முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறநெறி நாடில் இடியும் முழக்கமும் ஈசர் உருவம் கடிமலர்க் குன்றம் மலையது தானே.
விளக்கம்:
படைப்புக்கள் அனைத்திற்கும் ஆரம்பம் எப்போது அழிவு எப்போது என்பதை முன்னமே தீர்மானித்து அதன்படியே படைத்து அருளுபவனும் தன்னை வணங்கி வழிபடும் அடியவருக்கும் அடியவனாக இருப்பவனும் இறைவனின் தன்மையை உணர்த்தும் அறங்களையும் நெறிகளையும் தேடினால் அது வேதங்களே ஆகும். அத்தகைய இறைவனின் உருவம் எப்படி இருக்கும் என்று தேடினால் இடி இடிக்கும் போது வானத்தில் தோன்றும் மின்னல் ஒளியும் அவன் உருவமே. அப்போது கேட்கும் இடியின் ஓசையும் அவன் உருவமே ஆகும். இப்படி அனைத்தையும் தன் உருவமாகக் கொண்டிருக்கும் இறைவனின் இருப்பிடம் எது என்று தேடினால் வாசனை மிக்க மலர்கள் சூழ்ந்த சோலைகளைக் கொண்ட குன்றுகளெல்லாம் அவன் இருப்பிடமே அந்தக் குன்றுகள் இருக்கும் மாபெரும் மலைகளும் அவன் இருப்பிடமே.
வானத்திலிருக்கும் பெருத்த மழை மேகம் போல மாயையால் குறைபட்டுக் கிடக்கும் உயிர்கள் அனைத்திற்கும் அவற்றின் பிறவியை அழித்து முக்தியை அருளுபவனும் மந்திரத்தால் ஏவப்பட்ட காட்டு யானையின் உடலைப் பிளந்து தனது ஆடையாக உடுத்திக்கொண்ட இறைவனின் புகழ்களைப் புகழ்ந்து பாடினால் அவன் அருள் பெற்று அவனோடு இரண்டறக் கலந்து விடலாம்.
உள் விளக்கம்:
வானத்திலிருக்கும் பெரிய மழை மேகம் எப்படி வித்தியாசம் பார்க்காமல் அனைத்தின் மேலும் சரிசமமாக மழை பொழிய வைக்கின்றதோ அதுபோலவே இறைவன் மாபெரும் கருணையால் திருமால், பிரம்மன், தேவர்கள், மனிதர்கள் என்று மாயையால் குறைபட்டுக் கிடக்கும் அனைவரின் மாயையை அழித்து அவர்கள் உய்யுமாறு அருளுகின்றான். அப்படிப்பட்ட இறைவனை வெறும் மந்திரத்தினால் கட்டுப்படுத்திவிடலாம் என்ற எண்ணி தாருகாவனத்திலிருந்த முனிவர்கள் தங்களின் ஒன்றுபட்ட சக்தியைக்கொண்டு யாகக் குண்டத்திலிருந்து மந்திரசக்தியால் தோன்றுவித்த காட்டு யானையை இறைவனை நோக்கி ஏவினார்கள். இறைவனோ அந்த காட்டு யானையைக் காடே அதிரும்படி கதற இரண்டாகப் பிளந்து அதன் தோலை தனது மேலாடையாக போர்த்தியபடி அதன் தலைமேல் கால் வைத்து கஜசம்ஹாரமூர்த்தியாக காட்சி தந்து அவர்களின் அறியாமையை அகற்றி அருளினான். இப்படி தன்னை எதிர்ப்பவர்களுக்கும் சரிசமமாக அருள் வழங்கி ஒரு தலைசிறந்த அரசனப் போல உயிர்களைப் பாதுகாக்கும் இறைவனின் புகழ்களைப் புகழ்ந்து பாடினால் அவன் அருள் பெற்று முக்தியடையலாம்.
இறைவன் தன்னை உண்மையான பக்தியோடு வணங்குபவர்களின் உள்ளத்தில் எழுந்தருளுபவன். அவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் மாயக்காரன் அவர்களின் அன்பு கொண்ட உள்ளத்தையே தனக்கு ஒரு நல்ல இடமாக எண்ணி அதிலேயே வசிப்பவன். அவர்களின் மனதில் நினைத்ததையெல்லாம் அறிந்தவன். அப்படிப்பட்ட இறைவனை உண்மையான பக்தியோடு நினைக்காமல் என் மேல் இறைவனுக்கு அன்பில்லை என்று அறியாமையால் பலர் புலம்புகின்றார்கள். இந்தப் பிறவியைவிட்டு முக்தியடைய வேண்டும் என்ற ஆசையில் இறைவன் மீது உண்மையான பக்தியோடு நிற்கின்றவர்களின் பக்கத்திலேயே அவர்களைப் பாதுகாத்துக் கொண்டு நிற்கின்றான் இறைவன்.
சர்வ வல்லமை படைத்தவனும் அக்கினிக்குத் தலைவனானவனும் காட்டு யானைத் தோலை ஆடையாகப் போர்த்தியவனும் மும்மலங்கள் தனது அடியவர்களைப் பாதிக்காது நில் என்று கட்டளையிட்டவனும் அனைத்து உயிர்களுக்கும் சரிசமமாக நீதியை வழங்குபவனுமாகிய எம்பெருமான் இறைவனை அறியாமையால் இல்லை என்று கூறாதீர்கள். வானத்து தேவர்கள் முதல் அனைத்து உயிர்களுக்கும் இரவும் பகலும் இடையறாது அருளை வழங்கி நிற்கின்றான் இறைவன்.
உள் விளக்கம்:
இறைவன் சர்வ வல்லமை படைத்தவன். குண்டலினி அக்கினி, உணவை செரிக்கச் செய்யும் ஜடராக்கினி, கடல் நீரை கரை தாண்டாமல் வைத்திருக்கும் படபாக்கினி, உலகின் தட்பவெப்பத்தைக் கட்டுப்படுத்தும் பூமியின் மைய அக்கினி, எரிமலைக் குழம்பாக வெடித்துவரும் அக்கினி முதலாகிய அனைத்து அக்கினிக்களுக்கும் இறைவன் தலைவன். உயிர்களின் உடலில் குண்டலினி அக்கினி இருக்கும் மூலாதாரத்தில்தான் அவர்களின் நல்கர்மாக்கள் இருக்கின்றன. அவற்றை மேலெழும்பவிடாமல் மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஆகியவை யானை போன்ற கனத்துடன் தடுத்துக்கொண்டு எளிதில் அசைக்க முடியாமல் (எளிதில் தீர்க்க முடியாமல்) இருக்கின்றன. பிறவியை விட்டு நீங்கி இறைவனை அடையவேண்டும் என்ற உண்மையான பக்தியோடு இறைவனை வணங்கும் அடியவர்களின் முக்திக்கு உதவும் நல்கர்மாக்களை மேலெழுப்ப யானை போன்ற மும்மலங்களை இறைவன் தனது இடையில் ஆடையாக அணிந்துகொண்டு அவை தம் அடியவர்களின் முத்தியடையும் வழியைத் தடுக்காது நில்லுங்கள் என்று கட்டளையிட்டு தம் அடியவர்களை பிறவிப் பிணியிலிருந்து காப்பாற்றுகின்றவன் இறைவன். இப்படி அனைத்திற்கும் நீதியாகவும் மாபெரும் கருணையாளனாகவும் இருக்கும் இறைவனை அறியாமையால் உணராதிருந்து அவனை இல்லை என்று கூறவேண்டாம். அவன் இரவும் பகலும் எப்போதும் தம்மை நாடிவரும் உயிர்களுக்கு அருளை இடைவிடாமல் அருளிக்கொண்டேதான் இருக்கின்றான்.
இறைவனின் பெருமைகளை எப்போதும் போற்றிப் பாடியும் அவன் புகழ்களை வாழ்த்தியும் அவனது திருவடியை எண்ணி வணங்குபவர்கள் மிகப்பெரும் அருட் செல்வம் சேர்ப்பவர்கள். உலகத்திலுள்ள செல்வங்களே பெரிது என்ற மாயையின் மயக்கத்தில் இருக்காமல் இறைவனின் திருவடியை எண்ணிப்பெறும் அருட் செல்வமே உண்மையானது என்று உணர்ந்தவர்கள் செல்லும் வழிகளிலெல்லாம் அவர்களைக் காத்து அவர்களோடு இருக்கின்றான் இறைவன்.
பிறப்பில்லாதவனும் பிறை நிலாவைத் தலைமுடியில் சூடியவனும் மிகப்பெரும் அருளாளனும் இறப்பில்லாதவனும் எல்லோருக்கும் இன்பங்களை வழங்கி அருளுபவனும் எவரையும் விட்டு எப்போதும் நீங்காதவனுமாகிய எம்பெருமான் சதாசிவமூர்த்தியைத் தினமும் வணங்குங்கள். அவனை வணங்கி வந்தால் மாயையால் மறைக்கப்பட்டிருக்கும் சிற்றறிவு நீங்கி இறைவனின் திருவடியை என்றும் மறக்காத பேரறிவைப் பெறலாம்.
அனைத்து உயிர்களையும் விட்டு நீங்காமல் அவர்களுடனேயே என்றும் நிற்கின்றவனாகிய இறைவனைத் தினமும் வணங்குங்கள். அவ்வாறு வணங்கி வந்தால் உலகம் மற்றும் அண்டசராசரங்கள் முழுவதும் படர்ந்து விரிந்து இருப்பவனும் அவற்றையும் தாண்டி நிற்பவனும் உயிர்களின் தலையுச்சியிலிருக்கும் ஏழாவது சக்கரமான சகஸ்ரரதளத்தின் ஆயிரம் தாமரை இதழ்களில் வசிப்பவனுமாகிய எம்பெருமான் சதாசிவமூர்த்தியுடன் கலந்து அவன் திருவடியை எப்போதும் காணும் புண்ணியத்தை அடையலாம்.
சந்தி எனத்தக்க தாமரை வான்முகத்து அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று நந்தியை நாளும் வணங்கப் படும்அவர் புந்தியின் உள்ளே புகுந்துநின் றானே.
விளக்கம்:
சூரியன் மறையும் மாலை நேரத்தில் தெரியும் வானத்தின் நிறம் போன்ற செந்தாமரை மலர் விரிந்து தெரியும் அழகைப் போன்ற முகத்தை உடையவரும் முடிவென்பதே இல்லாதவருமான எம்பெருமான் சதாசிவமூர்த்தியின் அருள் தமக்கே வேண்டும் என்று பக்தியோடு தம்முடைய குருவை நாளும் வணங்கி வருபவர்களின் எண்ணத்தில் இறைவன் உறைந்து இருக்கின்றான்.
அனைத்து உயிர்களுடனும் எங்கும் எதிலும் கலந்து இருப்பவனும் உலக வழக்கங்களுக்கு மாறுபட்டு நிற்கின்றவனும் அனைத்திற்கும் ஆரம்பமாகவும் அவற்றின் முடிவாகவும் இருப்பவனும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இந்திரனுக்கும் தலைவனாக இருப்பவனுமாகிய எம்பெருமான் சதாசிவமூர்த்தி தன்னை உண்மையான பக்தியோடு வணங்கி நிற்பவர்கள் செல்லும் வழிகளிலெல்லாம் அவர்களைப் பாதுகாத்துக்கொண்டு துணையாக வருகின்றான்.
இறைவனை எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பதிலிருந்து மாறாத குணமுடைய அடியவர்களின் மனதில் ஆணி அடித்தது போல அமர்ந்து இருக்கும் எம்பெருமான் சதாசிவமூர்த்தியே உங்களைக் காண வேண்டும் என்ற ஆசையால் துடிக்கும் எமது முன் நீங்கள் எழுந்தருள வேண்டும். நீங்கள் எம் முன் எழுந்தருளிவிட்டால் உங்களை உடனே எம்மோடு ஆரத்தழுவிக்கொள்வதில் யாம் வெட்கப் படமாட்டோம்.