மாலைநேர அந்தி சூரியனைப் போன்ற சிவந்த நிறத்தையுடைய பிறவியை அழிக்கும் அரனே சிவனே என்று மனதில் எண்ணிக்கொண்டே இருந்து இறைவனைத் தொழுகின்ற மனம் திருந்திய அடியவர்களுக்கும் அனைத்திற்கும் ஆரம்பமானவனே அனைத்திற்கும் முதல்வனே ஆதியானவனே என்று துதிக்கும் எமக்கும் ஞானத்தி ரூபமான இறைவன் எமது மனத்துள் புகுந்து நிற்கின்றான்.
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர் நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர் பனையுள் இருந்த பருந்தது போல நினையாத வர்க்கில்லை நின்இன்பம் தானே.
விளக்கம்:
கர்மவினைப் பயனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே எப்போதும் இறைவன் சிந்தனையில் இருக்கக் கூடியவர்கள் மாபெரும் தவம் செய்பவர்களுக்கு ஈடானவர்கள். இறைவனை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பவர்கள் அவனின் பேரன்பிலேயே எப்போதும் நிற்கின்றார்கள். பனைமரத்தில் கூடு கட்டி வாழும் பருந்து பனைமரத்தின் பலன்களை அனுபவிக்காமல் (சுவையான பனம்பழங்களையோ இலைகளையோ பட்டைகளையோ உண்ணாமல்) வெளியில் உணவு தேடி அலைகின்றதோ அதுபோலவே இறைவன் அருகில் இருந்தும் இறைவனை நினைக்காமல் இருக்கின்றவர்களுக்கு பேரின்பம் எப்போதும் கிடைப்பதில்லை.
அடியார் பரவும் அமரர் பிரானை முடியால் வணங்கி முதல்வனை முன்னிப் படியார் அருளும் பரம்பரன் எந்தை விடியா விளக்கென்று மேவிநின் றேனே.
விளக்கம்:
அடியவர்கள் போற்றிப் புகழும் தேவர்களின் தலைவனை தலை தாழ்த்தி வணங்கி அனைத்திற்கும் முதல்வனானவனை எனது எண்ணத்தில் வைத்து உலகமனைத்திலும் உள்ள உயிர்களுக்கு அருளும் ஆதிப் பொருளானவனை எனது தந்தை என்று நினைத்து ஆன்ம இருளைப் போக்கும் எப்போதும் அனையாத மணிவிளக்கு அவன் என்று உணர்ந்து அவனோடு கலந்து நின்றேன்.
இறைவனின் திருவடிகளை என் தலைமேல் சூடிக்கொள்வேன். அவனின் திருவடிகளை என் நெஞ்சத்தில் வைத்துக்கொள்வேன். எம்பெருமான் என்று அவன் புகழ்களைப் பாடுவேன். பலவித மலர்களை அவன் திருவுருவத்தின் மேல் தூவி அவனைப் பணிந்து நின்று அவன் முன்னால் அவன் பெருமைகளைப் பாடிக்கொண்டே ஆடுவேன். ஆடியபின் அமரர்களின் தலைவனான இவனே எனக்கு முக்தியளிக்கக்கூடியவன் என்று அவனை நாடி அடைந்தபின் அனைத்தும் அவனே எனும் உண்மை ஞானத்தை அறிந்து அவனோடே கலந்து நிற்பேன்.
உள்விளக்கம்:
இறைவனை அடைந்து முக்திபெற மாபெரும் தவங்கள் யோகங்கள் யாகங்கள் இருந்தாலும் அவனது திருவடியை எண்ணத்தில் எப்போதும் வைத்து அவனைப் புகழ்ந்து பாடி ஆடி பலவித மலர்களைத் தூவி பூஜித்தாலே அவனை நாடி முக்தியை அடையலாம். இதுவே யாம் அறிந்த சிறந்த உபாயம் என்று திருமூலர் அருளுகின்றார்.
இந்து (நிலவின்) இளம் (வளரும்) பிறை (பிறை) போலும் (போன்ற) எயிற்று (கொம்புகளை) அனை (கூர்மையாக உடையவனும்)
நந்தி (குருவாக இருக்கின்ற இறைவனின்) மகன் (மகனாக) தனை (இறை தன்மையாகவே இருப்பவனை) ஞான (உண்மை ஞானத்தின்) கொழுந்தினை (உச்சமாகவும் இருப்பவனை)
புந்தி (எமது அறிவுக்கு) இல் (உள்ளே) வைத்து (வைத்து) அடி (அவனது திருவடிகளை) போற்றுகின்றேனே (யான் எப்போதும் போற்றி வணங்குகின்றேன்).
விளக்கம்:
ஐந்து கரங்களையே ஐந்து பூதங்களாக (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) கொண்டவனும், உலகத்தையே தனது திருமுகமாக கொண்டவனும், இளப் பிறை நிலாவைப் போன்ற கூர்மையான கொம்புகளை உடையவனும், குருவாக இருக்கின்ற இறைவனின் மகனாக இறை தன்மையாகவே இருப்பவனும், உண்மை ஞானத்தின் உச்சமாகவும் இருப்பவனை எமது அறிவுக்கு உள்ளே வைத்து அவனது திருவடிகளை யான் எப்போதும் போற்றி வணங்குகின்றேன்.
இப்பாடலில் 3 ஆவது அடிக்கான பொருளை நேரடியாக புரிந்து கொள்வது சிறிது கடினம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
திருமந்திரத்தின் மூலப் பாடல்கள் 3,046 மட்டுமன்றி பிற்சேர்க்கைகளான 62 பாடல்களும் சேர்த்து மொத்தம் 3,108 பாடல்களுக்கு அருமையான இசையில், கம்பீரமான வெண்கலக் குரலில் பாடி அருளிய தெய்வத்திரு. வீர மணிகண்டன் ஐயா அவர்களுக்கு நன்றிகூறி அவர் வழங்கிய “திருமூலர் அருளிய திருமந்திரம்” என்னும் இசைப் பாடல்கள் தொகுப்பை அனைவரும் கேட்டுப் பயன்பெற இங்கே முழுமையாக வழங்குகின்றோம்.
தொகுப்பு: திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடியவர்: தெய்வத்திரு. வீர மணிகண்டன்
இசைத்தவர்: தெய்வத்திரு. வீர மணிகண்டன்
வெளியீடு: திருமந்திர தமிழிசை
அனைத்து பாடல்களையும் பதிவிறக்க கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்:
12-9-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: எவ்வழியில் ஆண்டவனை அடைய முயற்சித்தல் வேண்டும்? யோக நிலையா பக்தி நிலையா இல்லையேல் ஞான நிலையா என்பதே கேள்விகள் ஆகின்றது.
எவர் எவர்க்கு எம் மார்க்கம் எளிதாக தோன்றுகிறதோ அதனை ஏற்றுக் கொள்ளலாம். பொதுவாக ஓர் கட்டிடம் என்றால் அதற்கு இரண்டு அல்லது மூன்று வழிகள் காணக்கூடும். எவ்வழியில் செல்கின்ற போதிலும் உள்ளே செல்ல முடியும். இருப்பினும் நமக்கு எளிதாக தொல்லை தராத வழியை நாடிப் பயன் படுத்துவதே நல்ல முறையாகின்றது. அனைவருக்கும் யோக நிலைகள் நலம் தருவதாகக் காணாது. ஏனெனில் உடல்கூறு மனநிலை என்பதெல்லாம் தடையாகக் காணலாம்.
பக்தி மார்க்கத்தில் மந்திரங்கள் ஜெபித்து எளிதாக சிலரால் இறைவனை அடைய இயலுகின்றது. இவ்விதமே இசையும் ஓர் பக்தியின் வழியாகவே யாம் காண்கின்றோம். இறைவனை நன்று துதித்துப் பாடினால் அவன் (இறைவன்) வராது இருக்க மாட்டான் என்பதே எமது கருத்தாகின்றது. இக்கலியுக தன்மையில் பெரும் யோகங்கள் யோக பயிற்சிகள் தவநிலைகள் என்பதெல்லாம் எளிதில் கடை பிடிக்க இயலாது என்கின்றதால் இக்காலத்திற்கு எளியவழி பக்தி மார்க்கமும் நாம கீர்த்தனமும் என்பதேயாகும் என்று இங்கு எடுத்துரைக்கின்றோம். இருப்பினும் திடமும் நம்பிக்கையும் உயர்ந்திருந்தால் யோக நிலையை கை கொள்வதில் தவறாகாது. எளிதான முறையைச் செப்பிவிட்டோம். இவைகளில் தேர்ச்சி செய்வீர்களாக.
ஞானமார்க்கம் என செப்பிக்கொண்டால் பல குழப்பங்கள் நேரிடல் காணக்கூடும். ஏனெனில் பலர் பலவிதத்தில் உபதேசிப்பர். எது சரி எது தவறு என்பதனை தேடிக் கண்டு பயன் அடைவதற்குமுன் இஜ் ஜென்மமும் மூடிவிடும் என்பதே நிலை. இந்நிலையில் யோகம் இல்லையேல் பக்தி மார்க்கங்களில் செல்வதே நலம்தரும் என்றும் செப்பினோமே.
15-8-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: ஒரே சமயத்தில் ஒரு ஸ்தலம்தனில் அமர்ந்து தியானம் செய்தல் வேண்டும். இல்லையேல் சாதனை புரிதல் வேண்டும் என்பது விதியா? விதியாயிருந்தால் இது ஏன்?
இது ஓர் சிறப்பான வினாவாகிறது. உடல் சூட்சுமம் ஸ்தூலம் பின்பு ஆன்மா என பிரித்துப் பார்த்தால் எளிதாகும். ஸ்தூல உடலுக்கு நாம் உணவு அளிக்கின்றோம். குறிப்பிட்ட காலங்களில் அமர்ந்து உண்ணுகின்றோம். உண்ணும் காலம் நெருங்க வயிற்றினில் பசிக்கின்றது. உண்டபின் பசி மறைகின்றது. இதற்கு காரணம் நாட (தேட) அச்சமயத்தில் உடலுக்கு உணவு வேண்டும் என பழக்கம் ஏற்படுகின்றது. இவ்விதமே ஒரே சமயத்தில் ஓர் ஸ்தலம்தனில் அமர்ந்து தியானம் செய்திட சூட்சும உடலுக்கும் ஆன்மாவிற்கும் உணவு அளிப்பது போல் ஆகின்றது. இவ்விதமே பழகிட குறித்த காலங்களில் அமர்ந்தே ஆகுதல் வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும் என்பது மட்டும் அல்லாது பழகிட்ட ஸ்தலத்தில் அமர்ந்திட்ட போதே மனம் ஒரு நிலைப்பாடு காணும். சதா தியானம் ஜபம் செய்கின்றவர்க்கு இது அவசியமில்லை. அவ்விதம் தியானம் செய்கின்றவர் குறைவே. இது கலியுகத் தன்மை பொதுவாக ஆன்மீக முன்னேற்றம் நாடுவோர் ஒரு ஸ்தலம் தேர்ந்து எடுத்து குறித்த சமயங்களில் தியானம் கூட நன்மைகள் ஏற்படும் என அறிவுரை அளித்தோம்.