அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #56

2-8-2010 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பல இடங்களில் பலர் சித்தர்களை நாடி அவர்களை பல கேள்விகளைக் கேட்டு அதற்கு அவர்கள் அளித்த விடை தெளிவாகப் புரிவதில்லையே ஏன்?

பொதுவாக சித்தர்களின் பரிபாஷை (பேசும் மொழி) என்பது வேறு ஒரு அகராதியாகின்றது (மொழி இலக்கணம்). பொதுவாக மக்களின் குறை தீர்க்கவோ தவம் செய்யவோ சித்தர்கள் கீழ் இறங்கவில்லை என்பதேயாகும். அவரவர் தம் சுய மார்க்கம் அதாவது இறைவனை அடைவது அவர் நோக்கமாகும். சித்தர்களைக் கண்டு குறைகூறுவோர் தங்களுக்குச் சாதகமாக விடைகள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். இத்தகைய நிலையில் தொட்டும் தொடாது பட்டும் படாத ஓர் பாஷையில் விடையளிக்கின்றனர். இவ்விடை புரிந்து கொள்கின்றவர்களின் திறமையை பொருத்ததாகின்றதால் இதனை யாம் நம்பிக் கெட்டோம் என்கின்ற மனப்பான்மை வேண்டாம் அன்பர்களே. ஏனெனில் இதில் ஓர் பெரிய அர்த்தம் அடங்கியுள்ளது. சித்தர்கள் கூறுகின்றதில் வருத்தம் காணாது சித்தர்களும் துறவிகளும் ஜோதிடர்கள் அல்ல என்கின்றதை நீங்கள் உணர வேண்டும். சித்தர்கள் ஜோதிடத்தை அறிந்தவர்கள் என்பதில் குழப்பம் வேண்டாம். அதற்கும் மேலான காரியங்களை அறிந்தவர்கள் என்பதிலும் குழப்பம் இல்லை. முற்பிறவி, கர்ம நிலைகள், கர்ம பாக்கிகள், ஜென்மாந்திர பாவங்கள், தோஷங்கள், சாபங்கள், என்பதெல்லாம் அறிந்தவர் ஆவர். இருப்பினும் அவர் அளிக்கக்கூடியது தகுந்த பாத்திரத்தினர்களுக்கே (தகுதி உள்ளவர்களுக்கே). இதுவே உண்மை நிலையாகும். இருப்பினும் விடாது அவர்களை வேண்டிவர தமது நிலைகளை உணர சக்தி உண்டாகும் என்பதிலும் சந்தேகம் இல்லை. அதன்வழி பல நல்காரியங்கள் நடைபெறும் என்பதிலும் குழப்பம் இல்லை. கற்றோர்கள் அருகாமையில் நாம் அமர்ந்திருக்க நாமும் சிறிது கற்றுக் கொள்ளலாம் அல்லவா? இத்தகைய நிலையில் சித்தர்களுடன் பழகும் காலத்தில் நாம் பெறுவது ஞானமாகும் அறிவாகும் அதன்வழி அமைதியும் முன்னேற்றமும் ஆகும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #55

6-7-2010 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: தானங்கள் எனக் கூறினால் அன்னம், வஸ்திரம், கல்வி, மாங்கல்யம், இறுதிச் சடங்குகள் என்றெல்லாம் கூறினீர்களே இதற்கும் மேலான தானங்கள் ஏதும் இருக்கின்றதா?

பொதுவாக பூஜா பலன்களை தானமளிப்பது ஒரு சிறந்த தானமாகும். இருப்பினும் இதனை செய்வோர் குறைவாக உள்ளனர். ஏனெனில் பலன் பெறுதல் வேண்டும் என ஒரு சுயநலம் அங்கு இருக்கின்றது. இதற்கென யாம் ஒரு வழியும் இங்கு கூறுவோம் மாதம் முழுவதும் செய்யும் பூஜைகளில் ஒரு முறை ஏதாவது ஒரு நாளில் பூஜா பலன்களை நோய் நொடி கண்டோருக்கு தானமாக அளித்திட அவர்கள் உறுதியாக நலம் பெறுவார்கள். இத்தகைய ஒரு தானத்தை எவராலும் எளிதாக மனதில் இருந்தவாறே செய்ய முடியும் ஏனெனில் இதற்கு முதலீடுகள் யாவும் தேவையற்றது. இத்தகைய தானத்தை செய்ய அனைவரும் பழகிக் கொள்ளுங்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #54

8-6-2010 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இக்காலத்தில் காரியங்கள் நல்வழியில் செல்லும் காலங்களில் இறைவனுக்கு நன்றி கூறுவது குறையாக உள்ளது. இருப்பினும் காரியங்கள் நல்வழியில் செல்லா காலங்களில் ஏன் எமக்கு இறைவன் எதுவும் செய்வதில்லை என குறை காண்பது இயல்பானாது என்கின்ற போதிலும் ஆன்மிக பாதையில் வர வேண்டுவோர் அனைத்தும் அவன் செயல் என உறுதியாக எண்ணுதல் வேண்டும். இவ்விதம் இல்லை என்றால் ஆன்மிக பாதையில் நடப்பது கடினமாகும். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது உண்மையானால் நடப்பது அனைத்தும் அவன் விருப்பமே. ஏன் இப்பிரபஞ்சமே அவன் விருப்பத்தால் படைத்தான் என்பதே உண்மையாகின்றது. அதிலிருக்கும் ஜீவராசிகளும் அவன் விருப்பத்திற்கே இயங்குகிறது என்பதும் உண்மையானதே. இத்தகைய நிலையில் நமக்கு நடைபெறுகின்ற ஒவ்வொன்றும் அவன் விருப்பம் என்பது மட்டுமல்லாது நம் முன் ஜென்ம வினைகளை தீர்க்கும் வழிகளே என்றென மனதில் உறுதிப்படுத்த வேண்டும். இதனை யாம் மீண்டும் மீண்டும் இங்கு கூறுகிறோம். ஏன் என்றால் ஆன்மிக பாதையில் செல்லுதல் வேண்டுமென பலர் ஆர்வம் கண்டுள்ளனர். இருப்பினும் தியாகம் செய்திடும் நிலையில் இல்லை என்கின்றதே ஓர் பெரும் குறையாகின்றது. இக்குறையை தயவு செய்து நீக்கிடுவீர்களாக. அனைத்தும் அவன் செயல் என வாயால் கூறினால் போதுமானதல்ல நடைமுறையில் செயல்படுத்த வேண்டும், இதனைக் குறையாக கூறவில்லை அறிவுரையாக எடுத்துக் கொள்வீர்களாக. இல்லையென்றால் ஓர் ஆன்மிக தோற்றம் உண்டாகுமே ஒழிய முழுமையான ஆன்மிகமாகாது. இதனை ஆங்கிலத்தில் கூறினால் உறுதியாக உணர்வீர்கள் என்பதற்காக PSEUDO SPIRITUALITY என்றும் கூறுவோம். இதனை தவிர்த்தல் வேண்டும். கற்றது கைமண் அளவாக உள்ள போதிலும் அதனை முழுமையாக கற்றுக் கொண்டு செயல்படுங்கள் என்பதே எமது அறிவுரையாகும். இவ்வாழ்கையில் ஆன்மிகம் முழுமையாக அடைய இயலாது என்கின்ற போதிலும் அதற்கு வருத்தம் வேண்டாம். மீண்டும் மீண்டும் பிறவி உண்டு ஏதோ ஓர் ஜென்மத்தில் பிறவி இல்லா நிலை அடையக்கூடும். இது மனிதனின் விதி என்பதை எடுத்துரைக்கின்றோம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #53

12-5-2010 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: நகைச்சுவை தரும் வினா ஒன்றும் ஒருத்தர் வினாவிட்டார் உலகில் நாய் என்பது அவ்வளவிற்கு கேவலமானதா? அதில் ஈஸ்வரன் இல்லையா?

இக்கேள்விக்கு மூல காரணம் ஓர் பழமொழியே. நாயைக் கண்டால் கல்லை காணவில்லை கல்லை கண்டால் நாயை காணவில்லை என்பதே அப்பழமொழியாகும். நாயைக் கண்டவுடன் அடித்தல் வேண்டுமோ இது என்ன எண்ணம். அவ்விதமில்லை இதற்கு விளக்கமாவது ஓர் நல்ல கல்லால் உருவாக்கிய நாய் பொம்மை ஒன்றை குழந்தை கண்டால் அதனை நாயாகவே காணும் கல்லின் தரத்தை குழந்தை காண்பதில்லை. மாறாக சிற்பியோ கல்லின் தரமும் அதன் மெருகும் மட்டும் காண்கின்றான். சிற்பி நாயை காண்பதில்லை இதற்கு ஈடாகவே திருமந்திரத்தில் மரத்தில் மறைந்தது மாமதயானை என்னும் பாடல் உள்ளது. இதன் விளக்கம் இதுவேயன்றி கண்டவுடன் நாயை அடித்தல் வேண்டும் என்பதல்ல.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #52

15-4-2010 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஆத்ம ஞானம் நாடும் பொழுது நிராகரிப்பு (எதுவும் வேண்டாம் என்பது) வேண்டுமோ?

எதார்த்த நிலையில் இறைவனை நாடி ஆத்ம நிலை உணர வேண்டும் என எண்ணுவோர் கட்டுப்பாட்டுடன் இருத்தல் வேண்டுமே ஒழிய நிராகரிப்பு அவசியமற்றதாகும். மாற்றாக முழுமையாக துறவம் கண்டோன் நிராகரிப்பு செய்தல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. ஆச்சரியம் எனும் நிலை கண்டால் அங்கு முழுமையாக நிராகரிப்பு இல்லை என்பதே கருத்தாகின்றது. இதற்கு சான்றாக கோத்திர ரிஷிகள் இருந்தார்கள். இக்காலத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் குறித்தே இவ்வினா எழும்பி உள்ளது. எது எவ்விதம் இருந்த போதிலும் மற்றவர்களை வழி நடத்துவோர் தான் செல்லும் பாதை முதன்மையில் சீராக்குதல் வேண்டும் தாம் அடுத்தவர்க்கு கூறுவதை தாமே பின்பற்ற வேண்டும் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து ஆன்மீக பாதையில் செல்ல விரைவில் ஆத்ம ஞானங்கள் உண்டாகும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #51

23-1-2010 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: கொடுத்த வாக்கு காப்பாற்ற இயலாதவர் வாக்கானது நீரில் எழுதியது போல் என்பார்கள் இதன் பொருள் என்ன? இதற்கு உள் அர்த்தம் உண்டா?

பொது அறிவின் வழியில் இதை சிந்திக்க நீரில் எழுதியது அவ்வடிவத்தில் நிலைப்பதில்லை என்றும் உடனடியாக மறைந்து விடுவதாக நாம் அறிகின்றோம். அத்தகைய நிலை தான் பொய்யரின் வாக்கும் இந்த வினாவின் விளக்கம் எளிதாகின்ற போதிலும் மறு விளக்கம் ஒன்று அளிக்க உள்ளோம். இத்தகைய நீர் என்கின்ற போதிலும் திருவருள் என்பது அதனுடன் சேர திருநீரில் எழுதியது அனைத்தும் நற்பலனைத் தரும். உலகத்தில் லட்சக்கணக்கான பூஜ்யங்கள் இருந்த போதிலும் இறையருள் என்கின்ற ஒன்று அதனுடன் சேர்ந்திடவே எண்ணிக்கை உண்டாகின்றது. இதனை மனதில் நிறுத்தி சிந்தித்து செயல்படுவதும் நன்றே ஏனெனில் திருவருள் இன்றி எதுவும் இல்லை திருவருள் இன்றி அனைத்தும் சூன்யமே என்ன வடிவங்களில் இறைவனை நீங்கள் வணங்கிய போதிலும் முடிவானது அனைத்தும் பிரம்மமே என்பதாகின்றது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #50

6-10-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

உறுதியாக எதுவும் நிலைப்பதில்லை என்பதை அனைவரும் அறிதல் வேண்டும். கர்ப்பவாசம் கண்ட அனைத்திற்கும் அழிவுண்டு என்பதையும் உறுதியாக மனதில் வைக்க வேண்டும். இதற்கு விதிவிலக்கு இல்லை என்றும் வந்தவர் செல்லுதல் வேண்டும் மத்தியில் ரோகங்கள் நோய்கள் என்பதெல்லாம் காணுதல் வேண்டும் என்பது இறைவனின் விதி மட்டுமல்லாது அவனின் லீலையும் ஆகும். ஏனெனில் கடினங்கள் கொடுத்து பிறவி அறுக்கும் சூட்சுமத்தை காட்டுகின்றான் என்பதை உணர வேண்டும். இவ்விதமிருக்க சென்றவர்களுக்கு நல்ல பிறவி கிடைக்க வேண்டும் என இறைவனை வேண்டுவீர்களாக.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #49

8-9-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: நீலன் (சனிஸ்வர பகவான்) அவன் கொடியவன் என பலரும் கூற நீலன் கொடிய காரியங்களை மட்டும் செய்கின்றவன் அவனை நேரக நின்று வணங்கக் கூடாது சாய்ந்து வணங்க வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர் இதன் நிலை என்ன விளக்க வேண்டும்?

நீலன் (சனிஸ்வர பகவான்) தீயவன் அல்ல கெட்டவன் அல்ல கிரகங்களில் அவன் ஞானகாரகன் என பட்டம் பெற்றவனும் ஈஸ்வரன் என கூட்டு பெயரும் கிரகங்களில் அவனுக்கு மட்டுமே. நீங்கள் செய்த பூர்வ ஜென்மதீய கர்மங்களின் பாக்கியை நீக்கவே இவன் ஜாதகத்தில் வருகை தருகின்றான். இது சிந்தித்தோமானால் நலம் தருபவர் என்று புரியும் தீயதல்ல என்று அறிதல் வேண்டும். மேலும் இதனை விளக்கிட வீணாக அவன் பெயரை பலர் அழைப்பதும் கண்டோம் மற்றவர்களை திட்டும் போது அவன் பெயரில் ஈஸ்வரன் நீக்கி விட்டு முன்பாகம் மட்டும் கூறுகின்றனர் இது பெரும் தவறாகின்றது. ஏனெனில் அவன் நாமத்தை கூறியவுடன் அவன் பார்வை உங்கள் மீது திரும்புகின்றது. கருணை வடிவமான அவன் மேலும் சில கடினங்களை கொடுத்து கர்மத்தை தீர்க்கின்றான். இவ்விதமிருக்க தேவையற்ற காலங்களில் மற்றவர்களை திட்டுவதற்கும் ஈஸ்வரனின் நாமத்தை கூறாதீர்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #48

12-8-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: சமீப காலங்களில் கொடிய நோய்களினால் பலர் மாண்டு (இறந்து) விடுகின்றனர். இதில் குறிப்பாக குழந்தைகளும் சிசுக்களும் எப்பாவமும் அறியாதவர்களும் மாண்டு விடுகின்றனர்களே இது ஏன்? இவ்விதம் நடந்திட இறைவன் கருணையற்றவனா?

கேள்வி கேட்கின்றவர் வெறும் மாயையின் பிடியினால் இப்படி கேட்கின்றார். பிறப்பு என்றால் இறப்பு உண்டு. பெற்றவர்கள் அவர்கள் செய்த கர்மவினைகளை அனுபவித்துக் கொள்கின்றனர். ஏதோ ஜென்மத்தில் மற்றவரின் குழந்தைகளை அபகரித்தோ பிரித்தோ வேதனையளித்த காரணத்தால் இன்று அக்குழந்தைகளின் பெற்றோர் பட்ட வேதனைகளை அனுபவிக்கின்றனர். யாம் கூறுவது கொடுமையாகவே உங்களுக்குத் தோன்றும் இருப்பினும் உண்மை நிலை இதுவே. எந்த அளவிற்கு இந்த பூமியும் தாங்கும் என்பதை சிறிது சிந்தித்துக் கொள்ளுதல் வேண்டும். மாயைப் பற்றி எமக்கு யாதும் தெரியாது யாம் ஒரு சராசரி மனிதன் என்றெல்லாம் கூறிவிட்டால் உண்மையான நிலையை நீ உணரவில்லை என்பதே பொருளாகின்றது. விதிவிலக்கு இங்கு இல்லை. நீ பார்ப்பது ஆத்மாவை அல்ல வெறும் உடலை என்று வருத்தத்துடன் யாம் கூறுகின்றோம். இருப்பினும் இது துக்கம் தரும் நிலை என யாம் எடுத்துரைப்போம். இதிலிருந்து மீள என்ன வழி என்பதை நாம் சிந்தித்தல் வேண்டும். மற்றவை அனைத்து வீண் வாக்குவாதத்தில்தான் செல்லும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #47

16-7-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: கடைத் தேங்காய் வழிப்பிள்ளையாருக்கு என்ற வாக்கியத்திற்கு முழு அர்த்தம் என்ன?

மற்றவர்கள் பொருட்களை அபகரித்து தெய்வத்திற்கு அளிப்பது சிறந்ததல்ல என்பதே கருத்தாகின்றது. தன் உழைப்பில் சேமித்ததை தெய்வத்திற்கு அளிப்பதே சிறப்பாகின்றது. பல தவறுகள் செய்த பின் இறைவன் காப்பான் என எண்ணம் பலருக்கு உண்டு. கலியுகத்தில் இவ்விதம் ஓர் தோற்றமும் காணக்கூடும். இதைக் கண்டு மற்றவர்களும் தீயோருக்குரிய காலம் அவர்களே வாழ்கின்றனர் என கூறுகின்றனர். இது அவ்விதம் இல்லை நவீன கால அசையும் படங்களில் (சினிமா) நீங்களும் வசனங்களை கேட்டிருப்பீர்கள் தீயோரை ஆண்டவன் கைவிடுவான் என்பதும் உறுதியாக நல்லோரை சோதிப்பான் கைவிடமாட்டான் என்பதே இதன் பொருளாகின்றது. இவ்விதமிருக்க தீமை வழியில் சென்றால் லாபங்கள் உண்டாகும் என இளைஞர்கள் எண்ணுதல் தவறாகும் இவ்விதம் சென்றிட நஷ்டங்களே நேரிடும்.