பாடல் #1209

பாடல் #1209: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

சூடு மிளம்பிறை சூலி கபாலினி
நீடு மிளங்கொடி நின்மலி நேரிழை
நாடி நடுவிடை ஞான முருவநின்
றாடு மதன்வழி யண்ட முதல்வியே.

விளக்கம்:

பாடல் #1208 இல் உள்ளபடி சாதகர்கள் நாடி வந்து திருவடியில் சரணாகதியாகத் தொழுது நிற்கும் போது அவர்களை ஆட்கொண்டு நிற்கின்ற இறைவியானவள் தன் திருமுடியில் இரு பக்கமும் கூர்மையான முனைகளைக் கொண்ட பிறைச் சந்திரனை சூடிக் கொண்டும் தனது திருக்கரத்தில் திரிசூலத்தை ஏந்திக் கொண்டும் திருக்கழுத்தில் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கொண்டும் நீண்டு வளர்ந்து என்றும் இளமையாக இருக்கும் பசுமையான கொடியைப் போலவும் எந்தவிதமான மலங்களும் இல்லாமல் தூய்மையானவளாகவும் அழகிய ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டும் வீற்றிருக்கின்றாள். நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியில் உண்மை ஞானத்தின் சொரூபமாய் நின்று பாடல் #1207 இல் உள்ளபடி அவள் ஆடுகின்ற திருக்கூத்தின் அசைவுகளுக்கு ஏற்ப அண்ட சராசரங்களையும் ஆட்டி வைத்து அனைத்திற்கும் முதல்வியாக இருக்கின்றாள்.

பாடல் #1210

பாடல் #1210: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

அண்ட முதலாய் அவனி பரியந்தங்
கண்டதொன் றில்லை கனங்குழை யல்லது
கண்டனுங் கண்டியு மாகிய காரணங்
குண்டிகை கோளிகை கண்டத னாலே.

விளக்கம்:

பாடல் #1209 இல் உள்ளபடி அண்டத்தின் முதல்வியாய் இருக்கும் இறைவியே அண்ட சராசரங்கள் முதல் உலகங்கள் அனைத்திற்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருந்து பரிபாலிக்கிறாள் இவளைத் தவிர வேறொரு சக்தியை யாம் கண்டது இல்லை. இருந்தாலும் இறைவி மட்டும் தனியாக நின்று உலகங்கள் அனைத்திற்கும் முதல்வியாக இல்லாமல் சிவப் பரம்பொருளோடு கூடி நின்றே அனைத்திற்கும் முதல்வியாக இருக்கின்றதன் காரணம் உலகங்களில் இருக்கும் அனைத்து உயிர்களும் படைப்புக்கான இயற்கையில் ஆண் பெண் எனும் இரு நிலைகளில் நிற்பதே ஆகும்.

பாடல் #1211

பாடல் #1211: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆலமுண் டானமு தாங்கவர் தம்பதஞ்
சாலவந் தெய்துந் தவத்தின்பந் தான்வருங்
கோலிவந் தெய்துங் குவிந்த பதவையோ
டேலவந்து ஈண்டி யிருந்தனள் மேலே.

விளக்கம்:

ஆலகால விஷத்தை தாம் ஏற்றுக் கொண்டு அமரத்துவம் தருகின்ற சிவ அமிழ்தத்தை விண்ணுலகத்தில் இருக்கும் தேவர்களுக்கு அருளிய இறைவனின் திருவடிகளை சரணாகதியாக கொண்டு வீற்றிருக்கும் சாதகர்களுக்கு இறைவன் தாம் தேவர்களுக்கு அருளிய சிவ அமிழ்தத்தைக் கொடுத்து இறப்பில்லாத நிலையை அருளுகின்றார். அதன் பிறகு அவர்கள் சிவ அமிழ்தம் அருந்தியதின் பயனாக சிவ இன்பமும் கிடைக்கப் பெற்று அதிலேயே இறைவனோடு சேர்ந்து வீற்றிருப்பார்கள். அப்போது குண்டலினி சக்தி வந்து சேருகின்ற இடமாகிய சுழுமுனை நாடியின் உச்சித் துளையில் நின்று ஆடுகின்ற இறைவியும் முன்னதாகவே வந்து இறைவனோடு சேர்ந்து தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் வீற்றிருப்பாள்.

பாடல் #1212

பாடல் #1212: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

மேலா மருந்தவ மேன்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலா நளினநின் றேத்திநட் டுச்சிதன்
மேலா மெழுத்தின ளாமத்தி னாளே.

விளக்கம்:

பாடல் #1211 இல் உள்ளபடி இறைவனோடு சேர்ந்து தலை உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைவியோடு குண்டலினி சக்தியை கொண்டு சேர்க்கும் மேன்மையான அரிய தவங்களை மேலும் மேலும் விடாமல் மேற்கொண்டு அதனால் கிடைக்கும் பலனை பெறாமலும் தமது மூச்சுக்காற்றை கட்டுப் படுத்தாமலும் உலகப் பற்றுக்களில் சிக்கி துன்பப்பட்டு தமது வாழ்நாளை வீணாகக் கழித்து ஒரு கண நேரத்தில் உயிரை விட்டுவிடுபவர்கள் பலர். அப்படி இல்லாமல் நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரத்தில் அசைந்து ஆடுகின்ற குண்டலினி சக்தியை முறையாகச் செய்யும் தியானத்தின் மூலம் விடாமல் செய்து தமது உடலின் நடுவில் இருக்கும் சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று அதன் உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தில் சேர்த்து விட்டால் அங்கு அனைத்திற்கும் மேலானதாகிய ஓங்கார எழுத்தின் உருவமாக வீற்றிருக்கின்ற இறைவியானவள் சாதகருக்கு அமிழ்தத்தை கொடுத்து அதுவே உணவாக இருக்கும்படி செய்து அருளுவாள்.

பாடல் #1213

பாடல் #1213: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்
ஓமத்தி லேயு மொருத்தி பொருந்தினள்
நாம நமசிவ யென்று இருப்பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1212 இல் உள்ளபடி சாதகருக்கு அமிழ்தத்தை கொடுக்கின்ற இறைவியானவள் அதனால் கிடைக்கும் பேரின்பமாகவும் சாதகர் உண்ணும் உணவாகவும் இருந்து அந்த உணவைச் செரிக்க வைக்கின்ற நெருப்பாகவும் குண்டலினி சக்தியின் அக்னியாகவும் சாதகரோடு எப்போதும் சேர்ந்து இருக்கின்றாள். அவளது திருநாமமாகிய ‘நமசிவ’ எனும் மந்திரத்தை எண்ணி தியானத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் தினந்தோறும் தவறாமல் கடைபிடிக்கும் நியமங்களுக்கு (பாடல் #556 இல் காண்க) துணையாகவும் இருந்து அவர்களுக்குள் முழுவதும் பரவி வீற்றிருக்கின்றாள்.

பாடல் #1214

பாடல் #1214: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

நிலாமய மாகிய நீள்படி கத்தின்
சிலாமய மாகுஞ் செழுந்தர ளத்தின்
சுலாமய மாகுஞ் சுரிகுழற் கோதை
கலாமய மாகக் கலந்துநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1213 இல் உள்ளபடி சாதகருக்குள் முழுவதும் பரவி வீற்றிருக்கும் இறைவியானவள் நிலவைப் போன்ற குளிர்ந்த ஒளியை வீசும் நீண்ட படிகக் கல்லைப் போன்ற வெண்மையை உடையவள். கல்லால் செதுக்கப்பட்ட சிலையைப் போன்ற அழகிய வடிவத்துடன் சிறந்த முத்துப் போன்ற இயல்பிலேயே பிரகாசிக்கும் தன்மையை உடையவள். சுருண்டு இருக்கும் அழகிய கூந்தலில் வாசனை மிக்க மலர்களை சூடியிருப்பவள். அவள் சாதகருக்குள்ளிருந்து பாடல் #1189 இல் உள்ளபடி உடலின் இயக்கத்திற்கு உதவும் பதினாறு கலைகளாகக் கலந்து நிற்கின்றாள்.

பாடல் #1215

பாடல் #1215: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

கலந்துநின் றாள்கன்னி காதல னோடுங்
கலந்துநின் றாளுயிர் கற்பன வெல்லாங்
கலந்துநின் றாள்கலை ஞானங்க ளெல்லாம்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாமே.

விளக்கம்:

பாடல் #1214 இல் உள்ளபடி சாதகருக்குள் கலந்து நிற்கின்ற இறைவியானவள் தாமாகத் தனித்து இல்லாமல் என்றும் இளமையுடன் இறைவனுடன் சேர்ந்தே இருக்கின்றாள். அவள் உயிர்கள் அனைத்தும் கற்கின்ற கல்விகளாகவும் அந்த கல்வியைக் கொண்டு செய்கின்ற அனைத்து செயல்களுக்கான அறிவாகவும் இருக்கின்றாள். அவளே என்றும் இளமையுடன் அனைத்து விதமான காலங்களாகவும் இருக்கின்றாள்.

பாடல் #1216

பாடல் #1216: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

காலவி யெங்குங் கருத்து மருத்தியுங்
கூலவி யொன்றாகுங் கூட லிழைத்தனள்
மாலினி மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம தாமே.

விளக்கம்:

பாடல் #1215 இல் உள்ளபடி அனைத்து விதமான காலங்களாகவும் இருக்கின்ற இறைவியே உயிர்களின் எண்ணத்தையும் அதிலிருந்து வரும் ஆசைகளையும் அவரவர்களின் கர்ம நிலைகளுக்கு ஏற்ப கைகூட வைக்கின்றவள். சாதகரோடு ஒன்றாகச் சேர்ந்து இருந்து என்றும் பிரியாமல் இருக்கும் தன்மையை அவருக்கு அருளியவள். அந்த இறைவியே திருமாலின் தங்கையாகிய பார்வதியாகவும் அனைத்திற்கும் மேலானவளாகவும் மந்திரங்களின் சக்தியாகவும் தீய சக்திகளை புயல் போல் அடித்து விரட்டுகின்ற சண்டிகையாகவும் அருள் பாலிக்கின்றவளாகவும் அருள் பாலிக்கின்ற இறைவனோடு சரிசமமான பாகமாகவும் இருக்கின்றாள்.

பாடல் #1217

பாடல் #1217: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

பாகம் பராசத்தி பைம்பொற் சடைமுடி
ஏக மிருதய மீரைந்து திண்புயம்
மோக முகமைந்து முக்கண் முகந்தொறும்
நாக முரித்து நடஞ்செய்யும் நாதர்க்கே.

விளக்கம்:

பாடல் #1216 இல் உள்ளபடி அருள் பாலிக்கின்ற இறைவனோடு சரிசமமான பாகமாக இருக்கின்ற பராசக்தியான இறைவியின் சரிபாதியாக இருக்கின்ற இறைவன் பசும் பொன்னால் பின்னப்பட்டது போல பொன் நிறத்தில் மின்னும் சடையை அணிந்த முடியை உடையவர். இறைவியும் தாமும் ஒன்றாகவே இருக்கின்ற மனதைக் கொண்டு பத்து திசைகளையும் தாங்கி நிற்கும் வலிமையான பத்து தோள்களைக் கொண்டவர். அடியவர்களைத் தம்பால் ஈர்க்கின்ற ஐந்து திருமுகங்களைக் கொண்டு அந்த ஐந்து முகத்திலும் மூன்று திருக் கண்களை உடையவர். காட்டு யானையின் தோலை உரித்து தமக்கு ஆடையாக அணிந்து போர்த்திக் கொண்டு முயலகனின் மேல் நின்று திருநடனம் ஆடுகின்ற நடராஜராக இறைவியின் சரிபாகமாக இருக்கின்றார்.

பாடல் #1218

பாடல் #1218: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

நாதனும் நாலொன் பதின்மருங் கூடிநின்
றோதிடுங் கூட்டங்க ளோரைந் துளஅவை
வேதனு மீரொன் பதின்மரு மேவிநின்
றாதியு மந்தமு மாகிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1217 இல் உள்ளபடி இறைவியின் சரிபாகமாக இருக்கின்ற இறைவனின் அம்சமாக இருக்கும் சாதகரின் ஆன்மாவோடு 36 தத்துவங்களும் இனிமையுடன் பெருகி ஒன்றாகக் கூடி சாதகருக்குள் வீற்றிருந்து இறைவனை வணங்குவதற்கு உதவுகின்ற ஐந்து புலன்களாகவும் உடலாகவும் இருக்கின்றன. அதன் பிறகு சாதகரின் உடலே பிரம்மனாகவும் 18 விதமான தேவ கணங்களாகவும் இனிமையுடன் பெருகிப் பரவி வீற்றிருந்து இறைவியைத் துதிக்கும் போது அவள் சாதகருக்குள் முதலாகவும் முடிவாகவும் வீற்றிருந்து அருளுவாள்.

கருத்து: சாதகருக்குள்ளிருக்கும் 36 தத்துவங்களாகவும் ஐந்து புலன்களாகவும் பிரம்மனாகிய உடலாகவும் 18 விதமான தேவ கணங்களாகவும் இறைவியே இருப்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

திருமந்திரம் – பாடல் #467 ல் முப்பத்தாறு தத்துவங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

18 விதமான தேவ கணங்கள்:

  1. சுரர் – உலக இயக்கத்திற்கு உதவும் தேவ லோகத்து தேவர்கள்.
  2. சித்தர் – இறை நிலையில் இருப்பவர்கள்.
  3. அசுரர் – அசுரர்கள்.
  4. தைத்தியர் – அரசுரர்களில் ஒரு பிரிவினரான தானவர்கள்.
  5. கருடர் – கருடர்கள்.
  6. கின்னரர் – நடனம் ஆடுவதில் வல்லவர்கள்.
  7. நிருதர் – அரக்கர்கள்.
  8. கிம்புருடர் – யாளி என்று அழைக்கப்படும் சிங்க முகமும் மனித உருவமும் கொண்ட கணங்கள்.
  9. காந்தர்வர் – கந்தவர்கள் (தேவர்களுக்கு அடுத்த நிலை).
  10. இயக்கர் – யட்சர்கள்.
  11. விஞ்சையர் – கலைகளில் பெரும் ஞானம் உடையவர்கள்.
  12. பூதர் – சிவனுக்கு சேவர்களாக இருக்கும் பூத கணங்கள்.
  13. பிசாசர் – கொடூரமான கோபக் குணத்துடன் வடிவமற்றவர்கள்.
  14. அந்தரர் – சுவர்க்க லோகத்தில் இருக்கும் தேவர்கள்.
  15. யோகர் – ரிஷிகளும் முனிவர்களும்.
  16. உரகர் – நாகர்கள்.
  17. ஆகாய வாசர் – விண்ணுலக வாசிகள்.
  18. விண்மீன் நிறைகணம் – நட்சத்திர மண்டலங்களில் நிறைந்திருக்கும் கணங்கள்.