பாடல் #1697

பாடல் #1697: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

சத்து மசத்துமெவ் வாறெனத் தானுன்னிச்
சித்தை யுருக்கிச் சிவனருள் கைகாட்டப்
பத்தியில் ஞானம் பெறப்பணிந் தானந்தச்
சத்தியி லிச்சை தருவோன்சற் சீடனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சதது மசததுமெவ வாறெனத தானுனனிச
சிததை யுருககிச சிவனருள கைகாடடப
பததியில ஞானம பெறபபணிந தானநதச
சததியி லிசசை தருவொனசற சீடனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தும் அசத்தும் எவ்வாறு என தான் உன்னி
சித்தை உருக்கி சிவன் அருள் கை காட்ட
பத்தியில் ஞானம் பெற பணிந்து ஆனந்த
சத்தியில் இச்சை தருவோன் சற் சீடனே.

பதப்பொருள்:

சத்தும் (நிலையானதும்) அசத்தும் (நிலை இல்லாததும்) எவ்வாறு (எவ்வாறு இருக்கின்றது) என (என்பதை) தான் (தனக்குள்ளேயே) உன்னி (ஆராய்ந்து அறிந்து நிலையான இறைவனை உணர்ந்து)
சித்தை (அவன் மேல் உண்மையான அன்பினால்) உருக்கி (உருகும் போது) சிவன் (இறைவன்) அருள் (தனது திருவருளால்) கை (ஒரு உண்மையான குருவினை) காட்ட (காட்டி அருள)
பத்தியில் (அந்த குருவின் மீது கொண்ட பக்தியின் மூலம்) ஞானம் (உண்மை ஞானத்தை) பெற (பெறுவதற்கு) பணிந்து (அவரது திருவடிகளை பணிந்து) ஆனந்த (குருவின் அருளால் கிடைக்கின்ற பேரானந்த)
சத்தியில் (சக்தியே) இச்சை (வேண்டும் என்று) தருவோன் (தன்னையே முழுவதுமாக குருவிடம் ஒப்படைத்து தருபவனே) சற் (உண்மையான) சீடனே (சீடன் ஆவான்).

விளக்கம்:

நிலையானதும் நிலை இல்லாததும் எவ்வாறு இருக்கின்றது என்பதை தனக்குள்ளேயே ஆராய்ந்து அறிந்து, நிலையான இறைவனை உணர்ந்து அவன் மேல் உண்மையான அன்பினால் உருகும் போது, இறைவன் தனது திருவருளால் ஒரு உண்மையான குருவினை காட்டி அருளுவான். அப்படி இறைவன் காட்டி அருளிய குருவின் மீது கொண்ட பக்தியின் மூலம் உண்மை ஞானத்தை பெறுவதற்கு அவரது திருவடிகளை பணிந்து, அந்த குருவின் அருளால் கிடைக்கின்ற பேரானந்த சக்தியே வேண்டும் என்று தன்னையே முழுவதுமாக குருவிடம் ஒப்படைத்து தருபவனே உண்மையான சீடன் ஆவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.