மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கருத்துக்கள் #15

16-5-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: எல்லாம் வல்ல இறைவனாம், அனைத்தும் படைத்தவனாம், நல் எண்ணம் படைத்தவனாம், என்றெல்லாம் புகழ்த்தும் போது ஏன் நலத்துடன் தீயதும் படைத்தான்? என வினாவக் கண்டோம்.

இதற்கான விடை தீயது இல்லையேல் நலமறிய இயலாது என்பதேயாகும். நிழலின் அருமை தெரிதல் வேண்டுமென்றால் வெயிலின் கொடுமையும் காணுதல் வேண்டும் அறிதல் வேண்டும் என்றும் கூறுவோம். உங்களுக்கு யாம் ஒரு நாணயம் அளித்தோம் என்றால் அதில் இரு பக்கம் இருத்தல் வேண்டும் என்பது இயற்கையின் விதியாகின்றது. இவ்விதம் இருக்க நல்லது எனக் கூறிக்கொண்டால் தீமையும் இருத்தல் வேண்டும். தீமையே இல்லாவிடின் தீயவன் இல்லாவிடின் எவனை நல்லவன் என அழைப்பீர்கள்? இத்தகைய நிலையில் ஒருவனுக்குச் சர்வாங்க சூலத்தால் (உடல் முழுவதும் சூலத்தால் குத்துவது போன்ற வலி) பாதிக்கப்பாட்டால் அது இல்லா நிலையில் ஆனந்தம் கொள்ள இயலாது. இது இறைவனின் விதியாகின்றது. இவ்விதம் இருக்க நலம் இருந்தால் தீமையும் காணும். தீமையை அறிந்து அதிலிருந்து விலகி வருதல் வேண்டும் என்பது மனிதனின் சுய அறிவு ஆற்றலின் விளைவாகின்றது. இத்தகைய நிலையில் நமக்குத் துன்பம் தரும் அனைத்தும் நாம் விட்டு நீங்குகின்றோம். உதாரணமாக அக்னியில் கையை விடுவதில்லை. ஏனெனில் அது சுட்டு விடும். துன்பம் தரும் காரியங்களில் ஈடுபடுவதில்லை ஏனெனில் அது துன்பத்தை தரும். இவ்விதம் இவற்றையெல்லாம் விட்டு நீங்குகின்றோம். ஆயினும் ஆனந்தம் கொடுக்கும் பலவற்றை விட நாம் எண்ணுவதில்லை. அதுபோல் இதுவும் தீமையென தீயவற்றை உணர்ந்து படிப்படியாக இவைகளிலிருந்து விடுதலை பெற நல்வழியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

பாடல் #638

பாடல் #638: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

தூங்கவல் லார்க்குந் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத்
தேங்கவல் லார்க்குந் திளைக்கும் அமுதமுந்
தாங்கவல் லார்க்குந் தன்னிட மாமே.

விளக்கம்:

ஏழு உலகங்களையும் தாங்கக்கூடிய வலிமையைக் கொண்டு நிற்பவனும், இறைவனை மனதில் வைத்து தியானம் செய்பவர்களுக்குள்ளே அமுதமாய் லயித்திருப்பவனுமாகிய இறைவன் சமாதி நிலையை அடைந்தவர்களைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவர்களுக்குத் துணையாக இருக்கின்றான்.

பாடல் #637

பாடல் #637: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.

விளக்கம்:

நல் வழியாகிய தாரணை மூலம் அடங்கிய மனதை உள்ளே இருக்கும் இறைவன் மீது ஒருநிலைபெறச் செய்தவர்களுக்கு மரணத்திற்குச் செல்லும் வழியை மாற்றிவிடும். இறைவனால் கொடுக்கப்படும் ஞானமாகிய குறைவில்லாத பெரும் கொடையை அடைந்தவர்கள் இறைவனை அடையக்கூடிய அனைத்து வழிகளிலும் இந்த உலகத்திலிருந்தே செல்லக்கூடியவர்கள் ஆவார்கள்.

பாடல் #636

பாடல் #636: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.

விளக்கம்:

பிரத்தியாகாரம் மூலம் வெளியே செல்லும் மனதை உள்ளே நிறுத்தித் தியானம் செய்தவர்கள் இறைவனின் திருவடி சேரும் காலத்தில் சிவரூபம் பெற்று விளங்குவதால் எட்டுத் திசைகளுக்கும் அதிபதியாக நிற்கும் தேவர்கள் யாரிவர் என்று ஆச்சரியத்துடன் எதிர்கொண்டு வரவேற்று அவரின் உடலில் நீலகண்டனாகிய சிவபெருமானை தேவர்கள் தரிசிப்பார்கள்.

பாடல் #635

பாடல் #635: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே.

விளக்கம்:

பிராணாயாம முறைப்படி தியானம் செய்தவர்கள் சிவகதி சென்று அடையும் காலத்தில் பூரண கும்பத்தோடு தேவர்கள் கூட்டமாக எதிரே வந்து பொன் போல போற்றத்தக்க எங்கள் தலைவர் இவர் என்று சொல்லி வரவேற்பார்கள். அவர்களுடன் இன்பத்தில் கலந்து இருப்பார்கள்.

பாடல் #634

பாடல் #634: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.

விளக்கம்:

சிவபெருமானை நோக்கித் தன்னை வருத்தி ஆசனங்கள் வழியாகத் தவம் செய்பவர்களை தேவர்களுக்கு அரசனாக இருந்து பிறவியில்லா உலகத்திற்கு செல்வார் இவர் என குளிர்ந்த சந்தனத்தால் ஆன முரசும் புல்லாங்குழலும் இசைத்துக் கூற சிவபெருமானின் அருளால் இன்பம் பெறுவார்கள்.

கருத்து: சிவனை நோக்கி ஆசனங்கள் வழியாகத் தவம் செய்தவர் பிறவியில்லா நிலையை அடைவர்.

பாடல் #633

பாடல் #633: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே.

விளக்கம்:

சிவத்தின் திருவடியை அன்போடு பற்றிக்கொண்டு அவரின் புகழை கற்று அறிந்துகொண்டு அவரின் சிறப்புகளிலேயே எண்ணத்தை வைத்து இருப்பவர்களை இறைவனிடம் இருக்கும் முனிவரெல்லாம் எதிர்கொண்டு அழைப்பார்கள். அவர்கள் மனத் தெளிவு பெற்று சிவபதம் அடைவார்கள்.

பாடல் #632

பாடல் #632: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.

விளக்கம்:

காளையை வாகனமாகக் கொண்டவனும் உமையவள் காண ஆனந்த நடனம் புரிபவனும் அழகிய மலரின் நறுமனம் கமழும் படர்ந்த சடையுடையவனுமாகிய சிவபெருமானின் திருவடிகள் எப்படி இருக்கும் என்று காண விருப்பம் கொண்டு தேடுபவர்கள் அமரர்களின் தலைவனாகிய இறைவன் இருக்கும் இடத்திற்கே செல்வார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு என்ன வேண்டும் என்று அறிந்து அதை அருள்புரிவான் சிவபெருமான்.

பாடல் #631

பாடல் #631: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.

விளக்கம்:

சமாதி நிலையை அடைபவர்களுக்கு பலவிதமான யோகங்களோடு அறுபத்து நான்கு விதமான சித்திகளும் கிடைக்கும். இறைவனுடன் ஒன்றாகக் கலந்து தாமே சிவமாகிய பின் சமாதி நிலையே தேவையில்லை.

பாடல் #630

பாடல் #630: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே.

விளக்கம்:

சமாதி நிலையில் நம்முடைய ஆன்மா ஈடு இணையில்லாத பேரொளியாய் விளங்கும் சிவபெருமானோடும் ஆதி சக்தியோடும் ஒன்றாகக் கலந்து விடும். அந்நிலையில் படைப்புக்கு முதல்வனான பிரமனும் கடல் போன்ற நீல நிற மேனியுடைய திருமாலும் ஆதிக்கடவுளான சிவபெருமானிடம் அடிபணிந்து அன்பு செலுத்துவதை நாம் உணரலாம்.