பாடல் #656

பாடல் #656: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே.

விளக்கம்:

கண்ணில் வியாதிகளைக் கொடுக்கும் தனஞ்செயன் கண்ணில் பூ விழுதல் (கருவிழியில் வெள்ளை நிறம் தோன்றி கண் பார்வை போதல்) காசம் (கண்ணில் சீழ் வழிதல்) ஆகியவற்றிற்கு காரணம் இல்லை. கண்ணிலிருந்து ஒளியை மூளைக்குக் கொண்டு செல்லும் கூர்மன் என்னும் வாயு குறைபாட்டால் இவ்விரு வியாதிகள் வருகின்றன. இந்த வாயுவின் குறைபாட்டால் பார்வையில் ஒளி இல்லாமலும் ஆகும்.

கருத்து: கூர்மன் என்னும் வாயு குறைபாட்டால் கண்ணில் பூ விழுதல் காசம் ஆகிய இரு நோய்கள் உண்டாகும்.

பாடல் #655

பாடல் #655: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனும் முடமதாய்
வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே.

விளக்கம்:

வயிற்றுக் கட்டி அல்லது வீக்கம், சிரங்கு, குஷ்டம், உறுப்புகள் வீக்கம், பலவகை சோகைகள், வாதம் (நரம்பு தளர்ச்சி) கூன், முடம் (ஊனம்) கண் நோய்கள் ஆகிய வியாதிகள் உடலிலுள்ள தனஞ்செயன் என்னும் வாயு குறைவதால் உருவாகும்.

கருத்து: உடலுக்கு வரும் வியாதிகளில் பல தனஞ்செயன் என்னும் வாயு குறைவதால் வருகின்றன.

பாடல் #654

பாடல் #654: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற் றிருபத்து நான்காய்
இருக்கு முடலி லிருந்தில வாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

விளக்கம்:

தனஞ்செயன் என்னும் வாயு உடம்பில் இருக்கும் ஒன்பது வாயுக்களோடு கலந்து உடலில் உள்ள இருநூற்று இருபத்து நான்கு நரம்புகள் வழியே சென்று கொண்டு இருக்கும். அவ்வாறு செல்லாமல் இருந்தால் உடம்பு வீங்கி வெடித்துவிடும்.

கருத்து: தனஞ்செயன் என்னும் வாயு உடலில் உள்ளவரை உடல் அழியாது.

பாடல் #653

பாடல் #653: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த வுடலும் உயிரும் இருந்ததே.

விளக்கம்:

பிராணன், அபானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், உதானன் ஆகிய ஒன்பது வாயுக்களும், இடகலை, பிங்கலை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குகு ஆகிய ஒன்பது நாடிகளில் (நரம்புகளில்) அதிகமாகாமலும் குறையாமலும் சரிசமமாக இருந்தால் பத்தாவது நாடியான சுழுமுனை வழியே செல்லும் பத்தாவது வாயுவான தனஞ்செயன் என்னும் வாயு உடலோடும் உயிரோடும் ஒன்றுபட்டு பிரியாமல் இருக்கும்.

கருத்து: உடலிலுள்ள ஒன்பது வாயுக்களும் சமமாக இருந்தால் உடலை விட்டு உயிர் பிரியாது இருக்கும்.

பாடல் #652

பாடல் #652: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத் தோரே.

விளக்கம்:

ஐம்புலன்களாகிய பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், உணர்தல் ஆகியவற்றில் செல்லும் எண்ணங்கள் எல்லாம் சிவமாய் உணர்ந்து முக்தி நிலையை அறிந்து அதிலேயே லயித்து இருப்பவர்கள் சிவ முக்தர்கள் ஆவார்கள். இவர்கள் ஐந்து புலன்களின் உணர்விலும் தொடர்பில்லாதவர்கள் ஆகையால் தூய நிலையை அடைந்து அவர்களின் எண்ணம் சிவனோடு ஒன்றுபட்டு ஆனந்த நிலையில் நடனம் ஆடுவார்கள்.

கருத்து: சிவயோகியர் உடம்பை மறந்து மேல் நிலையில் இன்புற்று இருப்பார்கள்.

பாடல் #651

பாடல் #651: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வார்வல
ருந்தியுள் நின்று வுதித்தெழு மாறே.

விளக்கம்:

வானம் முதல் பூமி வரையுள்ள அனைத்திலும் சிவனையே கண்டு சிந்தித்து ஆராய்ந்து அறிந்து கொள்பவர்களுக்கு 360 நாள்களில் தொப்புள் குழிக்கு அருகில் இருக்கும் மணிப்பூரக சக்கரத்தில் ஒளி எழும்பி மேலெழுந்து செல்லும்.

கருத்து: பார்ப்பவைகள் அனைத்திலும் சிவனையே கண்டு சிந்திப்பவர்களுக்கு 360 நாட்களில் மணிப்பூரகச் சக்கரத்திலிருந்து ஒளி எழும்பும்.

பாடல் #650

பாடல் #650: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை
யாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்
கோங்கி வரமுத்தி முந்திய வாறே.

விளக்கம்:

சிவயோகியாகி அணு அளவு மாறினாலும் பல உயிர்களைத் தாங்கும் தன்மையைப் பெறுவார். அவ்வுயிர்களைத் தமக்குள் கலந்து இருந்த போதும் தமக்குள் எந்தவித மாற்றமும் இல்லை. தமக்குள் இருக்கும் அவ்வுயிர்கள் ஓம் எனும் நாதமாக எழுந்து உச்சிக்கு சென்று முக்தி பெறுகின்றன.

கருத்து: அட்டமா சித்தியடைந்தவர் எவ்வுயிரையும் தமக்குள் எடுத்து முக்தி பெறச் செய்வார்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #37

25-4-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஞானிகள் எவ்வாறு இருப்பார்கள்?

பற்று இல்லாத நிலையுடன் பேரன்பு கூடியும் எதனிடமும் பற்று இல்லாத போதும் தன்னுடைய அன்பானது உலகிற்குக் கிடைக்கட்டும் என்கின்ற நிலையுடனும் விசேஷ ஆடைகள் இல்லாமல் விசேஷ அறிகுறிகள் இல்லாமல் ஒன்றும் இல்லாமல் இருந்தாலும் அனைவரையும் சமமாக பார்க்கும் மனநிலையுடனும் இருப்பார்கள். ஆசைகள் வெறுப்புகள் விருப்பங்கள் ஆகிய அனைத்தையும் நீக்கி ஒழித்து விட்டு இறைவன் ஒருவனே தம்முடைய சொத்து இறைவன் மட்டுமே தம்முடைய ஆனந்தம் இறைவன் ஒருவனே தமக்கு அனைத்தும் என்கின்ற மனநிலையை வளர்த்துக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த நிலையை நீங்கள் எப்படி அடைய முடியும் என்கின்ற கேள்விக்கு விடை எளிதானது. அவர்கள் செய்வது போல நீங்களும் செய்ய வேண்டும். ஆனால் அதை செயல்படுத்துவது மிகவும் கடினம். இந்நிலையில் சிறிது சிறிதாக நாம் விரும்பும் உணவிலிருந்தும் பழக்கவழக்கங்களிலிருந்தும் நம்முடைய ஆசைகள் வெறுப்புகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றை நீக்கினால் அந்த உணவிற்கும், பழக்கவழக்கத்திற்கும் நாம் அடிமையாக இருப்பதிலிருந்து விடுபடலாம். அவ்வாறு விடுபட்டால் மற்ற அனைத்தும் எளிதாக விடுபட்டுச் சென்று விடும். மேலும் துறவு சென்றவன் சிவனே என அமர்வான். அவன் தன்னுடைய அடுத்தத் தேவைகளைப் பற்றிச் சிந்திப்பது இல்லை. ஏனெனில் அனைத்தும் இறைவன் அளிப்பான் என்கின்ற பூரண நம்பிக்கை விசுவாசம் சரணாகதி ஆகிய அனைத்தும் அவனுக்கு உண்டு. இதில் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் முழுமையாகச் சரணடைந்து விட்டோம் என்றால் நமக்கு வேண்டியது அனைத்தும் நாம் இருக்கும் இடத்தைத் தேடி வரும் என்பது அதன் தத்துவம் ஆகின்றது. அவ்விதம் நாம் இருக்கும் இடம் தேடி வருமா? என்று சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும் நாம் ஞானியின் நிலையை அடைவது கடினமாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #36

29-3-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஆன்மீகப் பாதையில் இறைவன் திருவடி அடைய நம்முள் இருக்கும் இறைவனின் குரல் எவ்விதம் ஓர் வழிகாட்டியாக உள்ளது?

ஆன்மீகப் பாதையில் செல்லும் போது சிந்தனை அதாவது நமது அறிவை உபயோகித்துச் சிந்தித்து அப்பாதையில் செல்ல ஓர் அளவிற்கே இயலும். நமது அறிவினைக் கொண்டு சிந்தித்துச் செல்வது நல்லது தான். ஆனால் அது ஓர் அளவிற்குத்தான் பயன்படும். அதற்கு மேலும் செல்ல வேண்டுமானால் நமக்குள் தோன்றக்கூடிய யுக்தி (Intuition) என்பது தான் கொண்டு போக முடியும். அதாவது யுத்தி என்பது என்னவென்றால் நமக்கு உள்ளே வாழும் தெய்வத்தின் வழிகாட்டுதலே ஆகும். அந்தத் தெய்வத்தின் குரலினைக் கேட்டு அவ்வழியாக இறைவனை அடைய முடியும். அந்தத் தெய்வம் நமக்குள் எப்படிக் குரல் கொடுக்கக்கூடும் என்றால் நாம் இறைவன் மீது வைக்கும் உண்மையான முழுமையான அன்பினாலே ஆகும். ஆகவே இறைவனை அடைய நம் அறிவாற்றலால் ஓரளவிற்கு முடியும் என்றால் நமக்குள் இருக்கும் இறைவனின் வழிகாட்டுதலால் முழுமையாக அடைய முடியும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #35

01-3-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: சுகம் ஏன் நிலைப்பதில்லை?

சுகம் எது? துயரம் எது? என நாம் சிந்தித்தல் வேண்டும். சுகமது வந்து விட்டால் பின் துயரமும் வரும் என்பது உறுதி. ஏனெனில் இரண்டும் நம் சிருஷ்டியின் (உருவாக்கியது) விளைவே. சத்யத்தின் நிலையில் பார்த்திட்டால் சுகமும் இல்லை துயரமும் இல்லை. துயரமது நமது தோற்றத்தின் விளைவால் மேல் ஓங்கிட அதுவும் நம் தீமையை நீக்கிடவே வந்துள்ளது என கண்டு கொண்டால் துயரமும் சுக நிலையாகும். துயரம் என்பது நமது கர்ம விதிகளை நீக்கிட என்றென நன்கும் உணர்ந்திட அதிலும் சுகம் காணக்கூடும். இதற்கு உதாரணமாக குழந்தைகளின் சேஷ்டைகள் அனைத்தும் தாயவள் துயரமாக காண்பதுண்டா? அனைத்தும் அக்குழந்தைக்காக தியாகம் செய்து எவ்வித துயரமும் தாங்கி கொள்வதை எண்ணி பாருங்கள். இதுவே துயரத்தை சுகமாக ஏற்றுக் கொள்ளும் நிலை. இவ்விதமே இறைவன் என அழைக்கும் தாய் நாம் அப்அப்பொழுது கேட்கும் வினாவிற்கும் சேஷ்டைகள் அனைத்தும் ஆனந்தமாகவே பொறுத்துக் கொள்கின்றாள். ஆண்டவன் என் மேல் கோபம் கொள்கின்றார் என கூறுவது தவறாகின்றது. ஆண்டவன் தண்டிப்பதில்லை என மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். அனைத்தும் நம்மை நாமே தண்டிக்கும் நிலையாகும். ஏனெனில் நாம் பயிரிட்டது நாம் உறுதியாக அறுவடை செய்திடல் வேண்டும் என்பதே இயற்கையின் விதி. சுகம் வரும் காலங்களில் உறுதியாக பின்பு துயரம் வரும் என உறுதி காண்பீர். அத்துயரத்தை நல்வழியில் ஸ்விகரித்தல் (எடுத்துக் கொள்ள) வேண்டும். அதையே வாய்ப்பாக ஏற்று நம்முடைய கர்மவிதிகளை மாற்றிட ஓர் மார்க்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.