பாடல் #1594

பாடல் #1594: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

குரவனு யிர்முச் சொரூபமுங் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்தி பேச்சற்று
வுருகிட வென்னையங் குய்யக்கொண் டானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குரவனு யிரமுச சொரூபமுங கைககொண
டரிய பொருளமுத திரையாகக கொணடு
பெரிய பிரானடி நநதி பெசசறறு
வுருகிட வெனனையங குயயககொண டானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குரவன் உயிர் முச் சொரூபமும் கை கொண்டு
அரிய பொருள் முத்திரை ஆகக் கொண்டு
பெரிய பிரான் அடி நந்தி பேச்சு அற்று
உருகிட என்னை அங்கு உய்ய கொண்டானே.

பதப்பொருள்:

குரவன் (இறைவனே குருவாக வந்து) உயிர் (எனது உயிரின்) முச் (மூன்று விதமான) சொரூபமும் (சொரூபங்களாகிய உருவம், அருவுருவம், அருவம் ஆகிய மூன்றையும்) கை (தம் வசமாக கை) கொண்டு (கொண்டு)
அரிய (அரியதான) பொருள் (பொருளாகிய எனது ஆன்மாவையே) முத்திரை (தமது முத்திரை) ஆக (ஆக எடுத்துக்) கொண்டு (கொண்டு)
பெரிய (அனைத்திலும் பெரியவனும்) பிரான் (அனைத்திற்கும் தலைவனும் ஆகிய இறைவனின்) அடி (திருவடிகளை எனக்குள் வைத்து) நந்தி (குருநாதராகிய இறைவன் தனது அருளால்) பேச்சு (எனது பேச்சு முழுவதம்) அற்று (இல்லாமல் போகும் படி செய்து)
உருகிட (அவரின் அன்பில் உருகி விடும் படி) என்னை (என்னை செய்து) அங்கு (தாம் இருக்கும் இடத்திற்கு செல்லுவதற்கான) உய்ய (பக்குவத்தை அடையும் படி) கொண்டானே (ஆட் கொண்டு அருளினார்).

விளக்கம்:

இறைவனே குருவாக வந்து எனது உயிரின் மூன்று விதமான சொரூபங்களாகிய உருவம் அருவுருவம் அருவம் ஆகிய மூன்றையும் தம் வசமாக கை கொண்டு அரியதான பொருளாகிய எனது ஆன்மாவையே தமது முத்திரையாக எடுத்துக் கொண்டு அனைத்திலும் பெரியவனும் அனைத்திற்கும் தலைவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை எனக்குள் வைத்து குருநாதராகிய இறைவன் தனது அருளால் எனது பேச்சு முழுவதம் இல்லாமல் போகும் படி செய்து அவரின் அன்பில் உருகி விடும் படி செய்து தாம் இருக்கும் இடத்திற்கு செல்லுவதற்கான பக்குவத்தை அடையும் படி என்னை ஆட் கொண்டு அருளினான்.

குறிப்பு:

உருவம் என்பது முழுவதுமாக கண்களால் காணும் படி உள்ள உடலாகும். அருவுருவம் என்பது ஒளியால் ஆன உடலாகும். அருவம் என்பது சூட்சுமத்தால் ஆன உடலாகும்.

பாடல் #1595

பாடல் #1595: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

பேச்சற்ற வின்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற யென்னைச் சிவமாக்கு மாள்வித்துக்
காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு
வாச்சப் புகழ்மாளத் தாடந்து மன்னுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெசசறற வினபததுப பெரானந தததிலெ
மாசசறறு யெனனைச சிவமாககு மாளவிததுக
காசசறற சொதி கடனமூனறுங கைககொணடு
வாசசப புகழமாளத தாடநது மனனுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பேச்சு அற்ற இன்பத்து பேரானந்தத்திலே
மாச்சு அற்ற என்னை சிவம் ஆக்கும் ஆள்வித்து
காச்சு அற்ற சோதி கடன் மூன்றும் கை கொண்டு
வாச்ச புகழ் மாள தாள் தந்து மன்னுமே.

பதப்பொருள்:

பேச்சு (குருநாதராக வந்த இறைவன் பேச்சே) அற்ற (இல்லாத) இன்பத்து (இன்பத்தில்) பேரானந்தத்திலே (பேரானந்த நிலையில் என்னை மூழ்க வைத்து)
மாச்சு (மாசு மலங்கள்) அற்ற (எதுவும் இல்லாத) என்னை (என்னை) சிவம் (சிவமாகவே) ஆக்கும் (ஆகும் படி செய்து) ஆள்வித்து (என்னை முழுவதுமாக ஆட்கொண்டு அருளி)
காச்சு (வெப்பம்) அற்ற (இல்லாத) சோதி (தூய ஜோதி உருவத்தில்) கடன் (எம்மிடம் இருந்த மாயை, அசுத்த மாயை, சுத்த மாயை ஆகிய) மூன்றும் (மூன்றையும்) கை (தம் வசமாகக் கை) கொண்டு (கொண்டு)
வாச்ச (இந்த நிலை பெற்ற எனக்கு இந்த உலகத்தில் கிடைக்கின்ற) புகழ் (புகழ்ச்சிகளில் நான் மயங்கி விடாமல்) மாள (அந்த புகழ்ச்சிகள் அழிந்து போகும் படி) தாள் (தனது திருவடிகளை) தந்து (தந்து அருளி) மன்னுமே (என்னை எப்போதும் நிலைபெற்று வாழும் படி செய்து விட்டார்).

விளக்கம்:

குருநாதராக வந்த இறைவன் பேச்சே இல்லாத இன்பத்தில் பேரானந்த நிலையில் என்னை மூழ்க வைத்து மாசு மலங்கள் எதுவும் இல்லாத என்னை சிவமாகவே ஆகும் படி செய்து என்னை முழுவதுமாக ஆட்கொண்டு அருளி வெப்பம் இல்லாத தூய ஜோதி உருவத்தில் எம்மிடம் இருந்த மாயை அசுத்த மாயை சுத்த மாயை ஆகிய மூன்றையும் தம் வசமாகக் கை கொண்டு இந்த நிலை பெற்ற எனக்கு இந்த உலகத்தில் கிடைக்கின்ற புகழ்ச்சிகளில் நான் மயங்கி விடாமல் அந்த புகழ்ச்சிகள் அழிந்து போகும் படி தனது திருவடிகளை தந்து அருளி என்னை எப்போதும் நிலைபெற்று வாழும் படி செய்து விட்டார்.

பாடல் #1596

பாடல் #1596: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

இதையத்து நாட்டத்து மென்றன் சிரத்தும்
பதியித்த வந்தப் பராபர னந்தி
கதிவைத்த வாறு மெய்காட்டிய வாறும்
விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இதையதது நாடடதது மெனறன சிரததும
பதியிதத வநதப பராபர னநதி
கதிவைதத வாறு மெயகாடடிய வாறும
விதிவைதத வாறும விளமபவொண ணாதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இதையத்து நாட்டத்தும் எந்தன் சிரத்தும்
பதிவித்த அந்த பரா பரன் நந்தி
கதி வைத்த ஆறும் மெய் காட்டிய ஆறும்
விதி வைத்த ஆறும் விளம்ப ஒண்ணாதே.

பதப்பொருள்:

இதையத்து (எமது இதயத்தில் இருக்கின்ற) நாட்டத்தும் (விருப்பத்திலும்) எந்தன் (எமது) சிரத்தும் (தலையின் மேலும்)
பதிவித்த (தனது திருவடியை நீங்காமல் வைத்து அருளிய) அந்த (அந்த) பரா (அசையா சக்தியாகிய) பரன் (பரம்பொருளாகவும்) நந்தி (குருநாதராகவும் இருக்கின்ற இறைவன்)
கதி (யாம் வீடு பேறு அடைவதற்காக) வைத்த (வைத்து அருளிய) ஆறும் (வழியையும்) மெய் (உண்மைப் பொருளை) காட்டிய (எமக்கு காட்டி அருளிய) ஆறும் (வழியையும்)
விதி (இயல்பான வாழ்க்கையின் இறப்பு விதியை மாற்றி தம்மை வந்து அடைவதையே விதியாக) வைத்த (வைத்து அருளிய) ஆறும் (வழியையும்) விளம்ப (எம்மால் வார்த்தைகளால் விவரித்து சொல்ல) ஒண்ணாதே (இயலாது).

விளக்கம்:

எமது இதயத்தில் இருக்கின்ற விருப்பத்திலும் எமது தலையின் மேலும் தனது திருவடியை நீங்காமல் வைத்து அருளிய அந்த அசையா சக்தியாகிய பரம்பொருளாகவும் குருநாதராகவும் இருக்கின்ற இறைவன், யாம் முக்தி அடைவதற்காக வைத்து அருளிய வழியையும், உண்மைப் பொருளை எமக்கு காட்டி அருளிய வழியையும், இயல்பான வாழ்க்கையின் இறப்பு விதியை மாற்றி தம்மை வந்து அடைவதையே விதியாக வைத்து அருளிய வழியையும், எம்மால் வார்த்தைகளால் விவரித்து சொல்ல இயலாது.

பாடல் #1597

பாடல் #1597: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

திருவடி வைத்தென் சிரத்தரு ணோக்கிப்
பெருவடி வைத்தந்தப் பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்
கருவடி மாற்றிடக் கண்டுகொண் டேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

திருவடி வைததென சிரததரு ணொககிப
பெருவடி வைததநதப பெரநநதி தனனைக
குருவடி விறகணட கொனையெங கொவைக
கருவடி மாறறிடக கணடுகொண டெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

திரு அடி வைத்து என் சிரத்து அருள் நோக்கி
பெரு அடி வைத்த அந்த பேர் நந்தி தன்னை
குரு வடிவில் கண்ட கோனை எம் கோவை
கரு வடிவு ஆற்றிட கண்டு கொண்டேனே.

பதப்பொருள்:

திரு (போற்றத்தக்க) அடி (அடிகளை) வைத்து (வைத்து) என் (எமது) சிரத்து (தலையின் மேல்) அருள் (தமது கனிவு கொண்ட அருள் பார்வையால்) நோக்கி (பார்த்து)
பெரு (அனைத்திலும் பெரியதான) அடி (தமது திருவடியை) வைத்த (எம்மேல் வைத்த) அந்த (அந்த) பேர் (பெருமைக்குரிய) நந்தி (குருநாதராகிய) தன்னை (இறைவனை)
குரு (குருவின்) வடிவில் (வடிவத்தில்) கண்ட (யாம் தரிசித்த) கோனை (தலைவனாகிய) எம் (எமது) கோவை (இறைவன்)
கரு (இனி எப்போதும் கருவாக) வடிவு (வந்து பிறக்கும் வழி) ஆற்றிட (இல்லாமல் போகும் படி செய்து அருளியதை) கண்டு (யாம் கொண்டு) கொண்டேனே (கொண்டோமே).

விளக்கம்:

போற்றத்தக்க தமது திருவடிகளை எமது தலையின் மேல் வைத்து, தமது கனிவு கொண்ட அருள் பார்வையால் பார்த்து, அனைத்திலும் பெரியதான தமது திருவடியை எம்மேல் வைத்த அந்த பெருமைக்குரிய குருநாதராகிய இறைவனை, குருவின் வடிவத்தில் யாம் தரிசித்த தலைவனாகிய எமது இறைவன், இனி எப்போதும் கருவாக வந்து பிறக்கும் வழி இல்லாமல் போகும் படி செய்து அருளியதை யாம் கொண்டு கொண்டோமே.

பாடல் #1598

பாடல் #1598: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல நீக்குந்
திருவடி ஞானந் திண்சித்தி முத்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

திருவடி ஞானஞ சிவமாககு விககுந
திருவடி ஞானஞ சிவலொகஞ செரககுந
திருவடி ஞானஞ சிறைமல நீககுந
திருவடி ஞானந திணசிததி முததியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

திரு அடி ஞானம் சிவம் ஆக்குவிக்கும்
திரு அடி ஞானம் சிவ லோகம் சேர்க்கும்
திரு அடி ஞானம் சிறை மலம் நீக்கும்
திரு அடி ஞானம் திண் சித்தி முத்தியே.

பதப்பொருள்:

திரு (போற்றத்தக்க) அடி (இறைவனின் திருவடிகளை எம் மேல் வைத்து அருளியதால்) ஞானம் (யாம் உணர்ந்த ஞானமே) சிவம் (சிவமாகவே) ஆக்குவிக்கும் (ஆக்கி விடும்)
திரு (போற்றத்தக்க) அடி (இறைவனின் திருவடிகளை எம் மேல் வைத்து அருளியதால்) ஞானம் (யாம் உணர்ந்த ஞானமே) சிவ (இறைவன்) லோகம் (இருக்கின்ற இடத்திற்கு) சேர்க்கும் (எம்மை கொண்டு சேர்க்கும்)
திரு (போற்றத்தக்க) அடி (இறைவனின் திருவடிகளை எம் மேல் வைத்து அருளியதால்) ஞானம் (யாம் உணர்ந்த ஞானமே) சிறை (எம்மை இந்த உலகச் சிறையில் வைத்திருக்க காரணமாகிய) மலம் (மலங்களை) நீக்கும் (நீக்கி விடும்)
திரு (போற்றத்தக்க) அடி (இறைவனின் திருவடிகளை எம் மேல் வைத்து அருளியதால்) ஞானம் (யாம் உணர்ந்த ஞானத்தால்) திண் (உறுதியாக) சித்தி (கிடைத்து விடும்) முத்தியே (முக்தியே).

விளக்கம்:

இறைவனின் போற்றத்தக்க திருவடிகளை எம் மேல் வைத்து அருளியதால் யாம் உணர்ந்த ஞானமே சிவமாகவே ஆக்கி விடும். அதுவே இறைவன் இருக்கின்ற இடத்திற்கு எம்மை கொண்டு சேர்க்கும். அதுவே எம்மை இந்த உலகச் சிறையில் வைத்திருக்க காரணமாகிய மலங்களை நீக்கி விடும். அந்த ஞானத்தால் முக்தியும் எமக்கு உறுதியாக கிடைத்து விடும்.

பாடல் #1599

பாடல் #1599: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

மேல்வைத்த வாறுசெயா விடில்மேல் வினை
மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி யானவன்
றாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெலவைதத வாறுசெயா விடிலமெல வினை
மாலவைதத சிநதையை மாயம தாககிடும
பாலவைதத செனனிப படரொளி யானவன
றாளவைதத வாறு தரிபபிதத வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேல் வைத்த ஆறு செயா விடில் மேல் வினை
மால் வைத்த சிந்தையை மாயம் அது ஆக்கிடும்
பால் வைத்த சென்னி படர் ஒளி ஆனவன்
தாள் வைத்த ஆறு தரிப்பித்த ஆறே.

பதப்பொருள்:

மேல் (எமது தலையின் மேல்) வைத்த (தமது திருவடியை இறைவன் வைத்து அருளிய) ஆறு (முறையை) செயா (செய்யாமல்) விடில் (இருந்திருந்தால்) மேல் (யான் மேலும் மேலும் சேர்ந்து கொள்ளும்) வினை (வினைகளால்)
மால் (மாயனாகிய திருமால்) வைத்த (மாயையால் வைத்த) சிந்தையை (எண்ணங்களையே கொண்டு) மாயம் (மாயத்திலேயே) அது (எமது வாழ்க்கை இருக்கும் படி) ஆக்கிடும் (ஆக்கிவிடும்)
பால் (அமிழ்தத்தை) வைத்த (வைத்துக் கொண்டு இருக்கும்) சென்னி (எமது தலையில் அமிழ்தமாக இருக்கின்றவனும்) படர் (எங்கும் படர்கின்ற) ஒளி (ஒளி வடிவமாக) ஆனவன் (இருப்பவனும் ஆகிய இறைவன்)
தாள் (தமது திருவடியை) வைத்த (எமது தலையின் மேல் வைத்து அருளிய) ஆறு (வழிமுறையும்) தரிப்பித்த (முக்திக்கான அனைத்து நலங்களையும் எமக்கு அருளிய) ஆறே (வழிமுறையுமே எம்மை அப்படிப்பட்ட மாய வாழ்க்கையிலிருந்து காப்பாற்றியது).

விளக்கம்:

எமது தலையின் மேல் தமது திருவடியை இறைவன் வைத்து அருளிய முறையை செய்யாமல் இருந்திருந்தால் யான் மேலும் மேலும் சேர்ந்து கொள்ளும் வினைகளால் மாயனாகிய திருமால் மாயையால் வைத்த எண்ணங்களையே கொண்டு மாயத்திலேயே எமது வாழ்க்கை இருக்கும் படி ஆக்கிவிடும். எமது தலையில் அமிழ்தமாக இருக்கின்றவனும் எங்கும் படர்கின்ற ஒளி வடிவமாக இருப்பவனும் ஆகிய இறைவன் தமது திருவடியை எமது தலையின் மேல் வைத்து அருளிய வழிமுறையும் முக்திக்கான அனைத்து நலங்களையும் எமக்கு அருளிய வழிமுறையுமே எம்மை அப்படிப்பட்ட மாய வாழ்க்கையிலிருந்து காப்பாற்றியது.

பாடல் #1600

பாடல் #1600: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

கழலார் கமலத் திருவடி யென்னு
நிழல்சேரப் பெற்றே னெடுமா லறியா
வழல்சேரு மங்கியு ளாதிப் பிரானுங்
குழல்சேரு மென்னுயிர் கூடுங் குலைத்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கழலார கமலத திருவடி யெனனு
நிழலசெரப பெறறெ னெடுமா லறியா
வழலசெரு மஙகியு ளாதிப பிரானுங
குழலசெரு மெனனுயிர கூடுங குலைததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கழல் ஆர் கமல திருவடி என்னும்
நிழல் சேர பெற்றேன் நெடு மால் அறியா
அழல் சேரும் அங்கி உள் ஆதி பிரானும்
குழல் சேரும் என் உயிர் கூடும் குலைத்தே.

பதப்பொருள்:

கழல் (சிலம்புகளை) ஆர் (அணிந்து கொண்டு இருக்கும்) கமல (தாமரை மலர் போன்ற) திருவடி (திருவடிகள்) என்னும் (என்று உணரப் படுகின்ற)
நிழல் (நிழலோடு) சேர (யானும் சேர்ந்து இருக்கும் படி) பெற்றேன் (இறைவனது திருவருளால் பெற்றேன்) நெடு (நீண்ட நெடும் அண்ணாமலையாக) மால் (திருமாலாலும்) அறியா (அறிய முடியாத)
அழல் (மிகப்பெரும் ஜோதியோடு) சேரும் (சேருகின்ற) அங்கி (எமக்குள் இருக்கின்ற ஜோதியின்) உள் (உள்ளே இருக்கின்ற) ஆதி (ஆதி) பிரானும் (தலைவனாகிய இறைவனோடு)
குழல் (எமது உடலோடு தலை முடியும்) சேரும் (சேர்ந்து) என் (அதனுடன் எமது) உயிர் (உயிரும்) கூடும் (சேர்ந்து அவனோடு கூடி) குலைத்தே (ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்றோம்).

விளக்கம்:

சிலம்புகளை அணிந்து கொண்டு இருக்கும் தாமரை மலர் போன்ற திருவடிகள் என்று உணரப் படுகின்ற நிழலோடு யானும் சேர்ந்து இருக்கும் படி இறைவனது திருவருளால் பெற்றேன். நீண்ட நெடும் அண்ணாமலையாக திருமாலாலும் அறிய முடியாத மிகப்பெரும் ஜோதியோடு சேருகின்ற எமக்குள் இருக்கின்ற ஜோதியின் உள்ளே இருக்கின்ற ஆதி தலைவனாகிய இறைவனோடு எமது உடலோடு சேர்ந்த தலை முடியுடன் எமது உயிரும் சேர்ந்து அவனோடு கூடி ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்றோம்.

பாடல் #1601

பாடல் #1601: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வ
ரடிமன்ன ரின்பத் தளவில்லைக் கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற தேவர்க ளீசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

முடிமனன ராயமூ வுலகம தாளவ
ரடிமனன ரினபத தளவிலலைக கெடகின
முடிமனன ராயநினற தெவரக ளீசன
குடிமனன ராயககுறற மறறுநின றாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

முடி மன்னர் ஆய் மூ உலகம் அது ஆள்வர்
அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின்
முடி மன்னர் ஆய் நின்ற தேவர்கள் ஈசன்
குடி மன்னர் ஆய் குற்றம் அற்று நின்றாரே.

பதப்பொருள்:

முடி (கிரீடத்தை சூடிக்கொண்டு இருக்கின்ற) மன்னர் (மன்னர்கள்) ஆய் (ஆக இருப்பவர்கள்) மூ (தேவ லோகம், பூலோகம், பாதாள லோகம் ஆகிய மூன்று) உலகம் (உலகங்களிலும்) அது (இருக்கின்ற பல நாடுகளை) ஆள்வர் (ஆட்சி செய்வார்கள்)
அடி (ஆனால், இறைவனது திருவடிகளை) மன்னர் (தமது நெஞ்சத்திற்குள் நிலைபெற்று வைத்து இருக்கின்றவர்கள்) இன்பத்து (அடைகின்ற பேரின்பத்திற்கு) அளவு (அளவு என்பதே) இல்லை (இல்லை) கேட்கின் (கேட்டுக் கொள்ளுங்கள்)
முடி (ஆகவே மலங்கள் இருப்பதாலேயே கிரீடத்தை சூடிக்கொண்டு இருக்கின்ற) மன்னர் (மன்னர்கள்) ஆய் (ஆக) நின்ற (நிற்கின்ற) தேவர்கள் (தேவர்கள் கூட) ஈசன் (இறைவனின்)
குடி (திருவடிகளை தமது நெஞ்சத்திற்குள் குடி வைத்த) மன்னர் (மன்னர்கள்) ஆய் (ஆக இருந்தால்) குற்றம் (எந்த விதமான மலங்களும்) அற்று (இல்லாமல்) நின்றாரே (நிற்பார்கள்).

விளக்கம்:

கிரீடத்தை சூடிக்கொண்டு இருக்கின்ற மன்னர்களாக இருப்பவர்கள் தேவ லோகம், பூலோகம், பாதாள லோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் இருக்கின்ற பல நாடுகளை ஆட்சி செய்வார்கள். ஆனால், இறைவனது திருவடிகளை தமது நெஞ்சத்திற்குள் நிலைபெற்று வைத்து இருக்கின்றவர்கள் அடைகின்ற பேரின்பத்திற்கு அளவு என்பதே இல்லை கேட்டுக் கொள்ளுங்கள். ஆகவே மலங்கள் இருப்பதாலேயே கிரீடத்தை சூடிக்கொண்டு இருக்கின்ற மன்னர்களாக நிற்கின்ற தேவர்கள் கூட இறைவனின் திருவடிகளை தமது நெஞ்சத்திற்குள் குடி வைத்த மன்னர்களாக இருந்தால் எந்த விதமான மலங்களும் இல்லாமல் நிற்பார்கள்.

கருத்து:

தேவர்கள் கன்மம் மாயை அனைத்தும் நீங்கப்பெற்று நான் என்ற எண்ணம் நீங்கி ஞானம் அடைந்தாலும் இறைவனுடன் கலக்காமல் தனிப்பட்ட தனது பெயரினால் அழைக்கப்படுவதினால் அவர்களுக்கு ஆணவமலம் இருக்கின்றது. அவர்கள் இறைவனின் திருவடிகளை தமது நெஞ்சத்திற்குள் நிலைபெற்று இருக்கும் படி செய்து விட்டால் அந்த மலமும் நீங்கி எந்தவிதமான மலங்களும் இல்லாமல் இருப்பார்கள்.

பாடல் #1602

பாடல் #1602: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

வைத்தே னடிகண் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாம
லெய்த்தே னுழலு மிருவினை மாற்றிடு
மெய்த்தே னறிந்தே னவ்வேதத்தி னந்தமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வைததெ னடிகண மனததினுள ளெநான
பொயததெ யெரியும புலனவழி பொகாம
லெயததெ னுழலு மிருவினை மாறறிடு
மெயததெ னறிநதெ னவவெதததி னநதமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வைத்தேன் அடி கண் மனத்தின் உள்ளே நான்
பொய்த்தே எரியும் புலன் வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இரு வினை மாற்றிடும்
மெய் தேன் அறிந்தேன் அவ் வேதத்தின் அந்தமே.

பதப்பொருள்:

வைத்தேன் (வைத்தேன்) அடி (இறைவனை திருவடிகளை) கண் (எனது கண்களிலும்) மனத்தின் (மனதிற்கும்) உள்ளே (உள்ளே) நான் (யான்)
பொய்த்தே (உண்மையை மறைத்து பொய்யான ஆசைகளையே) எரியும் (அதிகமாக்குகின்ற) புலன் (ஐந்து புலன்களின்) வழி (வழியே) போகாமல் (மனம் போய் விடாமல்)
எய்த்தேன் (ஆசைகளற்ற மேல் நிலைக்கு எடுத்து சென்று) உழலும் (பிறவிச் சுழலில் சுழன்று கொண்டே இருப்பதற்கு காரணமாகிய) இரு (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) வினை (வினைகளையும்) மாற்றிடும் (மாற்றிடும்)
மெய் (உண்மையான) தேன் (பேரின்பத்தைக் கொடுக்கின்ற தேனாக) அறிந்தேன் (அறிந்து கொண்டேன்) அவ் (அந்த) வேதத்தின் (வேதங்களின்) அந்தமே (எல்லையாக இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை).

விளக்கம்:

இறைவனை திருவடிகளை எனது கண்களிலும் மனதிற்கு உள்ளேயும் யான் வைத்துக் கொண்டேன். அதனால் உண்மையை மறைத்து பொய்யான ஆசைகளையே அதிகமாக்குகின்ற ஐந்து புலன்களின் வழியே மனம் போய் விடாமல் ஆசைகளற்ற மேல் நிலைக்கு எடுத்து செல்லும். அதனால் பிறவிச் சுழலில் சுழன்று கொண்டே இருப்பதற்கு காரணமாகிய நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் மாற்றிடும் உண்மையான பேரின்பத்தைக் கொடுக்கின்ற தேனாக வேதங்களின் எல்லையாக இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை யான் அறிந்து கொண்டேன்.

பாடல் #1603

பாடல் #1603: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

அடிசார லாமண்ணல் பாத மிரண்டு
முடிசார வைத்தனர் முன்னே முனிவர்
படிசார்ந்த வின்பப் பழவடி வெள்ளங்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அடிசார லாமணணல பாத மிரணடு
முடிசார வைததனர முனனெ முனிவர
படிசாரநத வினபப பழவடி வெளளங
குடிசார நெறிகூடி நிறபவர கொளகையெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அடி சாரல் ஆம் அண்ணல் பாதம் இரண்டும்
முடி சார வைத்தனர் முன்னே முனிவர்
படி சார்ந்த இன்ப பழ அடி வெள்ளம்
குடி சார் நெறி கூடி நிற்பவர் கொள்கையே.

பதப்பொருள்:

அடி (இறைவனின் திருவடிகளையே) சாரல் (சார்ந்து) ஆம் (இருக்கின்றவர்கள்) அண்ணல் (இறைவனின்) பாதம் (பாதங்கள்) இரண்டும் (இரண்டையும்)
முடி (தமது தலையின் மேல்) சார (சேர்ந்து இருக்கும்படி) வைத்தனர் (வைத்து இருக்கின்றார்கள்) முன்னே (ஆதிகாலத்தில்) முனிவர் (முற்றும் துறந்த முனிவர்கள்)
படி (அந்த திருவடிகளால் பெற்ற அருளை உலக உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்றபடி படிப் படியாக) சார்ந்த (சேர்ந்து இருக்கும் படி கொடுக்கின்றார்கள்) இன்ப (பேரின்பத்தை அருளும்) பழ (பழம் பெரும் இறைவனின்) அடி (திருவடிகளில் இருந்து) வெள்ளம் (வெள்ளம் போல் பெற்ற அருளை)
குடி (இறைவனின் திருவடிகளை தங்களின் தலையில் குடி வைத்து) சார் (அதையே சார்ந்து இருக்கின்ற) நெறி (வழிமுறையில்) கூடி (ஒன்றாக கூடி) நிற்பவர் (நிற்கின்ற அனைத்து முனிவர்களின்) கொள்கையே (கொள்கையும் இதுவே ஆகும்).

விளக்கம்:

இறைவனின் பாதங்கள் இரண்டையும் தமது தலையின் மேல் சேர்ந்து இருக்கும்படி வைத்து இறைவனின் திருவடிகளையே சார்ந்து இருக்கின்றார்கள் ஆதிகாலத்தில் முற்றும் துறந்த முனிவர்கள். பழம் பெரும் இறைவனின் அந்த திருவடிகளில் இருந்து அவர்கள் வெள்ளம் போல் பெற்ற அருளை உலக உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்றபடி படிப் படியாக அவர்களின் அனுபவிக்கும் படி படி கொடுக்கின்றார்கள் அவர்கள். இறைவனின் திருவடிகளை தங்களின் தலையில் குடி வைத்து அதையே சார்ந்து இருக்கின்ற வழிமுறையில் ஒன்றாக கூடி நிற்கின்ற அனைத்து முனிவர்களின் கொள்கையும் இதுவே ஆகும்.

கருத்து:

வெள்ளம் போன்ற இறைவனின் அருளை அப்படியே வழங்கினால் தாங்கிக் கொள்ள முடியாத உயிர்களுக்கு அவர்கள் அனுபவிக்க வேண்டிய ஆசைகளுக்கு ஏற்றபடி படிப்படியாக அனுபவிக்கும் படி மாற்றிக் கொடுத்து இறைவனின் திருவடிகளையே சார்ந்து இருக்கின்றார்கள் முற்றும் துறந்த முனிவர்கள். திருவடி பேற்றை அடைந்த இவர்களின் தன்மையை இந்தப் பாடலில் திருமூலர் அருளுகின்றார்.