பாடல் #1693

பாடல் #1693: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

கொள்ளினு நல்ல குருவினைக் கொள்ளுக
வுள்ள பொருளுட லாவி யுடனீய்க
எள்ளத் தனையு மிடைவிடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொளளினு நலல குருவினைக கொளளுக
வுளள பொருளுட லாவி யுடனீயக
எளளத தனையு மிடைவிடா தெநினறு
தெளளி யறிய சிவபதந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கொள்ளினும் நல்ல குருவினை கொள்ளுக
உள்ளம் பொருள் உடல் ஆவி உடன் ஈய்க
எள் அத் தனையும் இடை விடாதே நின்று
தெள்ளி அறிய சிவ பதம் தானே.

பதப்பொருள்:

கொள்ளினும் (ஏற்றுக் கொண்டாலும்) நல்ல (ஒரு நல்ல) குருவினை (குருவை) கொள்ளுக (தேடி ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்)
உள்ளம் (உங்களுடைய உள்ளம்) பொருள் (பொருளாகிய ஆன்மா) உடல் (உடல்) ஆவி (ஆவியாகிய உயிர்) உடன் (ஆகிய நான்கும் சேர்ந்து) ஈய்க (குருவிற்கே உடமையாக கொடுத்து சரணாகதியாகி விடுங்கள்)
எள் (எள்) அத் (அதனுடைய சிறிய) தனையும் (அளவிற்கு கூட) இடை (சிறிதளவும் மனம் தவற) விடாதே (விடாமல்) நின்று (குருவிடமே சரணாகதியாக நின்று)
தெள்ளி (குருவின் அருளால் உண்மை ஞானத்தை தெளிவாக) அறிய (அறிந்து கொண்டால்) சிவ (இறைவனின்) பதம் (திருவடியை) தானே (நீங்கள் அடையலாம்).

விளக்கம்:

ஏற்றுக் கொண்டாலும் ஒரு நல்ல குருவை தேடி ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய உள்ளம் பொருளாகிய ஆன்மா உடல் ஆவியாகிய உயிர் ஆகிய நான்கும் சேர்ந்து குருவிற்கே உடமையாக கொடுத்து சரணாகதியாகி விடுங்கள். எள்ளின் அளவிற்கு கூட சிறிதளவும் மனம் தவற விடாமல் குருவிடமே சரணாகதியாக நின்று குருவின் அருளால் உண்மை ஞானத்தை தெளிவாக அறிந்து கொண்டால் இறைவனின் திருவடியை நீங்கள் அடையலாம்.

பாடல் #1692

பாடல் #1692: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேனின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
யிசைக்கின்ற வன்பருக் கீயலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பதைககினற பொதெ பரமெனனும விததை
விதைககினற விததினை மெனினறு நொககிச
சிதைககினற சிநதையைச செவவெ நிறுததி
யிசைககினற வனபருக கீயலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல் நின்று நோக்கி
சிதைக்கின்ற சிந்தையை செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே.

பதப்பொருள்:

பதைக்கின்ற (இறைவனை அடைய வேண்டும் என்று துடிதுடிக்கின்ற) போதே (போதே) பரம் (பரம்பொருள்) என்னும் (என்று அறியப்படும்) வித்தை (அனைத்திற்கும் மூல விதையான இறைவன்)
விதைக்கின்ற (அடியவருக்குள் விதைக்கின்ற) வித்தினை (மாயை நீங்கி உணரக்கூடிய இறை சக்தியை குருவின் அருளால்) மேல் (தலை உச்சிக்கு மேல்) நின்று (மூச்சுக்காற்றை எடுத்துச் சென்று) நோக்கி (அங்கே வீற்றிருக்கும் இறை சக்தியை தரிசித்து)
சிதைக்கின்ற (இறைவனை அடைவதற்கு தடையாக வேறு வழிகளில் சிதைந்து போகின்ற) சிந்தையை (சிந்தனைகளை) செவ்வே (சீர்படுத்தி) நிறுத்தி (அவற்றை இறைவன் மேல் மட்டும் எப்போதும் இருக்கும் படி நிறுத்தி)
இசைக்கின்ற (இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற) அன்பருக்கு (பக்குவமுள்ள அன்பர்களுக்கு) ஈயலும் (இறைவன் தமது அருளை கொடுத்து) ஆமே (அருளுவான்).

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டும் என்று துடிதுடிக்கின்ற போதே பரம்பொருள் என்று அறியப்படும் அனைத்திற்கும் மூல விதையான இறைவன் அடியவருக்குள் விதைக்கின்ற மாயை நீங்கி உணரக்கூடிய இறை சக்தியை குருவின் அருளால் தலை உச்சிக்கு மேல் மூச்சுக்காற்றை எடுத்துச் சென்று அங்கே வீற்றிருக்கும் இறை சக்தியை தரிசித்து இறைவனை அடைவதற்கு தடையாக வேறு வழிகளில் சிதைந்து போகின்ற சிந்தனைகளை சீர்படுத்தி அவற்றை இறைவன் மேல் மட்டும் எப்போதும் இருக்கும் படி நிறுத்தி இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற பக்குவமுள்ள அன்பர்களுக்கு இறைவன் தமது அருளை கொடுத்து அருளுவான்.

பாடல் #1691

பாடல் #1691: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

பதைத் தொழிந்தேன் பரமாவுன்னை நாடி
யதைத் தெழுந்தேற் றினியாரோடுங் கூடேன்
சிதைத் தடியேன் வினை சிந்தனைதீர
வுதைத் துடையா யுகந்தாண்டரு ளாயே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பதைத தொழிநதென பரமாவுனனை நாடி
யதைத தெழுநதெற றினியாரொடுங கூடென
சிதைத தடியென வினை சிநதனைதீர
வுதைத துடையா யுகநதாணடரு ளாயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பதைத்து ஒழிந்தேன் பரமா உன்னை நாடி
அதைத்து எழுந்து ஏற்றி இனி யாரோடும் கூடேன்
சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர
உதைத்து உடையாய் உகந்து ஆண்டு அருளாயே.

பதப்பொருள்:

பதைத்து (உன்னை எப்போது அடைவேன் என்ற துடிதுடிப்பில்) ஒழிந்தேன் (உன்னை அடைவதற்கு தடையாக இருக்கின்ற ஆசைகளை ஒழித்தேன்) பரமா (பரம்பொருளே) உன்னை (உன்னை) நாடி (தேடி)
அதைத்து (அலைந்து திரிந்து) எழுந்து (நீ எழுந்தருளிய இடத்திற்கெல்லாம் சென்று) ஏற்றி (உன்னை போற்றி வணங்கி அடைந்தேன்) இனி (இனி) யாரோடும் (வேறு யாரோடும்) கூடேன் (சேர மாட்டேன். உன்னிடம் மட்டுமே சேருவேன்)
சிதைத்து (நீ கருணை கொண்டு சிதைத்து) அடியேன் (அடியேனுடைய) வினை (நல் வினை தீ வினை ஆகிய இரு வினைகளையும் அழித்து) சிந்தனை (உன்னைத் தவிர வேறு எதிலும் எனது சிந்தனை போகாத படி) தீர (மற்ற அனைத்து சிந்தனைகளும் தீர்ந்து போகும் படி)
உதைத்து (உதைத்து) உடையாய் (அவற்றை உடைந்து போகும் படி செய்ய மாட்டாயா?) உகந்து (அடியேனை மனமுவந்து) ஆண்டு (உன் தொண்டனாக ஆட்கொண்டு) அருளாயே (அருள மாட்டாயா?).

விளக்கம்:

உன்னை எப்போது அடைவேன் என்ற துடிதுடிப்பில் உன்னை அடைவதற்கு தடையாக இருக்கின்ற ஆசைகளை ஒழித்தேன். பரம்பொருளே உன்னை தேடி அலைந்து திரிந்து நீ எழுந்தருளிய இடத்திற்கெல்லாம் சென்று உன்னை போற்றி வணங்கி அடைந்தேன். இனி வேறு யாரோடும் சேர மாட்டேன். உன்னிடம் மட்டுமே சேருவேன். நீ கருணை கொண்டு அடியேனுடைய நல் வினை தீ வினை ஆகிய இரு வினைகளையும் சிதைத்து அழித்து உன்னைத் தவிர வேறு எதிலும் எனது சிந்தனை போகாத படி மற்ற அனைத்து சிந்தனைகளும் தீர்ந்து போகும் படி உதைத்து அவற்றை உடைந்து போகும் படி செய்ய மாட்டாயா? அடியேனை மனமுவந்து உன் தொண்டனாக ஆட்கொண்டு அருள மாட்டாயா?

பாடல் #1690

பாடல் #1690: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

தொழு தறிவாளர் சுருதி கண்ணாகப்
பழு தறியாத பரம குருவை
வழி யறிவார் நல்வழி யறிவாள
ரழி வறிவார் மற்றையல்லா தவரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தொழு தறிவாளர சுருதி கணணாகப
பழு தறியாத பரம குருவை
வழி யறிவார நலவழி யறிவாள
ரழி வறிவார மறறையலலா தவரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தொழுது அறிவாளர் சுருதி கண் ஆக
பழுது அறியாத பரம குருவை
வழி அறிவார் நல் வழி அறிவாளர்
அழிவு அறிவார் மற்றை அல்லாத அவரே.

பதப்பொருள்:

தொழுது (இறைவனை பக்தியோடு வணங்கும் முறையை) அறிவாளர் (அறிந்தவர்கள்) சுருதி (இறைவனை அடைவதை மட்டுமே) கண் (குறிக்கோள்) ஆக (ஆகக் கொண்டு இருக்கும் போது இறையருள்)
பழுது (ஒரு குற்றமும்) அறியாத (அறியாத புனிதமான) பரம (இறை நிலையை அடைந்த) குருவை (குருவை அவருக்கு காட்டி அருளும் போது)
வழி (அந்த குருவின் மூலம் இறைவனை அடையும் வழியை) அறிவார் (அறிந்து கொண்டவர்களே) நல் (நல்ல) வழி (வழியை) அறிவாளர் (அறிந்து கொண்ட பக்குவர்கள் ஆவார்கள்)
அழிவு (மீண்டும் மீண்டும் இறந்து பிறப்பதற்கான வழியையே) அறிவார் (அறிவார்கள்) மற்றை (மற்ற உலக வழிகளாகிய) அல்லாத (நல்லது இல்லாத வழியை மட்டுமே) அவரே (அறிந்தவர்கள்).

விளக்கம்:

இறைவனை பக்தியோடு வணங்கும் முறையை அறிந்தவர்கள் இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருக்கும் போது, இறையருள் ஒரு குற்றமும் அறியாத புனிதமான இறை நிலையை அடைந்த குருவை அவருக்கு காட்டி அருளும். அந்த குருவின் மூலம் இறைவனை அடையும் வழியை அறிந்து கொண்டவர்களே நல்ல வழியை அறிந்து கொண்ட பக்குவர்கள் ஆவார்கள். நல்லது இல்லாத மற்ற ஆசைகளின் வழியே போகின்றதை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் மீண்டும் மீண்டும் இறந்து பிறப்பதற்கான வழியையே அறிந்தவர்கள் ஆவார்கள்.