பாடல் #600

பாடல் #600: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றதுவும் பார்க்கலு மாமே.

விளக்கம்:

இரண்டு கண்களையும் மூடி மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்து ஞானக் கண்ணில் (புருவ மத்தியில்) உள்ள ஜோதியைப் பார்த்து அதிலேயே மனதை வைத்தால் தலைக்கு மேல் ஆகாய கங்கை பாய்வது போன்ற உணர்வுடன் தானே தோன்றிய சுயம்புவாகிய சிவனையும் பார்க்கலாம்.

பாடல் #601

பாடல் #601: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப் பூவையே.

விளக்கம்:

உடலோடு கலந்துள்ள உயிரை ஒரு பொழுதும் நினைக்காதவர்கள் உயிருக்கு உயிராய் இருக்கும் சிவனை ஒரு பொழுதும் நினைக்காதவர்கள் சிவனின் மேல் சிந்தனையை ஒரு பொழுதும் வைக்காதவர்கள் நெற்றிக்கு நடுவில் உள்ள சக்தியை ஒரு பொழுதும் உணர மாட்டார்கள்.

பாடல் #602

பாடல் #602: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.

விளக்கம்:

தியானத்தின் மூலம் மனதில் இருக்கும் ஒளியை பிரகாசமாக மேல் நோக்கி செலுத்தி கோபமாகிய அக்கினியை வெளியே போகும்படி செய்து அனைத்தையும் அறிந்து இருக்கும் சிவ ஒளியை பற்றியிருக்கும் சுழுமுனை (முதுகுத்தண்டு) என்னும் திரியை தியானத்தின் மூலம் தூண்டிவிட மனதில் இருக்கும் சிவம் என்னும் ஓளி அணையாமல் இருக்கும்.

பாடல் #603

பாடல் #603: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணா ரமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடியில் உள்ளே ஒளிபெற நோக்கில்
கண்ணாடியில் போலக் கலந்துநின் றானே.

விளக்கம்:

எண்ணிலடங்காத ஆண்டுகள் யோக நிலையில் இருந்தாலும் இறைவனை வெளியே கண்டு அறிந்தவர்கள் யாரும் இல்லை. உள்ளுக்குள் இருக்கும் சகஸ்ரதளத்திலுள்ள ஒளியின் மேல் எண்ணத்தை வைத்து தியானித்தால் கண்ணாடியில் உருவம் கலந்து இருப்பது போல உள்ளுக்குள் கலந்து இருக்கும் இறைவனை உணரலாம்.

பாடல் #604

பாடல் #604: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனுமவ னாமே.

விளக்கம்:

இரண்டு கண்களையும் புருவ மத்தியிலுள்ள மூக்கின் நுனியில் வைத்து தியானம் செய்தால் உடலில் இருக்கும் சோர்வு நீங்கிவிடும். உடலுக்கு அழிவும் வராது. மனது ஒரு நிலையாக இருக்கும். உலக உணர்வு இருக்காது. தன்னை மறந்த நிலையில் உடல் இருக்கும். எதன் மீதும் நாட்டம் வராது. இந்த நிலையிலிருப்பவர்கள் சிவ நிலையில் இருப்பவர்களாவர்.

பாடல் #605

பாடல் #605: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.

விளக்கம்:

இரண்டு கண்களையும் புருவ மத்தியிலுள்ள மூக்கின் மேல் வைத்து உள்ளிழுத்த மூச்சுக்காற்றை வெளியே விடாமல் அடக்கி வைத்து கர்மாவினால் வரும் உடல் மற்றும் மன துன்பங்கள் நீங்க வேண்டி தியானம் செய்தால் அதன் பயனாக உடலுக்குத் துன்பம் எதுவும் வராது. மனதில் எந்த பயமும் இருக்காது.

பாடல் #606

பாடல் #606: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

மணிகடல் யானை வளர்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.

விளக்கம்:

தியானம் செய்வதால் உள்ளுக்குள் கேட்கக்கூடிய பத்துவித ஓசைகளாகிய 1. மணியோசை 2. கடல் அலையோசை 3. யானை பிளிறும் ஓசை 4. புல்லாங்குழலோசை 5. இடியோசை 6. வண்டின் ரீங்கார ஓசை 7. தும்பியின் முரலோசை 8. சங்கொலி 9. பேரிகை ஓசை 10. யாழிசை ஆகிய ஓசைகள் அனைத்தும் சிவனை பணிந்து தியானம் செய்பவர்களுக்கு மட்டுமே உருவாகும்.

பாடல் #607

பாடல் #607: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணையும் அண்டரண் டத்துச்
சுடர்மனு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.

விளக்கம்:

கடலின் அலையோசை மேகத்தின் இடியோசை யானை பிளிறும் ஓசை ஆகிய வன்மையான ஓசைகளில் ஆரம்பித்து வீணையின் ஓசை அண்டமெல்லாம் கலந்து இருக்கும் ஓம் எனும் ஓசை புல்லாங்குழலின் மெல்லிய ஓசை சிறிய துளையுடைய சங்கொலி ஆகிய மென்மையான ஓசைகளில் முடியும் இந்த ஓசைகளை மன உறுதியோடு தியானம் செய்யும் யோகியர்களால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.

பாடல் #608

பாடல் #608: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை யதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசனை உணரவல் லார்க்கே.

விளக்கம்:

மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து சிவபெருமானை உணரக் கூடியவர்களின் உள்ளிருந்து வெளிவரும் ஓசையானது பூவிலிருந்து வெளிவரும் நறுமணம் போலவும் சிவபெருமானின் ஓசை என்னும் சொரூபமாகவும் தேவர்கள் முதலிய அனைத்து உயிர்களுக்குள்ளும் பாசம் என்னும் உணர்வாகவும் அந்தப் பாசத்தின் கருணையால் உயிருக்கு உயிராகவும் கலந்து நிற்கும்.

பாடல் #609

பாடல் #609: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.

விளக்கம்:

தியானத்தினால் உள்ளிருந்து வெளிவரும் ஓசையின் இறுதியில் உண்மை என்னும் இறை சக்தியை உணரலாம். நல்ல யோகத்தினால் இறைவனுடன் கலந்து இருப்பதை உணரலாம். இறைவனைத் தவிர வேறு சிந்தனை இருக்காது. கர்மங்கள் நீங்கித் தூய்மையான சிவனை உணரலாம்.