9-7-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
மழை கொடுப்பது யார் வருணனா?
இதை யாம் சிறிது மறுக்க வேண்டும். நன்றாக சிந்தித்தால் மழை நமக்கு அளிப்பது சூரிய பகவான் ஆவார் என்று அறிதல் வேண்டும். பூமியில் இருக்கும் நீர் தனை ஆவியாக்கி மேல் எடுத்துச் சென்று மேகங்களாக மாற்றி சில இடங்களில் மழை பொழிய வைக்கின்றான். பின்பு இந்நாட்டில் இச்சமயத்தில் இவ்வளவிற்கு வெப்பம் இருந்த போதிலும் மழை ஏன் இல்லை? என்று ஓர் வினாவும் எழும்புகின்றது. இதற்குப் பொருள் எளிது. இம்மழை மேகங்கள் எங்கு தர்மம் நிலை நாட்டுகின்றதோ அங்கு செல்லும் என்பதே பொருள்.
இதற்குச் சிறிதாக உதாரணங்கள் யாம் அளிப்போம். ஆகம ரீதியில் சிறப்பாக இன்றும் ஆலய வழிபாடுகள் நடக்கும் தலம் பரசுராம ஷேத்திரம் என்பதும் அங்கு மழை எப்பொழுதும் பொழியும் என்கின்ற நிலையும் உண்டு. இரண்டாவதாக கர்நாடகா எனும் பிரதேசத்தில் பலப்பல ஆண்டுகளாக ஆலயங்களில் அன்னம் அளிக்கப்படுகின்றது. இது அன்னதான சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது. இதன் வழியாக அங்கும் மழை பொழிகின்றது. ஓர் குறுகிய காலத்திற்கு முன்பாகவே இந்நாட்டிலும் இத்தகைய தானங்கள் மீண்டும் துவங்கியுள்ளார்கள் என்பதும் சிறிது காலமாகவே வழிபாடுகளில் சிரத்தை காட்டுகின்றனர் என்றும் இங்கு எடுத்து உரைத்தோமே. இனி வரும் காலங்களில் இங்கும் நன்றாக மழை பொழியக் காணும் என்றென கூறுகின்றோம்.
12-6-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
பொதுவாக வெப்பம் அதிகம் என்று பலர் கூறுவதைக் கேட்டோம். மனிதனின் உள்ளிருக்கும் வெப்பத்தை விட இந்த வெப்பம் பெரிதா? என்று யாம் கேட்கிறோம். உள்ளிருக்கும் அனைத்தும் வெப்பம் அளிப்பதாகவே காண்கின்றோம். இவ்வெப்பத்தின் காரணமாக மனிதனின் சிந்தனை குலைந்து போவதையும் கண்டோம். இவ்வெப்பம் எதனால் உண்டாகுகின்றது என சிந்தித்தல் வேண்டும். வெளியாகக் காணும் வெப்பம் கதிரவனால் என்று உறுதியாக கூற இயலும். உள்ளில் இருக்கும் வெப்பம் எதனால் தோன்றுகிறது என வினாவக் கண்டால் இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஓர் கதிரவன் தானா? பல கதிரவர்கள் உள்ளிருந்து ஆட்டிப் படைக்கின்றனர் என்றும் இங்கு எடுத்தரைப்போம். இதில் முதன்மையான அதிக வெப்பம் அளிக்கும் காரணம் என்ன என வினாவக் கண்டால் இதற்கு மூல காரணமாக யாம் காண்பது தேவையற்ற எதிர்பார்ப்புக்கள் என்று கூறுவோம். எதிர்பார்ப்புகளின் விளைவாக பலப்பல தவறுகள் செய்கின்றனர் மானிடர் என்றும் கூறி இங்கிருக்கும் அனைவரையும் யாம் சுட்டிக் காட்டவில்லை என்றும் அறிதல் வேண்டும். இது ஓர் பொது விளக்கமாக எடுத்துக் கொள்வீர்களாக.
முதலாவதாக ஆண் குழந்தை வேண்டும் என எதிர்பார்ப்பு பெண்ணாக பிறந்தால் ஆ என்ன துக்கம்? ஏன் என்றால் அந்தப் பெண் அனைவரையும் விழுங்கி விடுவதாக எண்ணுகின்றனர். இவ்விதம் இல்லை கலியுகத்தில் பெண்ணே பெரிது என்று கூறுவோம்.
இரண்டாவதாக பெற்றக் குழந்தை இந்தக் கல்வி கற்க வேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பம். அக்குழந்தைக்கு என்ன விருப்பம் என்று எவரும் சிந்திப்பதில்லை. அந்த ஆன்மா எந்த நாட்டம் செல்கின்றது என்று எவரும் சிந்திப்பதில்லை. இது ஓர் பெரும் வெப்பமாக யாம் காண்கின்றோம்.
மூன்றாவதாக அக் குழந்தை அவ்வழியே செல்லாது வேறு வழி நாடும் போது ஆ என்ன துயரம் மீண்டும் வருத்தமே இதன் வழியாக எதிர்பார்ப்பு போய் விட்டது என் வாழ்க்கை போய் விட்டது என்று பெற்றோர் கருதுவார்கள். இதுவும் வெப்பத்தை உண்டாக்குகிறது.
நான்காவதாக இன்னாரைத்தான் நீ திருமணம் புரிதல் வேண்டும் என்று எதிர்பார்கின்றனர். எனக்கு அவரைப் பிடிக்கவில்லை என குழந்தை கூறுகிறது பிடிக்காவிட்டால் என்ன சொத்து இருக்கின்றது என்று கூறுகின்றனர். இவ்விதம் பல வகையான சச்சரவுகள் அகம் தனில் வீண் விவாதங்கள் அனைத்தும் நடந்து ஓர் உஷ்ணமே உண்டாக்குகின்றது. விளைவு பூகம்பம் அமைதி போய் விட்டது. இதற்கு ஆண்டவனை ஓர் வழி கேட்போம். என்ன கேட்கப் போகின்றீர்கள்? நாம் உனக்கு அபிஷேகம் செய்கின்றோம் எனக்கு அமைதியைக் கொடு என்று உடனடியாக இங்கு ஓர் ஒப்பந்தம் ஓர் வியாபாரம் நடைபெறுகின்றது. உனது அபிஷேகம் ஆண்டவனுக்கு எதற்கு ஐயா? என பூசாரி வினாவுவான் என எதிர்பார்கின்றோம் ஆனால் அதுவும் அவ்விதம் இல்லை. ஓர் இருநூறு ரூபாய் தட்சணையாக நீ வைத்து விடு அனைத்தும் சிறப்பாக ஆண்டவன் மன்னிப்பான் என்று கூறுகின்றனர். பணம் செலுத்தி செலுத்தி மனிதனின் வாழ்க்கையே வியாபாரமாகி விட்டது. இவ்விதம் அனைத்தும் வியாபார ரீதியில் நீ இது தருகிறாயா நான் அது தருகிறேன் என்பது சாதாரண ஓர் காரியமாகி விட்டது.
16-5-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: எல்லாம் வல்ல இறைவனாம், அனைத்தும் படைத்தவனாம், நல் எண்ணம் படைத்தவனாம், என்றெல்லாம் புகழ்த்தும் போது ஏன் நலத்துடன் தீயதும் படைத்தான்? என வினாவக் கண்டோம்.
இதற்கான விடை தீயது இல்லையேல் நலமறிய இயலாது என்பதேயாகும். நிழலின் அருமை தெரிதல் வேண்டுமென்றால் வெயிலின் கொடுமையும் காணுதல் வேண்டும் அறிதல் வேண்டும் என்றும் கூறுவோம். உங்களுக்கு யாம் ஒரு நாணயம் அளித்தோம் என்றால் அதில் இரு பக்கம் இருத்தல் வேண்டும் என்பது இயற்கையின் விதியாகின்றது. இவ்விதம் இருக்க நல்லது எனக் கூறிக்கொண்டால் தீமையும் இருத்தல் வேண்டும். தீமையே இல்லாவிடின் தீயவன் இல்லாவிடின் எவனை நல்லவன் என அழைப்பீர்கள்? இத்தகைய நிலையில் ஒருவனுக்குச் சர்வாங்க சூலத்தால் (உடல் முழுவதும் சூலத்தால் குத்துவது போன்ற வலி) பாதிக்கப்பாட்டால் அது இல்லா நிலையில் ஆனந்தம் கொள்ள இயலாது. இது இறைவனின் விதியாகின்றது. இவ்விதம் இருக்க நலம் இருந்தால் தீமையும் காணும். தீமையை அறிந்து அதிலிருந்து விலகி வருதல் வேண்டும் என்பது மனிதனின் சுய அறிவு ஆற்றலின் விளைவாகின்றது. இத்தகைய நிலையில் நமக்குத் துன்பம் தரும் அனைத்தும் நாம் விட்டு நீங்குகின்றோம். உதாரணமாக அக்னியில் கையை விடுவதில்லை. ஏனெனில் அது சுட்டு விடும். துன்பம் தரும் காரியங்களில் ஈடுபடுவதில்லை ஏனெனில் அது துன்பத்தை தரும். இவ்விதம் இவற்றையெல்லாம் விட்டு நீங்குகின்றோம். ஆயினும் ஆனந்தம் கொடுக்கும் பலவற்றை விட நாம் எண்ணுவதில்லை. அதுபோல் இதுவும் தீமையென தீயவற்றை உணர்ந்து படிப்படியாக இவைகளிலிருந்து விடுதலை பெற நல்வழியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
பாடல் #633: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)
பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ் கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத் தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே.
விளக்கம்:
சிவத்தின் திருவடியை அன்போடு பற்றிக்கொண்டு அவரின் புகழை கற்று அறிந்துகொண்டு அவரின் சிறப்புகளிலேயே எண்ணத்தை வைத்து இருப்பவர்களை இறைவனிடம் இருக்கும் முனிவரெல்லாம் எதிர்கொண்டு அழைப்பார்கள். அவர்கள் மனத் தெளிவு பெற்று சிவபதம் அடைவார்கள்.
சிவபெருமானை நோக்கித் தன்னை வருத்தி ஆசனங்கள் வழியாகத் தவம் செய்பவர்களை தேவர்களுக்கு அரசனாக இருந்து பிறவியில்லா உலகத்திற்கு செல்வார் இவர் என குளிர்ந்த சந்தனத்தால் ஆன முரசும் புல்லாங்குழலும் இசைத்துக் கூற சிவபெருமானின் அருளால் இன்பம் பெறுவார்கள்.
கருத்து: சிவனை நோக்கி ஆசனங்கள் வழியாகத் தவம் செய்தவர் பிறவியில்லா நிலையை அடைவர்.
பிராணாயாம முறைப்படி தியானம் செய்தவர்கள் சிவகதி சென்று அடையும் காலத்தில் பூரண கும்பத்தோடு தேவர்கள் கூட்டமாக எதிரே வந்து பொன் போல போற்றத்தக்க எங்கள் தலைவர் இவர் என்று சொல்லி வரவேற்பார்கள். அவர்களுடன் இன்பத்தில் கலந்து இருப்பார்கள்.
பாடல் #636: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)
சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.
விளக்கம்:
பிரத்தியாகாரம் மூலம் வெளியே செல்லும் மனதை உள்ளே நிறுத்தித் தியானம் செய்தவர்கள் இறைவனின் திருவடி சேரும் காலத்தில் சிவரூபம் பெற்று விளங்குவதால் எட்டுத் திசைகளுக்கும் அதிபதியாக நிற்கும் தேவர்கள் யாரிவர் என்று ஆச்சரியத்துடன் எதிர்கொண்டு வரவேற்று அவரின் உடலில் நீலகண்டனாகிய சிவபெருமானை தேவர்கள் தரிசிப்பார்கள்.
நல் வழியாகிய தாரணை மூலம் அடங்கிய மனதை உள்ளே இருக்கும் இறைவன் மீது ஒருநிலைபெறச் செய்தவர்களுக்கு மரணத்திற்குச் செல்லும் வழியை மாற்றிவிடும். இறைவனால் கொடுக்கப்படும் ஞானமாகிய குறைவில்லாத பெரும் கொடையை அடைந்தவர்கள் இறைவனை அடையக்கூடிய அனைத்து வழிகளிலும் இந்த உலகத்திலிருந்தே செல்லக்கூடியவர்கள் ஆவார்கள்.
ஏழு உலகங்களையும் தாங்கக்கூடிய வலிமையைக் கொண்டு நிற்பவனும், இறைவனை மனதில் வைத்து தியானம் செய்பவர்களுக்குள்ளே அமுதமாய் லயித்திருப்பவனுமாகிய இறைவன் சமாதி நிலையை அடைந்தவர்களைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவர்களுக்குத் துணையாக இருக்கின்றான்.
இந்த உலகத்தில் துன்பம் தரக்கூடிய காரணங்களாகிய தனு, கரணம், புவனம், போகம் ஆகிய பந்தங்களைக் கடந்து சென்று ஏழுவகையான சிவ தத்துவங்களையும் தன் அறிவாலேயே உணர்ந்து பெற்று ஜென்ம ஜென்மமாய்த் தொடர்ந்து வரும் மாயையைத் தவத்தால் வெற்றி பெற்று இறைவனின் திருவடியைச் சேருதல் சமாதியால் பெறும் பயனாகும்.
நான்கு வகை பந்தங்கள்:
தனு – தன் உடலின் மேல் இருக்கும் பற்று கரணம் – ஆசைப்படும் மனது புவனம் – உலகப் பற்று போகம் – உலகப் பொருள்களை அனுபவித்தல்
ஏழுவகை சிவ தத்துவங்கள்:
இறைமை – இறைவனாக தன்னை உணர்தல் முற்றறிவு உடைமை – அனைத்தையும் அறிந்தவனாக இருத்தல் எங்கும் தானாதல் – எங்கும் வியாபித்து இருத்தல் இயல்பாகவே மாயையின்மை – மாயையே இல்லாது இருத்தல் வரம்பில்லாத ஆற்றல் – எல்லையில்லா சக்தியைக் கொண்டிருத்தல் தன்வயத்தன் ஆதல் – எதனாலும் கட்டுப்படாமல் தன் கட்டுப்பாட்டிலேயே இருத்தல் ஒன்றியுணர்தல் – அனைத்திலும் ஒன்றி இருப்பதாக உணர்தல்
கருத்து: சமாதி நிலையை அடைந்தால் அனைத்துவித துன்பங்கள் மற்றும் மாயையிலிருந்து விடுதலை பெற்று சிவ தத்துவங்களை உணரலாம்.