பாடல் #658

பாடல் #658: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒருங்கவல் லார்கட்கு
ஒன்பது வாசல் உலைநல மாமே.

விளக்கம்:

ஒன்பது துவாரங்களைக் (இரண்டு கண், இரண்டு காது, வாய், மூக்கு, மலத் துவாரம், சிறுநீர்த் துவாரம்) கொண்ட மனித உடலில் இருக்கும் ஒன்பது வித நாடிகளை (இடகலை, பிங்கலை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குகு) புருவ மத்தியில் ஒருமுகப்படுத்தி தவம் செய்யக்கூடியவர்களின் உடலுக்கு என்றும் அழிவில்லை.

கருத்து: ஒன்பது நாடிகளையும் ஒருமுகப்படுத்தி தவம் செய்பவர்களுக்கு உடல் என்றும் அழியாமல் இருக்கும்.

பாடல் #659

பாடல் #659: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே.

விளக்கம்:

மூலாதாரத்தில் உள்ள குண்டலினி அக்கினியை எழுப்பிச் சுழுமுனை நாடி வழியே தலை உச்சிக்கு இழுத்து பிராணாயம முறைப்படி சூரியகலை (வலது நாசி), சந்திரகலை (இடது நாசி) வழியாக உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றால் தாங்கி ஏழு உலகங்களிலும் வியாபித்து இருக்கும் ஆற்றலை அடையலாம். இம்முறையை சிவனது அருள்வழியில் செல்பவர்களுக்கு யாம் கூறினோம்.

கருத்து: ஏழு உலகங்களிலும் வியாபித்து இருக்கும் ஆற்றலை அடையும் வழியை சிவ வழியில் செல்வோர்க்கு கூறுகிறார்.

பாடல் #660

பாடல் #660: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே.

விளக்கம்:

இடகலை பிங்கலை நாடிகளுக்கு நடுவிலுள்ள சுழுமுனை நாடியை பிராணாயாமத்தின் மூலம் திறக்க வைத்தால் வலையில் சிக்கிய மானைத் தேடி ஓடிவரும் அதன் துணை மானைப் போல குண்டலினி சக்தியானது சகஸ்ரதளத்திலுள்ள சிவத்தை தேடி அடையும். அடைந்தபின் சேமித்து வைத்த உணவு பண்டம் எப்போதும் உண்ண உதவுவதுபோல அந்நாக்கில் ஊறும் அமுதமானது உடலோடு உயிர் நீடித்திருக்க வைத்திருக்கும்.

கருத்து: குண்டலினி சக்தியை தலை உச்சியில் சேர்த்தால் அமுதம் ஊறி உடலோடு உயிர் நீண்டகாலம் நீடித்திருக்கும்.

பாடல் #661

பாடல் #661: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.

விளக்கம்:

மூலாதாரத்திலிருந்து குண்டலினியை எழுப்பி சகஸ்ரதளத்திற்கு விரைவாக அடைந்து அங்கு சிவத்தை தரிசித்தவர்கள் அங்குள்ள நாடியினுள்ளே ஓங்கார ஒலியை எழுப்புவார்கள். அதன்பிறகு அமுதம் ஊறுகின்ற அன்னாக்கைத் தேடிச் சென்று அங்கே ஊறும் அமுதத்தை பருகியவர்களுக்கு இறைவனை அடையத் தடையாயிருக்கின்ற மாயை, அகங்காரம், ஆணவம், காமம், குரோதம் ஆகிய ஐந்துவித பகைவர்களும் அடங்கி இருப்பார்கள்.

கருத்து: குண்டலினி சக்தியின் மூலம் இறைவனை தரிசித்தவர்களுக்கு இறைவனை அடையத் தடையாயிருக்கும் அனைத்தும் அடங்கியிருக்கும்.

பாடல் #662

பாடல் #662: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப்
பொட்டிட்டு நின்றது பூரண மானதே.

விளக்கம்:

உடலிலுள்ள ஒன்பதுவித சக்திகளும் சகஸ்ரதளத் தாமரையின் தண்டாகிய சுழுமுனை வழியே குண்டலினி சக்தியோடு இணைந்து சென்று சகஸ்ரதளத்தை அடைந்து அங்கு இருக்கும் பராசக்தியோடு சேர்ந்து பூரண சக்தியாகி (முழுமையான சக்தியாகி) நிரந்தரமாக இருக்கும்.

ஒன்பது சக்திகள்:

  1. வாமை = ஊன்றல்
  2. ஜேஷ்டை = சுழித்தல்
  3. ரெளத்திரி = விசிரிம்பித்தல்
  4. காளி = மடித்து மேலேறல்
  5. கலவிகரணி = அங்கிருந்து கீழ்வரல்
  6. பலவிகரணை = மேல் புடை பெயர்த்தல்
  7. பலப்பிரமதனி = கீழ்த் தாழல்
  8. சர்வபூததமனி = கீழ் ஊன்றி நிற்றல்
  9. மனோன்மணி = வரி வடிவாதல்

கருத்து: குண்டலினியை சகஸ்ரதளத்தோடு சேர்ப்பவர்களுக்கு உடலிலுள்ள ஒன்பது சக்திகளும் பராசக்தியோடு இணைந்து நிரந்தரமாக இருக்கும்.

பாடல் #663

பாடல் #663: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

பூரண சத்தி எழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாயினர்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகிக் கலந்து விரிந்ததே.

விளக்கம்:

ஒன்பது சக்திளும் இணைந்த பராசக்தியானது (பாடல் #663 இல் உள்ளபடி) உடலில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களைச் செய்யும் ஐந்து மூர்த்திகளையும் உணர்கின்ற ஐந்து இடங்களுக்கும் இருபத்து ஒருவராக பிரிந்து மொத்தம் நூற்று ஐவராக கலந்து இருக்கின்றார்கள்.

கருத்து: உடலில் ஐந்தொழில்களையும் செய்கின்ற ஐந்து இடங்களிலும் சக்தியாக பூரணசக்தி கலந்து இருக்கின்றது.

பாடல் #664

பாடல் #664: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்
பரந்து குவிந்தது பார்முதற் பூதம்
இரைந்தெழு வாயு விடத்தினில் ஒடுங்கே.

விளக்கம்:

உடலில் நூற்று ஐந்தாக பிரிந்து இருக்கின்ற சக்தி (பாடல் #664 இல் உள்ளபடி) பரிபூரணமாய் ஒருநிலைப்பட்டு மறைந்தவாறு உடலுக்குள் எழுந்து அங்கே மறைந்து உடலெங்கும் பரவி உடலிலுள்ள பஞ்ச பூதங்களுடன் ஒருமுகப்பட்டு உடலிலுள்ள பத்துவித வாயுக்களோடு ஒடுங்கி இருக்கும்.

கருத்து: உடலிலுள்ள பஞ்ச பூதங்களோடும் பத்துவித வாயுக்களோடும் பூரணசக்தி கலந்து இருக்கும்.

பாடல் #665

பாடல் #665: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடைபடு வாயுவு மாறியே நிற்குந்
தடையவை யாறெழுந் தண்கட ருள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.

விளக்கம்:

உடம்பில் அடங்கியிருக்கும் மூச்சுக்காற்றை இடகலை, பிங்கலை மூச்சுப்பயிற்சி முறைப்படி பிராணாயாமம் செய்து மாற்றி சுழுமுனை வழியே மேலெழும்புமாறு செய்தால் குளிர்ந்த கடலில் மழை பெய்யும் பொழுது ஏற்படும் கொடி போன்ற மின்னலும் கடலும் சேர்ந்து ஒன்றாகத் தெரிவது போல குண்டலினி சக்தி ஆறு சக்கரங்களைக் கடந்து ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தோடு மனம் ஒடுங்கும்.

கருத்து: பிராணாயாமப் பயிற்சியை முறைப்படி செய்தால் குண்டலினி சக்தி சகஸ்ரதளத்தோடு மனமும் ஒன்றிவிடும்.

பாடல் #666

பாடல் #666: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கின்
அடங்கி அடங்கிடும் வாயு வதனுள்
மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே
நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே.

விளக்கம்:

பாடல் #665 ல் உள்ளபடி ஒடுங்கிய மனதில் இருக்கும் இறைவனை உணர்ந்து லயித்திருந்தால் மூச்சுக்காற்றும் அதனோடு அடங்கியிருக்கும். அவ்வாறு அனைத்தும் அடங்கியிருக்கும் உடம்போடு உயிர் நிலைபெற்று இருக்கும். அவ்வாறு நிலைபெற்ற உயிரில் நடனத்திற்குத் தலைவனான இறைவனே நாடி வந்து இருப்பான்.

கருத்து: குண்டலினி சக்தியும் மூச்சுக்காற்றும் மனமும் ஒருமுகப்பட்டு இருக்கும் உயிரில் இறைவன் நாடி வந்து இருப்பான்.

பாடல் #667

பாடல் #667: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடில் ஒருகை மணிவிளக் கானதே.

விளக்கம்:

பாடல் #666 ல் உள்ளபடி உயிரைத் தேடி வந்த இறைவன் சுழுமுனை நாடியின் உள்ளே ஓம் எனும் நாதமாய் நின்று இறைவனை அடையத் தடையாயிருக்கின்ற மாயை, அகங்காரம், ஆணவம், காமம், குரோதம் ஆகிய ஐந்துவித பகைவர்களையும் அவன் அருளால் அடக்கிவிட்டு என்றும் அணையாமல் வெளிச்சம் கொடுக்கும் விளக்குபோல என்றும் ஜோதியாய் விளங்குவான்.

கருத்து: உயிரோடு கலந்த இறைவன் அவனை அடையத் தடையாயிருக்கின்ற ஐந்துவித பகைவர்களை அடக்கி என்றும் அணையாத ஜோதியாய் இருப்பான்.