பாடல் #882

பாடல் #882: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந்
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங்
கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே.

விளக்கம்:

சந்திர யோகம் புரியும் யோகியர்களே உங்களின் குண்டலினியை எழுப்பி சகஸ்ரதளத்தில் சேர்ப்பதன் மூலம் புருவ மத்தியில் இருக்கும் அமிர்தம் விளையும் ஊற்றைத் திறந்து எப்போதும் வற்றாத அமிர்தத்தைப் பருகுங்கள். அதன் பிறகு இறைவனின் ஈடுஇணையில்லாத தாமரை மலர் போன்ற திருவடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டு வேறு எதன் மீதும் எண்ணங்களை செலுத்தாமல் வெளிப்புற உலகத்தின் எதுவும் பாதிக்காத சமாதி நிலையில் அமர்ந்து ஞானக்கண் வழியே அனைத்தையும் கண்டு மூச்சுக்காற்றை வெளியிலிருந்து எடுத்துக் கொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே இயக்கத்தை மாற்றி எப்போதும் திகட்டாத பேரானந்தத்தில் திளைத்து இருங்கள்.

பாடல் #883

பாடல் #883: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

மாறு மதியும் மதித்திரு மாறின்றித்
தாறு படாமல் தண்டோடே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே.

விளக்கம்:

இடநாடி வழியாகவும் வலநாடி வழியாகவும் இயங்குகின்ற தம் இயல்பான மூச்சுக்காற்றிலிருந்து மாறுகின்ற சந்திர கலையும் சூரிய கலையும் யோகத்திற்குரிய முறையில் மாறுபடாமலும் தடை படாமலும் குறைவின்றி சீராக நடுநாடியான சுழுமுனையின் வழியே சென்று தலை உச்சியைத் தாண்டியுள்ள சந்திர மண்டலத்தை அடைந்தால் எதனாலும் பாதிக்கப்படாத அழியாத உடலை அடையும் வழியும் எப்போதும் திகட்டாமல் அளவின்றி பெருகும் பேரின்பமும் இந்த உலகத்திலேயே கிடைக்கும்.