பாடல் #56: பாயிரம் – 2. வேதச் சிறப்பு
பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் ஆறாத அவனியில் மாட்டாதார்
மேட்டு விருப்பார் விரதம்இல் லாதவர்
ஈட்டும் இடம்சென் றிகலலுற் றாரே.
விளக்கம்:
இறைவனைப் பற்றிய பாடல்களை இசையோடு ஒலித்துப் பாடி அதற்கேற்ப பாவமும் காட்டி நடனமாடும் இளம்பெண்கள் அந்தப் பாடல்களின் மூலம் இறைவனை உணர்ந்து முக்திபெறுவதற்கு முயற்சிக்காமல் தங்களின் நடனங்களின் மூலம் பொருள் பெறவே முயற்சிக்கின்றனர். அப்பெண்களின் நடனத்தைக் கண்டு களிப்பவர்களும் அதன் உண்மைப் பொருளை உணராமல் அவர்களின் நடனத்தைக் கண்டு சிற்றின்பத்திலேயே இருக்கின்றார்கள். உயர்வான வேதங்களை உயிர்கள் உய்யும் பொருட்டு உண்மைப் பொருளுணர்ந்து ஓதவேண்டிய அந்தணர்கள் மோட்சம் அடையவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அதற்கான ஒழுக்கங்களைக் (விரதங்கள்) கடைப்பிடிக்காமல் பிறர் கொடுக்கும் பொருளுக்காக வேதங்களை ஓதி யாகங்களை வளர்ப்பதால் இந்தப் பெண்களைப் போன்றவர்கள் ஆகின்றார்கள். இவர்களால் செய்யப்படும் யாகங்களைப் பெறுபவர்களும் உண்மைப் பொருள் உணராமல் உலகப் பொருள்களிலேயே மனம் செலுத்துவதால் அப்பெண்களின் நடனத்தைக் காண்பவர்கள் ஆகின்றார்கள். இவ்வர்கள் கொடுக்கும் பொருளுக்கு ஆசைப்படும் அந்தணர்களோ அப்படி பொருள் கிடைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று தங்களின் உயர்வான பிறப்பை இழிபிறப்பாக மாற்றித் துன்பத்தில் வாழ்கின்றார்கள்.
உள் விளக்கம்:
வேதங்களில் இறைவனை அடையும் வழிகளும் அதைக் கடைபிடிக்கும் போது இருக்க வேண்டிய ஒழுக்கங்களும் (விரதங்கள்) கொடுக்கப்பட்டிருந்தாலும் அதைச் சிரத்தையோடு மேற்கொள்ளாமல் வெறும் சிற்றின்பத்தில் சிக்கி உலகப் பொருள்களை நாடி அலையும் உயிர்கள் தங்களின் பிறவிப் பயனை எய்யாமல் இழிந்து போகின்றார்கள். அவ்வாறு இல்லாமல் பேரின்பப் பொருளான இறைவனை வேதங்கள் மூலம் உணர்ந்து முக்தியை அடைவீர்களாக என்று திருமூலர் இங்கு அருளுகின்றார்.