பாடல் #1700: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)
உணர்த்து மதிபக்கு வற்கே உணர்த்தி
யிணக்கில் பராபரத் தெல்லை யுன்னிட்டுக்
குணக்கோடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணர்த்து மின்னாவுடை யான்றன்னை யுன்னியே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
உணரதது மதிபககு வறகெ உணரததி
யிணககில பராபரத தெலலை யுனனிடடுக
குணககொடு தெறகுத தரபசசி மஙகொண
டுணரதது மினனாவுடை யானறனனை யுனனியெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
உணர்த்தும் அதி பக்குவற்கே உணர்த்தி
இணக்கு இல் பரா பரத்து எல்லை உள் இட்டு
குணக்கோடு தெற்கு உத்தர பச்சிமம் கொண்டு
உணர்த்துமின் ஆவுடையான் தன்னை உன்னியே.
பதப்பொருள்:
உணர்த்தும் (பரம்பொருளின் பேருண்மைகளை உணர்த்துகின்ற ஞான குருவானவர்) அதி (மிகவும்) பக்குவற்கே (பக்குவம் பெற்ற சீடனுக்கே) உணர்த்தி (அவற்றை உணர்த்தி)
இணக்கு (அனைத்துமாக இருந்தாலும் அதனோடு சேர்ந்து) இல் (இல்லாமல் விட்டு விலகி நிற்கின்ற) பரா (அசையா சக்தியாகிய) பரத்து (பரம்பொருளின்) எல்லை (எல்லைக்கு) உள் (உள்ளே) இட்டு (சீடனை கொண்டு சென்று)
குணக்கோடு (கிழக்கோடு) தெற்கு (தெற்கு) உத்தர (வடக்கு) பச்சிமம் (மேற்கு ஆகிய நான்கு திசைகளையும்) கொண்டு (கொண்டு இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் மறைந்து இருக்கின்ற பேருண்மையாகிய பரம்பொருளை)
உணர்த்துமின் (உணர்த்துவார்கள்) ஆவுடையான் (ஆன்மாக்களுக்கெல்லாம் அதிபதியாகிய) தன்னை (ஆண்டவனை) உன்னியே (தமது மனதிற்குள் தியானித்தே இவை அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்).
விளக்கம்:
பரம்பொருளின் பேருண்மைகளை உணர்த்துகின்ற ஞான குருவானவர் மிகவும் பக்குவம் பெற்ற சீடனுக்கே அவற்றை உணர்த்தி, அனைத்துமாக இருந்தாலும் அதனோடு சேர்ந்து இல்லாமல் விட்டு விலகி நிற்கின்ற அசையா சக்தியாகிய பரம்பொருளின் எல்லைக்கு உள்ளே சீடனை கொண்டு சென்று, கிழக்கோடு தெற்கு வடக்கு மேற்கு ஆகிய நான்கு திசைகளையும் கொண்டு இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் மறைந்து இருக்கின்ற பேருண்மையாகிய பரம்பொருளை உணர்த்துவார்கள். ஆன்மாக்களுக்கெல்லாம் அதிபதியாகிய ஆண்டவனை தமது மனதிற்குள் தியானித்தே இவை அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்.