பாடல் #1743

பாடல் #1743: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

நெஞ்சு சிரஞ்சிகை நீள்கவசங் கண்ணாம்
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாஞ்
செஞ்சுறு செஞ்சுடர்கே சரி மின்னாகுஞ்
செஞ்சுடர் போலுந் தேசாயுதந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நெஞசு சிரஞசிகை நீளகவசங கணணாம
வஞசமில விநது வளரநிறம பசசையாஞ
செஞசுறு செஞசுடரகெ சரி மினனாகுஞ
செஞசுடர பொலுந தெசாயுதந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண் ஆம்
வஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சை ஆம்
செம் உறு செம் சுடர்கே சரி மின் ஆகும்
செம் சுடர் போலும் தெசு ஆயுதம் தானே.

பதப்பொருள்:

நெஞ்சு (மார்பு) சிரம் (தலை) சிகை (தலைமுடி) நீள் (நீண்ட) கவசம் (கவசம்) கண் (கண்கள்) ஆம் (ஆகிய இறைவனின் ஐந்து உறுப்புகளாகும்)
வஞ்சம் (இவை ஒரு தீமையும்) இல் (இல்லாத) விந்து (ஒளி உருவமாக) வளர் (எப்போதும் வளர்ந்து கொண்டே) நிறம் (இருக்கின்ற நிறம்) பச்சை (பசுமையாக நன்மையை அருளுவதை) ஆம் (குறிப்பது ஆகும்)
செம் (இறைவனின் செழுமை) உறு (உற்று இருக்கும்) செம் (சிகப்பான திருமேனியாகிய) சுடர்கே (சுடர் ஒளிக்கு) சரி (சரிசமமாக இருப்பது) மின் (இறைவியின் ஒளி உருவம்) ஆகும் (ஆகும்)
செம் (சிகப்பான) சுடர் (சுடர்) போலும் (போல) தெசு (பிரகாசமான ஒளி பொருந்தி இருக்கின்ற உறுப்புகள்) ஆயுதம் (தீமையை அழிக்கும் ஆயுதங்கள்) தானே (ஆக இருக்கின்றது).

விளக்கம்:

இறைவனின் ஐந்து உறுப்புகளாகிய மார்பு, தலை, தலைமுடி, நீண்ட கவசம், கண்கள் ஆகியவை ஒரு தீமையும் இல்லாத ஒளி உருவமாக எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. அவற்றின் பச்சை நிறம் பசுமையாக நன்மையை அருளுவதை குறிப்பது ஆகும். இறைவனின் செழுமை உற்று இருக்கும் சிகப்பான திருமேனியாகிய சுடர் ஒளிக்கு சரிசமமாக இருப்பது இறைவியின் ஒளி உருவம் ஆகும். சிகப்பான சுடர் போல பிரகாசமான ஒளி பொருந்தி இருக்கின்ற உறுப்புகள் தீமையை அழிக்கும் ஆயுதங்களாக இருக்கின்றது.

பாடல் #1751

பாடல் #1751: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

ஆரு மறியா ரகார மதாவது
பாரு முகாரம் பகுந்திட்ட நாடிலத்
தார மிரண்டுந் தரணி முழுதுமாய்
மாறி யெழுந்திடு மோசைய தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆரு மறியா ரகார மதாவது
பாரு முகாரம பகுநதிடட நாடிலத
தார மிரணடுந தரணி முழுதுமாய
மாறி யெழுநதிடு மொசைய தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆரும் அறியார் அகாரம் அது ஆவது
பாரும் உகாரம் பகுந்து இட்ட நாடில் அத்
தாரம் இரண்டும் தரணி முழுதும் ஆய்
மாறி எழுந்திடும் ஓசை அது ஆமே.

பதப்பொருள்:

ஆரும் (சாதகத்தின் மூலம் தமக்குள்ளிருக்கும் இறைவனை உணராத எவரும்) அறியார் (அறிந்து கொள்ள மாட்டார்கள்) அகாரம் (ஓங்காரத்தில் இருக்கின்ற ‘அ’காரம் எனும்) அது (அருளாக) ஆவது (இருப்பது எது என்று)
பாரும் (உலகத்திலும்) உகாரம் (ஓங்காரத்தில் இருக்கின்ற ‘உ’காரம் எனும் அருளை) பகுந்து (பிரித்து) இட்ட (வகுத்துக் கொடுத்த இறை சக்தியை) நாடில் (தமக்குள் தேடி உணர்ந்தால்) அத் (அது)
தாரம் (பிரணவமாக உள்ளுக்குள் இறை சக்தியாகவும் வெளியிலும் இறை சக்தியாகவும் என்று) இரண்டும் (இரண்டுமாக) தரணி (உலகம்) முழுதும் (முழுவதற்கும் நிறைந்து) ஆய் (நிற்பதாய்)
மாறி (தமக்குள்ளிருந்தே மாறி) எழுந்திடும் (எழுந்திடும்) ஓசை (நாதம்) அது (அதுவே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

சாதகத்தின் மூலம் தமக்குள்ளிருக்கும் இறைவனை உணராத எவரும் ஓங்காரத்தில் இருக்கின்ற ‘அ’காரம் எனும் அருளாக இருப்பது எது என்று அறிந்து கொள்ள மாட்டார்கள். உலகத்திலும் ஓங்காரத்தில் இருக்கின்ற ‘உ’காரம் எனும் அருளை பிரித்து வகுத்துக் கொடுத்த இறை சக்தியை தமக்குள் தேடி உணர்ந்தால் அது பிரணவமாக உள்ளுக்குள் இறை சக்தியாகவும், வெளியிலும் இறை சக்தியாகவும், என்று இரண்டுமாக உலகம் முழுவதற்கும் நிறைந்து நிற்பதாய் தமக்குள்ளிருந்தே மாறி எழுந்திடும் நாதம் ஆகும்.

கருத்து:

ஓங்காரத்தில் ‘அ’காரமாக உள்ளுக்குள் இருந்து இயக்குகின்ற சக்தியும் ‘உ’காரமாக வெளி உலகத்தை இயக்குகின்ற சக்தியும் நாத வடிவமாக இருக்கின்ற நடராஜ தத்துவத்தை குறிப்பதாகும். நடராஜ தத்துவத்தை தமக்குள் உணர்ந்து கொண்ட சாதகர்களே இந்த ஓங்கார தத்துவத்தை அறிந்து சதாசிவ இலிங்கத்தின் நாத வடித்தை உணர்ந்து கொள்வார்கள். ஓங்காரத்தில் இருக்கின்ற இந்த இரண்டு சக்திகளே இறைவனுக்கு இரண்டு சக்திகளாக அனைத்து தெய்வ வடிவங்களிலும் காட்டப் படுகின்றது.

பாடல் #1752

பாடல் #1752: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

இலிங்க நற்பீட மிசையு மோங்கார
மிலிங்கம் நற்கண்டம் நிறையு மகார
மிலிங்கத்து வட்ட முறையு முகார
மிலிங்க வுகாரம் நிறைவிந்து நாதமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இலிஙக நறபீட மிசையு மொஙகார
மிலிஙகம நறகணடம நிறையு மகார
மிலிஙகதது வடட முறையு முகார
மிலிஙக வுகாரம நிறைவிநது நாதமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இலிங்க நல் பீடம் இசையும் ஓங்காரம்
இலிங்கம் நல் கண்டம் நிறையும் அகாரம்
இலிங்கத்து வட்டம் உறையும் உகாரம்
இலிங்க உகாரம் நிறை விந்து நாதமே.

பதப்பொருள்:

இலிங்க (இலிங்க வடிவத்தில்) நல் (நன்மை தருகின்ற) பீடம் (பீடப் பகுதியானது) இசையும் (அனைத்தோடும் சேர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்ற) ஓங்காரம் (ஓங்காரத்தின் தத்துவமாகும்)
இலிங்கம் (இலிங்க வடிவத்தில்) நல் (நன்மை தருகின்ற) கண்டம் (நடுவில் இருக்கின்ற பாணமானது) நிறையும் (அனைத்திலும் பரவி நிறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின்) அகாரம் (‘அ’கார எழுத்தின் தத்துவமாகும்)
இலிங்கத்து (இலிங்க வடிவத்தில் இருக்கின்ற) வட்டம் (வட்டமானது) உறையும் (அனைத்திற்கு உள்ளும் உறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின்) உகாரம் (‘உ’கார எழுத்தின் தத்துவமாகும்)
இலிங்க (இலிங்க வடிவத்தில்) உகாரம் (‘உ’கார எழுத்தாக) நிறை (நிறைந்து இருப்பதுவே) விந்து (வெளிச்சமும்) நாதமே (சத்தமுமாகிய பரம்பொருளின் விந்து நாத தத்துவமாகும்).

விளக்கம்:

அரூபமாக இருக்கின்ற சதாசிவ மூர்த்தியின் இலிங்க வடிவத்தில் நன்மை தருகின்ற பீடப் பகுதியானது அனைத்தோடும் சேர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்ற ஓங்காரத்தின் தத்துவமாகும். அதில் நடுவில் இருக்கின்ற பாணமானது அனைத்திலும் பரவி நிறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின் ‘அ’கார எழுத்தின் தத்துவமாகும். அதில் இருக்கின்ற வட்டமானது அனைத்திற்கு உள்ளும் உறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின் ‘உ’கார எழுத்தின் தத்துவமாகும். இலிங்க வடிவத்தில் ‘உ’கார எழுத்தாக நிறைந்து இருப்பதுவே வெளிச்சமும் சத்தமுமாகிய பரம்பொருளின் விந்து நாத தத்துவமாகும்.

கருத்து:

நன்மையே வடிவான இலிங்க வடிவத்தில் மேல் பாகம், நடுப் பாகம், கீழ் பாகம் என்று மூன்று பாகங்களாக பிரிந்து இருப்பது நாத வடிவாகிய நடராஜ தத்துவமாகும். அதில் மேல் பாகம் ஓங்காரத்தில் உள்ள ‘அ’காரத்தையும், நடுப் பாகம் ஓங்காரத்தில் உள்ள ‘உ’காரத்தையும், கீழ் பாகம் ஓங்காரத்தில் உள்ள ‘ம’காரத்தையும் குறிக்கின்றது. ஓங்காரத்தின் எழுத்து வடிவமே விந்து தத்துவமாகும். ஓங்காரத்தின் ஒலி வடிவமே நாத தத்துவமாகும்.