பாடல் #637

பாடல் #637: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.

விளக்கம்:

நல் வழியாகிய தாரணை மூலம் அடங்கிய மனதை உள்ளே இருக்கும் இறைவன் மீது ஒருநிலைபெறச் செய்தவர்களுக்கு மரணத்திற்குச் செல்லும் வழியை மாற்றிவிடும். இறைவனால் கொடுக்கப்படும் ஞானமாகிய குறைவில்லாத பெரும் கொடையை அடைந்தவர்கள் இறைவனை அடையக்கூடிய அனைத்து வழிகளிலும் இந்த உலகத்திலிருந்தே செல்லக்கூடியவர்கள் ஆவார்கள்.

பாடல் #638

பாடல் #638: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

தூங்கவல் லார்க்குந் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத்
தேங்கவல் லார்க்குந் திளைக்கும் அமுதமுந்
தாங்கவல் லார்க்குந் தன்னிட மாமே.

விளக்கம்:

ஏழு உலகங்களையும் தாங்கக்கூடிய வலிமையைக் கொண்டு நிற்பவனும், இறைவனை மனதில் வைத்து தியானம் செய்பவர்களுக்குள்ளே அமுதமாய் லயித்திருப்பவனுமாகிய இறைவன் சமாதி நிலையை அடைந்தவர்களைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவர்களுக்குத் துணையாக இருக்கின்றான்.

பாடல் #639

பாடல் #639: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரண மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.

விளக்கம்:

இந்த உலகத்தில் துன்பம் தரக்கூடிய காரணங்களாகிய தனு, கரணம், புவனம், போகம் ஆகிய பந்தங்களைக் கடந்து சென்று ஏழுவகையான சிவ தத்துவங்களையும் தன் அறிவாலேயே உணர்ந்து பெற்று ஜென்ம ஜென்மமாய்த் தொடர்ந்து வரும் மாயையைத் தவத்தால் வெற்றி பெற்று இறைவனின் திருவடியைச் சேருதல் சமாதியால் பெறும் பயனாகும்.

நான்கு வகை பந்தங்கள்:

தனு – தன் உடலின் மேல் இருக்கும் பற்று
கரணம் – ஆசைப்படும் மனது
புவனம் – உலகப் பற்று
போகம் – உலகப் பொருள்களை அனுபவித்தல்

ஏழுவகை சிவ தத்துவங்கள்:

இறைமை – இறைவனாக தன்னை உணர்தல்
முற்றறிவு உடைமை – அனைத்தையும் அறிந்தவனாக இருத்தல்
எங்கும் தானாதல் – எங்கும் வியாபித்து இருத்தல்
இயல்பாகவே மாயையின்மை – மாயையே இல்லாது இருத்தல்
வரம்பில்லாத ஆற்றல் – எல்லையில்லா சக்தியைக் கொண்டிருத்தல்
தன்வயத்தன் ஆதல் – எதனாலும் கட்டுப்படாமல் தன் கட்டுப்பாட்டிலேயே இருத்தல்
ஒன்றியுணர்தல் – அனைத்திலும் ஒன்றி இருப்பதாக உணர்தல்

கருத்து: சமாதி நிலையை அடைந்தால் அனைத்துவித துன்பங்கள் மற்றும் மாயையிலிருந்து விடுதலை பெற்று சிவ தத்துவங்களை உணரலாம்.