது மட்டுமே பரியாங்க யோகமாகும்.

பாடல் #831

பாடல் #831: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் யோகம் அடைந்தார்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவர்க்கொண் ணாதே.

விளக்கம்:

ஐந்து நாழிகைகள் மன உறுதியோடு இறைவனை நினைத்துக் கொண்டே மிகவும் கடினமான பரியங்க யோகத்தை செய்தவர்களுக்கு மட்டுமே இறைவனை தமக்குள் உணரும் பெரும்பேறு கிடைக்கும். மற்றவர்கள் விரக தாபத்தில் கையிலிருக்கும் வளையல்கள் நழுவும் அளவிற்கு மெலிந்த தேகத்துடன் சந்தனம் போன்ற வாசனையும் மிருதுவும் உடைய கொங்கைகளை கொண்ட மாதர்களைத் தழுவிப் பெறும் சிற்றின்பத்திலேயே மூழ்கி இருப்பார்கள்.

பாடல் #832

பாடல் #832: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில்
விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மென்றெண்ணி இருந்தான் இருந்ததே.

விளக்கம்:

அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாத மிகவும் கடினமான பரியங்க யோகத்தை செய்து இறைவனைத் தமக்குள் உணர்ந்தவர்கள் யார் என்றால் விண்ணுலகிலிருந்து வலிமையோடு பொழியும் கங்கையைத் தமது தலையின் சடையில் தாங்கிக் கொண்டு நஞ்சாக இருந்தாலும் அதை உலக நன்மைக்காக ஏற்றுக்கொள்பவனாகிய இறைவனைப் போன்றவர்கள். ஏனெனில் அவர்கள் இனிக்கின்ற சிற்றின்பம் வேண்டாமென்று ஐந்து நாழிகைக்குள் இறைவனை மட்டுமே நினைத்து யோகத்தில் இருந்தவர்கள்.

பாடல் #833

பாடல் #833: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்
வாய்ந்த குழலிக்கு மன்னர்கு மானந்தம்
வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமுஞ் சோர்வில்லை வெள்ளிக்கே.

விளக்கம் :

பரியங்க யோகம் செய்வதற்கு ஏற்ற வயது பெண்ணுக்கு இருபதும் ஆணுக்கு முப்பதும் ஆகும். இந்த யோகம் கைவந்தவர்கள் இருவருக்கும் ஆனந்தம் உண்டாகும். பெண்ணின் ஐம் பொறிகளும் இன்பத்தில் மலர்ந்திடும். ஆணுக்கு சுக்கில நீக்கம் ஏற்படாது.

பாடல் #834

பாடல் #834: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

வெள்ளி யுருகிப் பொன்வழியே ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
வள்ளியுண் ணாவில் அடக்கியேவைத் தாரே.

விளக்கம்:

தங்கத்தில் நகை செய்யும் பொற்கொல்லர்கள் திருட்டுத்தனமாக வெள்ளியில் உட்புற பாகங்களை செய்து அது உருகி தங்கத்தோடு கலந்து விடாமல் இருக்க கரியினால் மூடிப் புடம்போட்டு அதை நெருப்பில் சுத்தப்படுத்தி அதன் மேலே தங்கத்தை வார்த்து நகை செய்து தங்கத்தை மிச்சம் பிடிப்பார்கள். அதுபோலவே பரியங்க யோகம் செய்வதில் திறமையான யோகியர்கள் தனது துணையுடன் போகத்தில் இருக்கும் போது துணையை ஏமாற்றி சுக்கிலத்தை வெளியேற்றி விடாமல் இறைவனின் மேல் நாட்டம் வைத்து சுக்கிலம் வெளியேறாமல் தடுத்து அடி வயிற்றின் நெருப்பினால் தமது சுக்கிலத்தை சுத்தப்படுத்தி சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் சேமிக்கிறார்கள். சகஸ்ரதளத்தில் சேர்க்கப்பட்ட சுக்கிலம் அமிர்தமாக மாறி உள் நாக்கில் வந்து விழும்போது அது மறுபடியும் வயிற்றில் சென்று நெருப்பினால் பொசுங்கிப் போகாமல் அந்த அமிர்தத்தை யோக முறையில் தங்களது உள் நாக்கிலேயே அடக்கி வைத்து விடுகின்றார்கள்.

பாடல் #835

பாடல் #835: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன்
சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே.

விளக்கம் :

பரியங்க யோகப் பயிற்சி கைவந்த இருவரும் மகிழ்ச்சியுடன் சிறிதும் எண்ணம் கலங்காமல் இறை எண்ணத்துடன் பரியங்க யோகத்தை செய்தால் அவர்கள் பத்து திசைகளுக்கும் தலைவனான பதினெட்டு வகைத் தேவர்களுக்கும் தலைவனான செங்கதிரவன் போல் இருப்பார்கள்.

பாடல் #836

பாடல் #836: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தந்
தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனந்
திங்களிற் செவ்வாயை புதைத்திருந் தாரே.

விளக்கம் :

இருளும் வெளிச்சமும் கலந்து இருக்கும் அதிகாலை நேரத்தில் துணைவனும் துணைவியும் போகத்தின் போது சிற்றின்பத்தில் இருந்தாலும் துணைவன் தனது சுக்கிலத்தையும் துணைவி தனது சுரோணிதத்தையும் வெளிப்படுத்தாமலேல்யே மனதை ஒருமைப்படுத்தி இறையருளில் மட்டுமே மனதைப் பதித்து வைத்து செய்வது பரியங்க யோகமாகும்.

பாடல் #837

பாடல் #837: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
கருத்தழ காலே கலந்தங் கிருக்கில்
வருத்தமு மில்லையா மங்கை பங்கற்குந்
துருத்தியுள் வெள்ளியுஞ் சோரா தெழுமே.

விளக்கம்:

துணைவனும் துணைவியும் போகத்தில் இருக்கும்போது அந்த இன்பத்திலேயே மூழ்கிவிடாமல் அறிவை மாற்றி இறைவன் மேல் வைத்து மனத்தைத் தூய்மையுடன் எண்ணிப் பார்க்கும் சிறந்த அழகோடு பரியங்க யோகம் செய்பவர்களுக்கு உலகியல் துன்பம் உண்டாகாது. இறைவியைத் தம்மில் பாதியாகக் கொண்ட இறைவனது அருளால் சுக்கிலம் வெளியே வந்து விழாமல் உள்ளுக்குள்ளேயே மேல்நோக்கி எழுந்து செல்லும்.

பாடல் #838

பாடல் #838: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றிட்டால்
மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே.

விளக்கம் :

மூலாதாரத்திலிருந்து சுவாதிட்டானம் வழியாக காமாக்கினியை புருவ நடுவுக்கு கொண்டு சென்று அங்குள்ள சிவனை அறிந்த பின் அனலின் முன் மெழுகு உருகுவது போன்று சாதகர்க்கு உடம்பு ஜோதியாய் மாறிவிடும். ஜோதியாய் ஆன பின் புருவ நடுவைத் தாண்டி தலைக்கு மேல் பெருவெளியை அறிந்தவர்களுக்கு உடல் உலகியலில் வீழ்வது இல்லை.