பாடல் #1445

பாடல் #1445: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

நாடு நகரமு நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெருமா னென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நாடு நகரமு நறறிருக கொயிலுந
தெடித திரிநது சிவபெருமா னெனறு
பாடுமின பாடிப பணிமின பணிநதபின
கூடிய நெஞசததுக கொயிலாயக கொளவனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நாடும் நகரமும் நல் திரு கோயிலும்
தேடி திரிந்து சிவ பெருமான் என்று
பாடுமின் பாடி பணிமின் பணிந்த பின்
கூடிய நெஞ்சத்து கோயில் ஆய் கொள்வனே.

பதப்பொருள்:

நாடும் (உலகமெங்கும் இருக்கின்ற அனைத்து நாடுகளிலும்) நகரமும் (அதிலுள்ள நகரங்களிலும்) நல் (உயிர்களின் நன்மைக்காக அமைக்கப் பட்டுள்ள) திரு (இறைவன் வீற்றிருக்கும்) கோயிலும் (கோயில்களையும்)
தேடி (தேடி அலைந்து) திரிந்து (திரிந்து கண்டு பிடித்து) சிவ (அங்கு வீற்றிருக்கின்ற இறை சக்தியை சிவம்) பெருமான் (எனும் பரம்பொருள்) என்று (என்று எண்ணி)
பாடுமின் (இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடுங்கள்) பாடி (பாடி கொண்டே) பணிமின் (இறைவனைப் பணிந்து தொழுது வணங்குங்கள்) பணிந்த (அவ்வாறு வணங்கிய) பின் (பிறகு)
கூடிய (அந்தக் கோயிலில் வீற்றிருக்கும் இறை சக்தியும் பக்தர்களோடு ஒன்றாக சேர்ந்து) நெஞ்சத்து (பக்தர்களின் நெஞ்சத்தையே) கோயில் (தமக்கு விருப்பமான கோயிலாக) ஆய் (ஆட்கொண்டு) கொள்வனே (அங்கே வீற்றிருக்கும்).

விளக்கம்:

உலகமெங்கும் இருக்கின்ற அனைத்து நாடுகளிலும் அதிலுள்ள நகரங்களிலும் உயிர்களின் நன்மைக்காக அமைக்கப் பட்டுள்ள இறைவன் வீற்றிருக்கும் கோயில்களை தேடி அலைந்து திரிந்து கண்டு பிடித்து அங்கு வீற்றிருக்கின்ற இறை சக்தியை சிவம் எனும் பரம்பொருளாகவே எண்ணி இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடி கொண்டே இறைவனைப் பணிந்து தொழுது வணங்குங்கள். அவ்வாறு வணங்கிய பிறகு அந்தக் கோயிலில் வீற்றிருக்கும் இறை சக்தியும் வணங்கித் தொழுத பக்தர்களோடு ஒன்றாக சேர்ந்து அந்த பக்தர்களின் நெஞ்சத்தையே தமக்கு விருப்பமான கோயிலாக ஆட்கொண்டு அங்கே வீற்றிருக்கும்.

கருத்து: ஆலயங்களுக்கு சென்று பக்தியால் போற்றி வணங்கித் தொழுது இறைவனை அடையும் சரியை எனும் முறை இதுவே ஆகும்.

பாடல் #1446

பாடல் #1446: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

பத்தர் சரிதைப் படுவார் கிரிகையோ
ரத்தகு கொண்டா ரருள்வேடத் தாகுவோர்
சுத்த வியமாதி சாக்கரத் தூயோகர்
சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பததர சரிதைப படுவார கிரிகையொ
ரததகு கொணடா ரருளவெடத தாகுவொர
சுதத வியமாதி சாககரத தூயொகர
சிததர சிவஞானஞ செனறெயது வொரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பக்தர் சரியை படுவார் கிரியையோர்
அத் தகு கொண்டார் அருள் வேடத்து ஆகுவோர்
சுத்த வியம் ஆதி சாக்கரத்து தூ யோகர்
சித்தர் சிவ ஞானம் சென்று எய்துவோர்களே.

பதப்பொருள்:

பக்தர் (பக்தர்கள் என்பவர்) சரியை (இறைவனை அடையும் வழிமுறையான சரியையை) படுவார் (மேற் கொண்டு) கிரியையோர் (கிரியைகளை செய்கின்றவர்கள்)
அத் (அந்த கிரியையின் செயலின்) தகு (தன்மையையே) கொண்டார் (தாமும் கொண்டவர்கள்) அருள் (அதன் பயனால் அருள்) வேடத்து (வடிவத்தில் இறை தன்மையாகவே) ஆகுவோர் (ஆகின்றார்கள்)
சுத்த (அதனால் மும்மலங்களும் நீங்கி சுத்தமாகிய) வியம் (தமது உடலுக்குள்ளே) ஆதி (ஆதியிலிருந்தே இருக்கின்ற) சாக்கரத்து (ஆன்மாவானது எது என்பதை உணர்ந்து கொண்டு) தூ (தூய்மையான) யோகர் (யோகிகள் ஆகின்றார்கள்)
சித்தர் (அதன் பிறகு சித்தர்கள் என்று) சிவ (பரம்பொருளான சிவத்தின்) ஞானம் (உண்மை ஞானத்தை) சென்று (தமக்குள்ளே சென்று) எய்துவோர்களே (உணர்ந்து அடைபவர்கள் ஆகின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை அடையும் வழிமுறையான சரியையை மேற் கொண்டு கிரியைகளை செய்கின்றவர்களே பக்தர்கள் ஆவார்கள். அந்த கிரியைகளின் செயலின் தன்மையையே தாமும் அடைந்து அதன் பயனால் அருள் வடிவத்தில் இறை தன்மையாகவே அவர்கள் ஆகின்றார்கள். அதனால் மும்மலங்களும் நீங்கி சுத்தமாகிய தமது உடலுக்குள்ளே ஆதியிலிருந்தே இருக்கின்ற ஆன்மாவானது எது என்பதை உணர்ந்து கொண்டு தூய்மையான யோகிகள் ஆகின்றார்கள். அதன் பிறகு பரம்பொருளான சிவத்தின் உண்மை ஞானத்தை தமக்குள்ளே சென்று உணர்ந்து அடைந்து சித்தர்கள் ஆகின்றார்கள்.

கருத்து: இறைவனை அடையும் வழிமுறையான சரியையை முறைப்படி கடை பிடிப்பவர்கள் அதனாலேயே யோகியர்களாகவும் சித்தர்களாகவும் ஆக முடியும்.

பாடல் #1447

பாடல் #1447: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

சார்ந்தமெஞ் ஞானத்தோர் தானவ னாயற்றோர்
சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோ
ராய்ந்த கிரிகையோ ரர்சனை தப்பாதோர்
நேர்ந்த சரிதையோர் நீணிலத் தோர்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாரநதமெஞ ஞானததொர தானவ னாயறறோர
செரநதவெண யொகததர சிததர சமாதியொ
ராயநத கிரிகையொ ரரசனை தபபாதொர
நெரநத சரிதையொர நீணிலத தொரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சார்ந்த மெய் ஞானத்தோர் தான் அவன் ஆய் அற்றோர்
சேர்ந்த எண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள் நிலத்தோர்களே.

பதப்பொருள்:

சார்ந்த (இறைவனை சார்ந்து இருந்து) மெய் (உண்மை) ஞானத்தோர் (ஞானத்தை அடைந்தவர்கள்) தான் (தாமே) அவன் (இறைவனாக) ஆய் (ஆகி) அற்றோர் (தான் எனும் தன்மை இல்லாதவர்கள் ஆகின்றார்கள்)
சேர்ந்த (இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும்) எண் (எண்ணங்களால்) யோகத்தர் (யோகத்தில் மேல் நிலை பெற்ற யோகியர்கள்) சித்தர் (சித்தர்களாக ஆகி) சமாதியோர் (சமாதி நிலையில் இருக்கின்றார்கள்)
ஆய்ந்த (இறைவனை அடைவதற்கான நுட்பங்களை ஆராய்ந்து அறிந்து கொண்டு) கிரியையோர் (அதன் படியே கிரியையை செய்கின்றவர்கள்) அருச்சனை (பூசைகளை) தப்பாதோர் (முறைப்படி தவறாமல் செய்கின்றார்கள்)
நேர்ந்த (இறைவனை அடைவதையே குறிக்கோளாக கொண்டு) சரியையோர் (சரியையை செய்கின்றவர்கள்) நீள் (நீண்ட காலம்) நிலத்தோர்களே (இந்த உலகத்திலேயே இருக்கின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை சார்ந்து இருந்து உண்மை ஞானத்தை அடைந்தவர்கள் தாமே இறைவனாக ஆகி தான் எனும் தன்மை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும் எண்ணங்களால் யோகத்தில் மேல் நிலை பெற்ற யோகியர்கள் சித்தர்களாக ஆகி சமாதி நிலையில் இருக்கின்றார்கள். இறைவனை அடைவதற்கான நுட்பங்களை ஆராய்ந்து அறிந்து கொண்டு அதன் படியே கிரியையை செய்கின்றவர்கள் அதற்காக செய்கின்ற பூசைகளை முறைப்படி தவறாமல் செய்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இறைவனை அடைவதையே குறிக்கோளாக கொண்டு சரியையை செய்கின்றவர்கள் நீண்ட காலம் இந்த உலகத்திலேயே இருக்கின்றார்கள்.

பாடல் #1448

பாடல் #1448: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

கிரிகையில் யோகங் கிளர்ஞான பூசை
யரிய சிவனுரு வமா மரூபந்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
யுரியன நேயத் துயர்பூசை யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கிரிகையில யொகங கிளரஞான பூசை
யரிய சிவனுரு வமா மரூபந
தெரியும பருவததுத தெரநதிடும பூசை
யுரியன நெயத துயரபூசை யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கிரியையில் யோகம் கிளர் ஞான பூசை
அரிய சிவன் உருவம் ஆம் அரூபம்
தெரியும் பருவத்து தேர்ந்திடும் பூசை
உரியன நேயத்து உயர் பூசை ஆமே.

பதப்பொருள்:

கிரியையில் (கிரியையில் வெளிப்புறமாக செய்யப்படும் பூசைகளை) யோகம் (எண்ணத்தால் யோகத்தில் செய்வது) கிளர் (தமக்குள் இருக்கும் அறிவை கிளர்ச்சி பெற்று எழுப்பும்) ஞான (உயர்வான ஞான) பூசை (பூசையாகும்)
அரிய (அதனால் கிடைப்பதற்கு மிகவும் அரியதான) சிவன் (சிவ பரம்பொருளின்) உருவம் (உண்மை உருவம்) ஆம் (ஆக இருக்கின்ற) அரூபம் (உருவமே இல்லாத அரூப நிலையை)
தெரியும் (அறிந்து கொள்ளும்) பருவத்து (பக்குவத்தை பெறும் படி செய்து) தேர்ந்திடும் (அதில் தேர்ச்சி பெற்ற) பூசை (பூசைக்கு)
உரியன (ஏற்றதாக இருப்பது) நேயத்து (இறைவன் மீது கொண்ட பேரன்பினால் செய்யப்படும்) உயர் (உயர்வான) பூசை (மானசீக பூசையே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

கிரியையில் வெளிப்புறமாக செய்யப்படும் பூசைகளை எண்ணத்தால் யோகத்தில் செய்து தமக்குள் இருக்கும் அறிவை கிளர்ச்சி பெற்று எழுப்பும் உயர்வான ஞான பூசையாகும். அதனால் கிடைப்பதற்கு மிகவும் அரியதான சிவ பரம்பொருளின் உண்மை உருவமாக இருக்கின்ற உருவமே இல்லாத அரூப நிலையை அறிந்து கொள்ளும் பக்குவத்தை பெறலாம். அந்த பக்குவத்தில் தேர்ச்சி பெற்ற பூசைக்கு ஏற்றதாக இருப்பது இறைவன் மீது கொண்ட பேரன்பினால் செய்யப்படும் உயர்வான மானசீக பூசையே ஆகும்.

பாடல் #1449

பாடல் #1449: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

சரிதாதி நான்குந் தகுஞான நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்த மாறும்
பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சரிதாதி நானகுந தகுஞான நானகும
விரிவான வெதாநத சிததாநத மாறும
பொருளா னதுநநதி பொனனகர பொநது
மருளாகு மாநதர வணஙகவைத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சரிதை ஆதி நான்கும் தகு ஞானம் நான்கும்
விரிவு ஆன வேத அந்தம் சித்த அந்தம் ஆறும்
பொருள் ஆனது நந்தி பொன் நகர் போந்து
மருள் ஆகும் மாந்தர் வணங்க வைத்தானே.

பதப்பொருள்:

சரிதை (சரியை) ஆதி (முதலாகிய) நான்கும் (இறைவனை அடைவதற்கான நான்கு வித வழிமுறைகளையும்) தகு (அவற்றை முயன்று செய்வதற்கு தேவையான) ஞானம் (அறிவாகிய) நான்கும் (நான்கு விதமான ஞானத்தையும்)
விரிவு (அந்த ஞானங்களின் விரிவாக) ஆன (இருக்கின்ற) வேத (வேதத்தின்) அந்தம் (எல்லையாகிய ஆறும்) சித்த (சித்தத்தின்) அந்தம் (எல்லையும் ஆகிய) ஆறும் (ஆறும் ஆகிய வழிமுறைகளையும்)
பொருள் (இவை அனைத்து முறைகளுக்கும் உண்மைப் பொருளாக) ஆனது (இருக்கின்றவனும்) நந்தி (குருநாதனாக இருக்கின்றவனும் ஆகிய இறைவன்) பொன் (தான் வீற்றிருக்கும் தங்கம் போன்ற) நகர் (தில்லை சிற்றம்பலத்தில்) போந்து (வந்து நுழையும் படி செய்து)
மருள் (அவனை அடையும் வழிமுறையை அறியாமல் மாயையில் சிக்கி சுழன்று கொண்டு) ஆகும் (இருக்கின்ற) மாந்தர் (மனிதர்களை) வணங்க (தம்மை வணங்கும் படி) வைத்தானே (செய்து அவர்களை ஆட்கொள்கிறான்).

விளக்கம்:

இறைவனை அடைவதற்கான சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு விதமான வழிமுறைகளுக்கும் அவற்றை செய்வதற்கு தேவையான அறிவாகிய நான்கு விதமான ஞானங்களுக்கும் அந்த ஞானங்களின் விரிவாக இருக்கின்ற வேதத்தின் எல்லையாக இருக்கின்ற காபிலம் காணாதம் பாதஞ்சலம் அட்சபாதம் வியாசம் ஜைமினியம் ஆகிய ஆறு விதமான வழிமுறைகளுக்கும் சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற பைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம் பாசுபதம் சைவம் ஆகிய ஆறு விதமான வழிமுறைகளுக்கும் உண்மைப் பொருளாக இருக்கின்ற குருநாதனாகிய இறைவன் தம்மை அடையும் இந்த வழிமுறைகளை அறியாமல் மாயையில் சிக்கி சுழன்று கொண்டு இருக்கின்ற மனிதர்களை தான் வீற்றிருக்கும் தங்கம் போன்ற தில்லை சிற்றம்பலத்திற்குள் நுழைய வைத்து தம்மை வணங்கும் படி செய்து அவர்களை ஆட்கொள்கிறான்.

கருத்து: மாயையில் இருக்கின்ற மனிதர்களை சரியை முறையில் தான் வீற்றிருக்கும் கோயில்களுக்கு வரவைத்து தம்மை வணங்கும் படி செய்து அதன் பயனால் மாயையை நீக்கி ஞானத்தை கொடுத்து இறைவன் ஆட்கொள்கின்றான்.

பாடல் #1450

பாடல் #1450: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

சமயம் பலசுத்தி தன்செய லற்றிடு
மமையும் விசேடமு மரன்மந்திர சுத்தி
சமய நிருவாணங் கலாசுத்தி யாகு
மமைமன்னு ஞானமார்க் கம்மபி டேகமே.

பதம் பிரித்தது:

சமயம் பல சுத்தி தன் செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன் மந்திர சுத்தி
சமய நிருவாணம் கலா சுத்தி ஆகும்
அமை மன்னு ஞான மார்க்கம் அபிடேகமே.

பதப்பொருள்:

சமயம் (சமயம் சொல்கின்ற முறைப்படி அமைக்கப்பட்ட) பல (பலவிதமான கோயில்களுக்கு) சுத்தி (சென்று அவற்றை சுற்றி வந்தால்) தன் (தன்னுடைய முயற்சியால்) செயல் (எல்லா செயல்களும்) அற்றிடும் (நடக்கின்றன என்ற எண்ணம் நீங்கி விடும்)
அமையும் (அதன் பிறகு அந்த கோயில்களில் அமைந்து இருக்கின்ற) விசேடமும் (சிறப்பானதும்) அரன் (பாதுகாக்க கூடியதும் ஆகிய) மந்திர (மந்திர உச்சாடனங்களால்) சுத்தி (தம்மை தூய்மை படுத்தி விடும்)
சமய (அதன் பயனால் சமயம் என்று சொல்லப்படுகின்ற எந்த விதிமுறைகளும்) நிருவாணம் (அதனைச் சார்ந்த எண்ணங்களும் நீங்கும் படி) கலா (அறிவை) சுத்தி (சுத்தம்) ஆகும் (ஆக்கி விடும்)
அமை (அதன் பிறகு தன்னுடை சுத்தமான அறிவில்) மன்னு (இறைவனை நிலைபெறும் படி செய்து) ஞான (இறையருளால் பெற்ற ஞானத்தின்) மார்க்கம் (வழியில்) அபிடேகமே (தாம் செய்கின்ற அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றார்).

விளக்கம்:

சமயம் சொல்கின்ற முறைப்படி அமைக்கப்பட்ட பலவிதமான கோயில்களுக்கு சென்று அவற்றை சுற்றி வந்தால் தன்னுடைய முயற்சியால் எல்லா செயல்களும் நடக்கின்றன என்ற எண்ணம் நீங்கி அனைத்தும் இறைவனாலே நடக்கின்றது என்ற எண்ணம் வந்து விடும். அதன் பிறகு அந்த கோயில்களில் அமைந்து இருக்கின்ற சிறப்பானதும் பாதுகாக்க கூடியதும் ஆகிய மந்திர உச்சாடனங்கள் தம்மை தூய்மை படுத்தி விடும். அதன் பயனால் சமயம் என்று சொல்லப்படுகின்ற எந்த விதிமுறைகளும் அதனைச் சார்ந்த எண்ணங்களும் நீங்கும் படி அறிவை சுத்தம் செய்து விடும். அதன் பிறகு தன்னுடை சுத்தமான அறிவில் இறைவனை நிலைபெறும் படி செய்து இறையருளால் பெற்ற ஞானத்தின் வழியில் தாம் செய்கின்ற அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றார்.

குறிப்பு: இந்தப் பாடல் சுவடிகளில் இல்லாததால் பிற்சேர்க்கை பாடலாக இருக்கலாம்.

பாடல் #1438

பாடல் #1438: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)

வேடங் கடந்து விகிர்தன்றன் பால்மேவி
யாடம்பர மின்றி யாசாபாசஞ் செற்றுப்
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடுஞ் சிவபோதகர் சுத்த சைவரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெடங கடநது விகிரதனறன பாலமெவி
யாடமபர மினறி யாசாபாசஞ செறறுப
பாடொனறு பாசம பசுததுவம பாழபடச
சாடுஞ சிவபொதகர சுதத சைவரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வேடம் கடந்து விகிர்தன் தன் பால் மேவி
ஆடம்பரம் இன்றி ஆசா பாசம் செற்று
பாடு ஒன்று பாசம் பசுத்துவம் பாழ் பட
சாடும் சிவ போதகர் சுத்த சைவரே.

பதப்பொருள்:

வேடம் (வெளிப்புற வேடங்கள்) கடந்து (எதுவும் இன்றி) விகிர்தன் (உலக நியதிகளைக் கடந்து இருக்கின்ற இறைவன்) தன் (அவனின்) பால் (மேல் மட்டும்) மேவி (எண்ணங்களை வைத்து)
ஆடம்பரம் (எந்தவிதமான ஆடம்பரங்களும்) இன்றி (இல்லாமல்) ஆசா (ஆசைகளையும்) பாசம் (பாசங்களையும்) செற்று (நீக்கி விட்டு)
பாடு (பதியாகிய இறைவனை அடைவது மட்டுமே) ஒன்று (ஒரே குறிக்கோளாக கொண்டு) பாசம் (பாசத் தளைகளும்) பசுத்துவம் (இறைவனிடமிருந்து ஆன்மா தனித்து இருக்கும் பசு தத்துவமும்) பாழ் (அழிந்து) பட (போகும் படி செய்து)
சாடும் (இறைவனை மட்டுமே சார்ந்து இருந்து) சிவ (இறைவன் அருளிய) போதகர் (போதனைகளை முறைப்படி கடை பிடிப்பவரே) சுத்த (கடும் சுத்த) சைவரே (சைவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

வெளிப்புற வேடங்கள் எதுவும் இன்றி உலக நியதிகளைக் கடந்து இருக்கின்ற இறைவனின் மேல் மட்டும் எண்ணங்களை வைத்து எந்தவிதமான ஆடம்பரங்களும் இல்லாமல் ஆசைகளையும் பாசங்களையும் நீக்கி விட்டு பதியாகிய இறைவனை அடைவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாசத் தளைகளும் இறைவனிடமிருந்து ஆன்மா தனித்து இருக்கும் பசு தத்துவமும் அழிந்து போகும் படி செய்து இறைவனை மட்டுமே சார்ந்து இருந்து இறைவன் அருளிய போதனைகளை முறைப்படி கடை பிடிப்பவரே கடும் சுத்த சைவர்கள் ஆவார்கள்.

பாடல் #1439

பாடல் #1439: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)

உடலான வைந்தையு மோரொன்று மைந்து
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
படலான கேவலப் பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுற்றல் சித்தாந்த மார்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உடலான வைநதையு மொரொனறு மைநது
மடலான மாமாயை மறறுளள நீவப
படலான கெவலப பாசந துடைததுத
திடமாயத தனையுறறல சிததாநத மாரகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உடல் ஆன ஐந்தையும் ஓர் ஒன்று ஐந்து
மடல் ஆன மா மாயை மற்று உள்ள நீவ
படல் ஆன கேவல பாசம் துடைத்து
திடம் ஆய் தனை உற்றல் சித்தாந்த மார்கமே.

பதப்பொருள்:

உடல் (மனித உடலாக) ஆன (இருக்கின்ற) ஐந்தையும் (பஞ்ச பூதங்களையும் [நிலம் – தசைகளும் எலும்புகளும், நீர் – இரத்தமும், உமிழ் நீரும், நெருப்பு – உணவை செரிக்கும் சூடு, காற்று – மூச்சுக் காற்று, ஆகாயம் – மனம், புத்தி, அறிவு]) ஓர் (அதை ஒன்றின் மேல்) ஒன்று (ஒன்றாக மூடி இருக்கின்ற) ஐந்து (ஐந்து வகையான கோசங்களையும் [அன்ன மயம், பிராண மயம், மனோ மயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம்] கடந்து நின்று)
மடல் (அதையும் தாண்டி விரிந்து) ஆன (இருக்கின்ற) மாமாயை (சுத்த மாயையும்) மற்று (மற்றும்) உள்ள (இருக்கின்ற அனைத்து தத்துவங்களையும்) நீவ (தாண்டிச் சென்று)
படல் (இறைவனை அடைவதற்கு தடையாக) ஆன (இருக்கின்ற) கேவல (மாயையிலேயே மயங்கி இருக்கின்ற கேவல நிலைக்குக் காரணமாக இருக்கின்ற) பாசம் (பாசங்களையும்) துடைத்து (முழுவதுமாக நீக்கி விட்டு)
திடம் (உறுதி) ஆய் (ஆக) தனை (தனக்குள் இருக்கும் இறைவனை) உற்றல் (உற்று கவனித்த படியே இருப்பதே) சித்தாந்த (சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற) மார்கமே (கடும் சுத்த மார்க்கத்தின் வழியாகும்).

விளக்கம்:

மனித உடலாக இருக்கின்ற ஐந்து விதமான பஞ்ச பூதங்களையும் அதை ஒன்றின் மேல் ஒன்றாக மூடி இருக்கின்ற ஐந்து வகையான கோசங்களையும் கடந்து நின்று அதையும் தாண்டி விரிந்து இருக்கின்ற சுத்த மாயையும் மற்றும் இருக்கின்ற அனைத்து தத்துவங்களையும் தாண்டிச் சென்று இறைவனை அடைவதற்கு தடையாக மாயையிலேயே மயங்கி இருக்கின்ற கேவல நிலைக்குக் காரணமாக இருக்கின்ற பாசங்களையும் முழுவதுமாக நீக்கி விட்டு உறுதியாக தனக்குள் இருக்கும் இறைவனை மட்டுமே உற்று கவனித்த படியே இருப்பதே சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற கடும் சுத்த மார்க்கத்தின் வழியாகும்.

பஞ்ச பூதங்கள்:

  1. நிலம் – தசைகளும் எலும்புகளும்
  2. நீர் – இரத்தமும் உமிழ் நீரும்
  3. நெருப்பு – உணவை செரிக்கும் சூடு
  4. காற்று – மூச்சுக் காற்று
  5. ஆகாயம் – மனம் புத்தி அறிவு

பஞ்ச கோசங்கள்:

  1. அன்ன மய கோசம் – உணவால் ஆகிய உறை
  2. பிராண மய கோசம் – காற்றால் ஆகிய உறை
  3. மனோ மய கோசம் – மனம் / எண்ணங்களால் ஆகிய உறை
  4. விஞ்ஞான மய கோசம் – அறிவு / புத்தி ஆகிய உறை
  5. ஆனந்த மய கோசம் – பேரின்பத்தால் ஆகிய உறை

பாடல் #1440

பாடல் #1440: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)

சுத்தஞ் சிவனுரை தானதுட் டோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூல
மத்தகை யான்மா வரனை யடைந்தற்றாற்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சுததஞ சிவனுரை தானதுட டொயாமல
முததர பதபபொருள முததிவித தாமூல
மததகை யானமா வரனை யடைநதறறாற
சுதத சிவமாவ ரெசுதத சைவரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சுத்த சிவன் உரை தான் அது உட் ஓயாமல்
முத்தர் பத பொருள் முத்தி வித்து ஆம் மூலம்
அத்தகை ஆன்மா அரனை அடைந்து அற்றால்
சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே.

பதப்பொருள்:

சுத்த (மாசு இல்லாத பரம்பொருளாகிய) சிவன் (இறைவன்) உரை (சொல்லி அருளிய போதனைகளை) தான் (தமக்கு) அது (அந்த போதனைகளை) உட் (உள்ளே வைத்து) ஓயாமல் (ஓயாமல் அவற்றை சிந்தித்து ஆராய்ந்து)
முத்தர் (முத்தி நிலைக்கு) பத (இறைவன் அருளிய போதனைகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளின்) பொருள் (பொருளும்) முத்தி (முத்தி நிலைக்கு) வித்து (விதை) ஆம் (ஆக இருக்கின்றதை உணர்ந்து அதன் மூலம்) மூலம் (முக்திக்கு மூலப் பொருளாக இருக்கின்ற இறைவனின்)
அத்தகை (தன்மையை தானும் பெற்ற) ஆன்மா (சாதகரின் ஆன்மாவானது) அரனை (இறைவனை) அடைந்து (சென்று அடைந்து) அற்றால் (அவன் அருளால்)
சுத்த (மாசு இல்லாத) சிவம் (சிவம் எனும் பரம்பொருளாக) ஆவரே (தாமும் ஆகி இருப்பவர்களே) சுத்த (கடும் சுத்த) சைவரே (சைவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

மாசு இல்லாத பரம்பொருளாகிய இறைவன் பாடல் #1438 இல் உள்ளபடி சொல்லி அருளிய போதனைகளை தமக்குள் உள்வாங்கிக் கொண்டு அவற்றையே ஓயாமல் சிந்தித்து ஆராய்ந்து இறைவன் அருளிய போதனைகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளின் பொருளும் முத்தி நிலைக்கு விதையாக இருக்கின்றதை உணர்ந்து அதன் மூலம் முக்திக்கு மூலப் பொருளாக இருக்கின்ற இறைவனின் தன்மையை தானும் பெற்ற சாதகரின் ஆன்மாவானது இறைவனை சென்று அடைந்து அவன் அருளால் மாசு இல்லாத சிவம் எனும் பரம்பொருளாக தாமும் ஆகி இருப்பவர்களே கடும் சுத்த சைவர்கள் ஆவார்கள்.

பாடல் #1441

பாடல் #1441: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)

நானென்றுந் தானென்று நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந்
தானென்று நானென்ற தத்துவ நல்கலாற்
றானென்று நானென்றுஞ் சாற்றுகி லேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நானெனறுந தானெனறு நாடிநான சாரவெ
தானெனறு நானென றிரணடிலாத தறபதந
தானெனறு நானெனற தததுவ நலகலாற
றானெனறு நானெனறுஞ சாறறுகி லெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே
தான் என்று நான் என்று இரண்டு இலா தற் பதம்
தான் என்று நான் என்ற தத்துவம் நல்கலால்
தான் என்று நான் என்றும் சாற்றுகிலேனே.

பதப்பொருள்:

நான் (நானாகிய ஆன்மா) என்றும் (எங்கே இருக்கின்றது என்றும்) தான் (தனக்குள் இருக்கும் இறைவன்) என்றும் (எங்கே இருக்கின்றான் என்றும்) நாடி (தேடி அலைந்து) நான் (நான் இறைவனை) சாரவே (சார்ந்து இருக்கவே)
தான் (இறைவன்) என்று (என்றும்) நான் (ஆன்மா) என்று (என்றும்) இரண்டு (தனித்தனியாக இருக்கின்ற இரண்டுவிதமான தத்துவங்களும்) இலா (இல்லாமல்) தற் (தானே அனைத்துமாய் நிற்கின்ற) பதம் (பரம்பொருளாகிய இறைவன்)
தான் (தான்) என்று (என்றும்) நான் (நான்) என்ற (என்றும் ஆகிய அனைத்தும்) தத்துவம் (தாமாகவே இருக்கின்ற தத்துவத்தை) நல்கலால் (எனக்கு தந்து அருளியதால்)
தான் (இனி தான்) என்று (என்றும்) நான் (நான்) என்றும் (என்றும் ஆன்மாவையும் இறைவனையும் வேறு வேறு என்று பார்க்கின்ற தத்துவத்தை) சாற்றுகிலேனே (சார்ந்து நிற்காமல் அனைத்தும் இறைவன் ஒருவனே என்று இருக்கின்றேன்).

விளக்கம்:

நானாகிய ஆன்மா எங்கே இருக்கின்றது என்றும் தனக்குள் இருக்கும் இறைவன் எங்கே இருக்கின்றான் என்றும் தேடி அலைந்து நான் இறைவனை சார்ந்து இருக்கும் போது இறைவன் என்றும் ஆன்மா என்றும் தனித்தனியாக இருக்கின்ற இரண்டுவிதமான தத்துவங்களும் இல்லாமல் தானே அனைத்துமாய் நிற்கின்ற பரம்பொருளாகிய இறைவன் தான் என்றும் நான் என்றும் ஆகிய அனைத்தும் தாமாகவே இருக்கின்ற தத்துவத்தை எனக்கு தந்து அருளியதால் இனி தான் என்றும் நான் என்றும் ஆன்மாவையும் இறைவனையும் வேறு வேறு என்று பார்க்கின்ற தத்துவத்தை சார்ந்து நிற்காமல் அனைத்தும் இறைவன் ஒருவனே என்று இருக்கின்றேன்.