பாடல் #202: முதல் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (மற்றவர்கள் துணையின் மீது ஆசைப்படாமல் இருத்தல்)
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்த மிலாத புளிமாங்கொம் பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே.
விளக்கம்:
நன்றாக உரமிட்டு நீர் பாய்ச்சி பாதுகாத்து வளர்த்த மாமரத்தில் விளைந்த சுவைமிகுந்த மாம்பழத்தை சாப்பிட விரும்பாமல் அதை பத்திரமாக அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு தமக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத யாரோ இட்ட விதையிலிருந்து எப்போதோ பெய்த மழை நீரில் வளர்ந்த புளிய மரத்தில் விளைந்த புளியம் பழத்திற்கு ஆசைப்பட்டு உறுதியில்லாத புளிய மரத்துக் கிளையில் ஏறி புளியம் பழத்தை பறிக்கும் போது கிளை முறிந்து கீழே விழுந்து காலை உடைத்துக் கொள்வது அறிவற்ற செயல். அதுபோல் தமக்கு பெற்றவர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்த அழகிய மனைவி இருக்கும்போது அவளை அறைக்குள்ளேயே பூட்டி வைத்துவிட்டு மற்றவரின் மனைவியின் மேல் ஆசைப்பட்டால் அறைக்குள் பூட்டி வைத்த பழம் எப்படி நாளாக நாளாக அழுகிவிடுமோ அதுபோலவே கட்டிய மனைவியை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தால் அவளுக்கும் முதுமை வந்து அவள் மூலம் பெறக்கூடிய சந்ததி இல்லாமல் போய்விடும்.