பாடல் #1145

பாடல் #1145: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

முச்சது ரத்தி லெழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்து மிடம்பெற வோடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ளொளிபெற
எச்சது ரத்து மிருந்தனள் தானே.

விளக்கம்:

பாடல் #1144 இல் உள்ளபடி மூன்று கோணங்களை உடைய சதுர அமைப்பில் இருக்கும் மூலாதார சக்கரத்திலிருந்து விதை போல முளைத்துக் கிளம்பிய குண்டலினி அக்னிச் சுடரானது ஒவ்வொரு சக்கரங்களுக்கும் சென்று அங்கிருந்து தொடர்ந்து மேலே சகஸ்ரதளத்தை நோக்கிச் சென்று தலை உச்சித் துளையைக் கடந்து பரவெளிக்குள் சென்று அங்கிருக்கும் ஜோதி வடிவான இறைவனை அடைந்து அவரிடமுள்ள ஒளியைப் பெற்று விட்டால் அந்த ஒளியானது இறைவியாக சாதகருக்குள் நுழைந்து அவருக்குள் இருக்கும் அனைத்து சக்கரங்களிலும் அமர்ந்து விடுவாள்.

பாடல் #1116

பாடல் #1116: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முக்தி யருளு முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமு முன்னுள்ள தாமே.

விளக்கம்:

இறைவனை உணர்ந்து அடைவதற்காக வழங்கப்பட்ட பிறவியை அவனைப் பற்றி எண்ணாமல் வீணாக பல பேச்சுகளை பேசிக் கழிக்கின்றனர் மூடத்தனமான உயிர்கள். இவர்கள் தம்மை நாடி சாதகம் செய்யும் அடியவர்களுக்கு முக்தியை அருளும் ஆதியான இறைவியை அறிந்து கொள்வதில்லை. அவளை அடைய முயன்று சாதகம் செய்யும் அடியவர்களுக்கு முன்பு அவள் முட்டையிட்டு அதைப் பார்வையிலேயே பார்த்து பொரிக்க வைக்கும் மீன்களைப் போல அடியவர்களை எப்போதும் கருணையோடு பார்த்துக் கொண்டே இருக்கும் ஞானக் கண்களோடும் அடியவர்களை தம்மிடம் வந்து சேரும்படி மீண்டும் மீண்டும் அழைக்கின்ற சிவந்த வாயோடும் அடியவர்களின் மேல் கருணையோடு பார்வையை வீசும் திருமுகத்தோடும் எதிர்வந்து அருள்புரிவாள்.

பாடல் #1117

பாடல் #1117: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

உள்ளத் திதையத்து நெஞ்சத் தொருமூன்றுள்
பிள்ளைத் தடமுள்ளே பேசப் பிறந்தது
வள்ளற் றிருவின் வயிற்றுனுள் மாமாயைக்
கள்ள வொளியின் கருத்தாகுங் கன்னியே.

விளக்கம்:

உயிர்கள் உலகத்தில் பிறவி எடுக்க தாயின் வயிற்றுக்குள் கருவாக உருவாகும் போதே அதனுடன் இறைவனின் சுத்த மாயையானது ஒளி அம்சமாகவும் இறைவியின் மாயை இருள் அம்சமாகவும் வந்து விடுகின்றது. இறைவியானவள் பிறவி எடுத்து வரும் பிள்ளையின் சித்தம், மனம், புத்தி ஆகிய மூன்றிலும் இறைவனைத் தெரிந்து கொள்ள முடியாதபடி மாயையால் மறைத்து வைத்திருக்கின்றாள். ஆதலால் இறைவனைத் தெரிந்து கொண்டு அவனை அடைய வேண்டும் என்று விரும்பும் சாதகர்கள் முதலில் இறைவியை எண்ணத்தில் வைத்து சாதகம் செய்தால் அவள் கருணையோடு இருளான மாயையை நீக்கி ஒளியான இறைவனை காட்டி அருளுவாள்.

கருத்து: வயிரவியானவள் உயிர்களுக்குள் இருக்கும் இறைவனை மறைத்து வைத்திருக்கும் தன்மையையும் அவளை எண்ணத்தில் வைத்து வழிபடுவதின் மூலம் இறைவனை அவள் வெளிப்படுத்தும் தன்மையையும் இப்பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1118

பாடல் #1118: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

கன்னியுங் கன்னி யழிந்திலன் காதலி
துன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவனு மங்குள
என்னேயிம் மாயை யிருளது தானே.

விளக்கம்:

பாடல் #1117 இல் உள்ளபடி ஒளியாகிய இறைவனை இறைவியின் இருள் தன்மை மறைத்து வைத்திருக்கின்றது. என்றும் கன்னியாகவே இருக்கும் இறைவியானவள் என்றும் அழியாத இறைவனுடன் கொண்ட அன்பினால் அவனது ஆசைப்படியே தனது எண்ணத்தாலேயே ஐந்து தெய்வங்களான பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியோரை உருவாக்கி அருளினாள். இறைவன் சொல்லியபடியே எழுதப்பட்ட தூய்மையான வேதங்கள் கூறுகின்ற ஒளி வடிவமான இறைவனும் இருள் தன்மை கொண்ட இறைவியோடு சேர்ந்து உயிர்களுக்குள் வீற்றிருக்கின்றான். ஆனாலும் அவனையே மறைக்கின்ற அளவிற்கு இறைவியின் இருள் தன்மை இருக்கின்றது. இந்த மாயையின் சக்திதான் எவ்வளவு பெரியது?

கருத்து: சுத்த மாயையின் ஒளி அம்சமான இறைவனும் மாயையின் இருள் அம்சமான இறைவியும் உயிர்களுடன் பிறவியிலேயே சேர்ந்து வந்துவிடுகின்றனர். ஆனாலும் இறைவியானவள் தனது இருள் தன்மையான மாயையால் உயிர்கள் தங்களின் கர்மங்களைத் தீர்த்துக் கொள்ளும் வரை இறைவனை மறைத்து அருளுகின்றாள். மேஜை மேல் வைக்கப்பட்ட விளக்கின் அடியிலேயே இருள் இருப்பதைப் போல உயிர்களின் தலை உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் ஒளியாக இருக்கும் இறைவனை மறைக்கின்ற இருளாக இறைவி இருக்கின்றாள்.

குறிப்பு: ஐந்து தெய்வங்களையும் தனது எண்ணத்தாலே உருவாக்கியதால் வேறு எந்த மாற்றமும் அடையாமல் இறைவி என்றும் கன்னியாகவே இருக்கின்றாள்.

பாடல் #1119

பாடல் #1119: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

இருளது சத்தி வெளியதெம் மண்ணல்
பொருளது புண்ணியர் போகத்து ளின்பந்
தெருளுறு சிந்தையைத் தெய்வமென் றெண்ணில்
அருளது செய்யுமெம் மாதிப் பிரானே.

விளக்கம்:

உயிர்களுக்குள் ஒளியை மறைக்கின்ற இருள் தன்மையாக ஆதி சக்தியான இறைவியும் இருளை அகற்றுகின்ற வெளிச்ச தன்மையாக எமது தலைவனாகிய இறைவனும் இருக்கிறார்கள். இந்த உண்மையை அறிந்து உணர்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்களாக இந்தப் பிறவியிலேயே பேரின்பத்தை பெறுகின்றார்கள். இந்த உண்மையை அறிந்து தெளிவு பெற்ற ஞானமே இறைவனை அடையும் வழியைக் காட்டும் என்று நம்பி முழுமையாகச் சரணடைந்தால் ஆதியாகிய இறைவன் அவர்களுக்குள் வெளிப்பட்டு அருள் புரிவான்.

பாடல் #1120

பாடல் #1120: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஆதி யனாதியு மாய பராசக்தி
பாதி பராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதுமென் னுள்ளத்து உடன்முகிழ்த் தாளே.

விளக்கம்:

அனைத்திற்கும் முதலாகவும் அனைத்துமாகவும் உலக இயக்கத்திற்கு காரணமாகவும் அசையா சக்தியான சதாசிவமூர்த்தியுடன் சரிபாதியான அசையும் சக்தியாகவும் அனைத்திற்கும் மேலானவளாகவும் அனைத்திற்குள்ளும் உறைந்து இருப்பவளுமாகிய வயிரவி தேவி அனைத்தையும் பொன் வளையல் போல வளைத்து இருக்கின்றாள். அழகான மங்கையாகவும் அமைதியாகவும் இறைவனோடு சேர்ந்து உயிர்களின் மனதை இயக்குபவளாகவும் நன்மையின் வடிவமாகவும் இருக்கின்ற அவளை எப்போதும் போற்றி வணங்கும் எமது உள்ளத்திற்குள்ளிருந்து வெளிப்பட்டு அருளினாள்.

பாடல் #1121

பாடல் #1121: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஓதிய வண்ணங் கலையி னுயர்கலை
ஆதியில் வேதமே யாமென் றறிகிலர்
சாதியும் பேதமுந் தத்துவ மாய்நிற்பள்
ஆதியென் றோதின ளாவின் கிழத்தியே.

விளக்கம்:

இறைவனை அடைவதற்கு உலகத்தோர் கற்றுக்கொள்கின்ற அனைத்து கல்விகளுக்கும் மேலான கல்வியாக ஆதியிலிருந்தே இருக்கின்ற வேதங்களாக இறைவியே இருப்பதை யாரும் அறியாமல் இருக்கின்றனர். சாதி, மதம், இனம், குலம் என்கிற பலவிதமான பிரிவினைகளாக பிரிந்து இருக்கும் அனைத்திற்கும் தத்துவமாகவும் அவளே இருக்கின்றாள் என்பதையும் அவளே அனைத்திற்கும் முதல்வியானவள் என்பதையும் ஆன்மாக்களின் தலைவியாகிய இறைவியே எமக்கு ஓதி அருளினாள்.

பாடல் #1122

பாடல் #1122: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஆவின் கிழத்திநல் லாவடு தண்டுறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடுந்
தேவின் கிழத்தி திருவாஞ் சிவமங்கை
மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.

விளக்கம்:

ஆன்மாக்களின் தலைவியானவளும் எல்லாவித நன்மைகளையும் அருளுகின்ற திரு ஆவடு திருத்தலத்தில் (திருவாவடுதுறை) வீற்றிக்கின்றவளும் உயிர்களின் சொல்லிற்குத் தலைவியானவளும் அவளுடைய நன்மைகளைப் புகழ்ந்து போற்றி பாடி வணங்குகின்றவர்களுக்கு செல்வத்திற்கெல்லாம் மேலான செல்வமாகிய முக்தியை அருளுகின்றவளும் சதாசிவமூர்த்தியின் சரிபாதியாக இருக்கும் துணைவியானவளும் அனைத்திலும் பரவி இருக்கின்ற அனைத்திற்கும் தலைவியானவளும் ஆகிய வயிரவி தேவியானவள் தம்மை முழுவதுமாக சரணடைகின்ற உயிர்களின் வினைகளை எல்லாம் தடுத்து ஆட்கொண்டு அருளினாள்.

குறிப்பு: இத்தலத்தில் தான் திருமூலர் 3000 வருடங்கள் தவமிருந்து திருமந்திரம் பாடல்களை இயற்றினார்.

பாடல் #1123

பாடல் #1123: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

வினைகடிந் தாருள்ளத் துள்ளொளி மேவித்
தனையடைந் தோர்க்கெல்லாந் தத்துவ மாய்நிற்பள்
எனையடி மைகொண்ட வேந்திழை யீசன்
கணவனைக் காண வனாதியு மாமே.

விளக்கம்:

பாடல் #1122 இல் உள்ளபடி தன்னை முழுவதுமாக சரணடைகின்ற உயிர்களின் வினைகளை எல்லாம் தடுத்து ஆட்கொண்ட இறைவி அவர்களின் உள்ளத்திற்குள் ஒளியாக பரவி இருக்கின்றாள். அவளை முழுவதுமாக சரணடைந்தவர்கள் அனைவருக்கும் உண்மைப் பொருளாகவும் முக்தியை அருளுபவளாகவும் அவளே நிற்கின்றாள். எம்மையும் தடுத்து ஆட்கொண்டு தமது அடிமையாக ஆக்கிக் கொண்ட அந்த இறைவியோடு இறைவனையும் அவளது சரிபாதி துணைவனாகக் கொண்டு பார்த்தால் அவனைப் போலவே அவளுக்கும் தொடக்கம் என்று ஒன்று இல்லாதவளாக இருக்கின்றாள்.

பாடல் #1124

பாடல் #1124: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஆதி யனாதி யகாரணி காரணி
வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற
சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும்
பாதி பராபரை பன்னிரண் டாதியே.

விளக்கம்:

ஆதிப் பரம்பொருளாகிய இறைவி அனைத்திற்கும் ஆரம்பமாகவும் தனக்கு என்று ஒரு ஆரம்பம் இல்லாமலும் அனைத்திற்கும் காரணமாகவும் தனக்கென்று ஒரு காரணம் இல்லாமலும் இருக்கின்றாள். இவளே வேதங்களை ஓதி முறைப்படி யாகம் வளர்க்கின்ற வேதியர்களுக்காக அவர்கள் ஓதுகின்ற வேதங்களின் தன்மையாகவும் பொருளாகவும் வீற்றிருந்து அவர்கள் ஓதுகின்ற முறைகளையும் அவர்களின் எண்ணிய உருவத்தையும் ஆராய்ந்து அவர்கள் வேண்டிய உருவத்திலேயே யாகத்தில் வந்து வீற்றிருந்து அருளுகின்றாள். அவளே அசையா சக்தியான சதாசிவமூர்த்தியின் பன்னிரண்டு அம்சங்களோடு சரிபாதியாக சேர்ந்தே நிற்கின்ற ஆதிசக்தியாக இருக்கின்றாள்.

குறிப்பு: ஆதிப் பரம்பொருளாகிய இறைவி உயிர்கள் இறைவனை அடைய முயற்சிக்கும் அனைத்து வகைகளிலும் அவரவர்கள் வேண்டிய உருவத்திலேயே வந்து இறைவனுடன் சரிபாதியாக வீற்றிருந்து அருளுகின்றாள்.