பாடல் # 918

பாடல் # 918 : நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் ( ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி யிருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லாருயிரைக் காக்கவல் லாரே.

விளக்கம்:

உயிர்கள் தமக்குள் இருக்கும் சகஸ்ரதள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் இறைவன் சிவசக்தியாய் ஒன்றிணைந்து வீற்றிருக்கும் விதத்தை அறிவதில்லை. திருவம்பல சக்கரத்தில் பாடல் #915 இல் உள்ளபடி மறைந்திருக்கும் ஒங்கார எழுத்தையும் மறையாமல் வீற்றிருக்கும் சிவயநம எழுத்துக்களையும் ஒன்றாக சேர்த்து தூய்மையான எண்ணத்தோடு ஜெபிக்க முடிந்தவர்களின் சகஸ்ரதள தாமரை மலர் மலர்ந்து என்றும் இறவாத நிலையை அடைவார்கள்.

பாடல் #917

பாடல் #917: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரமும் பான்மொழி பாலே.

விளக்கம்:

திருவம்பல சக்கரத்தில் நடுவில் இருக்கும் சி மந்திர எழுத்தை சுற்றி உள்ள எட்டு கட்டங்களும் எமது தலைவனாகிய இறைவன் வீற்றிருக்கும் இடங்களாகும். இந்த எட்டு கட்டங்களில் பாடல் #915 இல் உள்ளபடி மறைந்திருக்கும் ஒங்கார எழுத்தும் சக்கரத்தில் எழுதியிருக்கும் சிவயநம எழுத்துக்களும் ஒன்றாக சேரும் போது ஓம் நமசிவாய என்னும் மந்திரமாகிறது. தூய்மையான எண்ணங்களோடு இந்த மந்திரத்தை ஜெபிக்க ஈரேழு பதினான்கு உலகங்களிலும் ஒலியாகவும் ஒளியாகவும் விளங்குகின்ற சிவசக்தி திருவம்பல சக்கரத்தில் சிறந்து வீற்றிருக்கும்.

பாடல் #916

பாடல் #916: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே.

விளக்கம்:

இறைவனின் திருஉருவாக இருக்கும் ஓங்கார மந்திரத்தைக் குறிப்பதே ஹரஹர எனும் மந்திரமாகும். இதுவே திருவம்பலச் சக்கரத்தில் சிவசிவ என்று அமர்ந்திருக்கும். இதைவிட அறிந்து உணர்ந்து கொள்வதற்கு மிகவும் கடினமான மந்திரம் வேறொன்று இல்லை. அதனாலேயே உலகத்து உயிர்கள் இதை அறிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். இந்த மந்திரத்தை அறிந்து உணர்ந்து செபித்தால் அனைத்து பிறவிகளும் அன்றே அழிந்து பிறவி இல்லாத நிலையை அடைந்து தேவர்களாகவே ஆகிவிடுவார்கள்.

குறிப்பு: திருவம்பல சக்கரத்தை வரைந்து செபிப்பவர்களுக்கு சிவசிவ மந்திரம் பயனளிப்பது போல ஹரஹர மந்திரத்தை அறிந்து உணர்ந்து செபித்தாலே பலன் அளிக்கும்.

பாடல் #915

பாடல் #915: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

தானொன்றி வாழிடந் தன்னெழுத் தேயாகுந்
தானொன்று மந்நான்குந் தன்பே ரெழுத்தாகுந்
தானொன்று நாற்கோணந் தன்னைந் தெழுத்தாகுந்
தானொன்றி லேயொன்று மவ்வரனும் தானே.

விளக்கம்:

பாடல் #914 இல் உள்ளபடி சக்கரத்தில் அமர்ந்திருக்கும் இறைவன் வாழுகின்ற இடம் சக்கரத்தின் நடுவில் இருக்கும் சி என்கின்ற முதல் எழுத்தாகும். அந்த சக்கரத்தில் இருக்கும் மற்ற நான்கு எழுத்துக்களாகிய வ ய ந ம ஆகியவை இறைவனின் பேரெழுத்தாகும். சக்கரத்தின் நான்கு மூலைகளிலும் இறைவன் வாழுகின்ற சி என்ற முதல் எழுத்தே அரனாக இருந்து மொத்தம் ஐந்து எழுத்தாகின்றது. சக்கரத்தில் உள்ள அனைத்து எழுத்துக்களும் வேறு வேறாக இருந்தாலும் அவை அனைத்தும் இறைவனின் திருவுருவமாக இருக்கும் ஓம் என்னும் ஓங்கார எழுத்தாகவே இருக்கின்றது.

பாடல் #914

பாடல் #914: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை
இருந்த இரேகைமேல் ஈரா றிருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்
றிருந்த மனையொன்றி லெய்துவன் றானே.

விளக்கம்:

இறைவன் திருக்கூத்தாடுகின்ற திருவம்பல சக்கரத்தை வடிவமைக்க மேலிருந்து கீழாக பன்னிரண்டு கோடுகளும் இடமிருந்து வலமாக பன்னிரண்டு கோடுகளும் வரைந்தால் மொத்தம் 121 கட்டங்கள் வரும். இந்த கட்டங்களுக்குள் சிவயநம எனும் மந்திர எழுத்துக்களை மாற்றி மாற்றி எழுதி அமைத்தால் அந்த சக்கரத்தோடு இறைவன் அமர்ந்திருப்பான்.

பாடல் #913

பாடல் #913: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஒன்றி லிரண்டாட வோரொன் றுடமாட
வொன்றினின் மூன்றாட வோரேழு மொத்தாட
வொன்றினி னாலாட வோரொன் பதுமாட
மன்றினி லாடினான் மாணிக்கத்து கூத்தே.

ஒலைச் சுவடியில் உள்ள திருமந்திர பாடலை எளிதாக படிக்க பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றில் இரண்டு ஆட ஓர் ஒன்று உடன் ஆட
ஒன்றினில் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட
ஒன்றினிர் நால் ஆட ஓர் ஒன்பதும் ஆட
மன்றினில் ஆடினான் மாணிக்கத்து கூத்தே.

விளக்கம்:

அசையா சக்தியாக இருக்கின்ற இறைவன் அசையும் சக்தியோடு சிவசக்தியாக ஆடுகின்ற போது அவரோடு சேர்ந்து அண்டசராசரங்கள் அனைத்தும் ஆடுகின்றன. அசபை மூலம் சாதகம் செய்யும் சாதகர்களின் ஆன்மாவும் சிவசக்தியோடு சேர்ந்து ஆட அவர்களின் உடலிலுள்ள ஏழு சக்கரங்களும் அந்த சக்திகளோடு சேர்ந்து ஒன்றாக இணைந்து ஆடுகின்றது. நான்கு திசைகளும் ஒன்பது கோள்களும் சேர்ந்து இறைவன் அண்டசராசரத்தில் ஆடுகின்ற திருக்கூத்தே சாதகரின் உடலாகிய பிண்டத்தில் இறையருள் நிறைந்து மாணிக்க ஜோதியாக திருக்கூத்தாடும்.

பாடல் #912

பாடல் #912: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

கூத்தே சிவாய நமமசி வாயிடுங்
கூத்தே யாயீயூ யேயோ நமசிவாய வாயிடுங்
கூத்தே யோவாவீ யூயே யநமசிவா வாயிடுங்
கூத்தே யேயோவா யீயூவா யநமசி கோளொன்றுமாறே.

ஒலைச் சுவடியில் உள்ள திருமந்திர பாடலை எளிதாக படிக்க பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கூத்தே சிவாயநம மசிவா ஆயிடும்
கூத்தே ஆ ஈ ஊ ஏ ஓம் நமசிவாய ஆயிடும்
கூத்தே ஓம் ஆ ஈ ஊ ஏ யநமசிவா ஆயிடும்
கூத்தே ஏ ஓம் ஆ ஈ ஊ வாயநமசி கோளொன்றும் ஆறே.

விளக்கம்:

இறைவன் ஆடுகின்ற திருக்கூத்தே சிவாயநம என்னும் மந்திரமாக இருக்கின்றது. இந்த மந்திரத்திற்கான ஆதார எழுத்துக்கள் ஊ ஏ ஓம் ஆ ஈ எனும் ஐந்து எழுத்து வடிவங்களாக இருக்கின்றது. இதை பாடல் 904 இல் உள்ளபடி மேலிருந்து கீழாக ஆறு கோடுகளும் இடமிருந்து வலமாக ஆறு கோடுகளும் வரைந்து எழுத்துக்களை மாற்றி மாற்றி அமைத்தால் வரும் திருவம்பலத்தை சக்கரமாக வடிவமைத்தால் அதில் ஒன்பது கோள்களும் அடங்கி இருக்கும்.

குறிப்பு: பாடலில் உள்ளபடி சக்கரம் அமைத்து ஆதார மந்திரங்களை உச்சரிக்காமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் சாதகர்களுக்கு ஒன்பது கோள்களும் இறையருளால் வசப்படும்.

பாடல் #911

பாடல் #911: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

மேனி யிரண்டும் விலங்காமன் மேற்கொள்ள
மேனி யிரண்டு மிகாரவி காரியா
மேனி யிரண்டுமூ வாயியே யோவென்று
மேனி யிரண்டுமீ யோவூவா வேகூத்தே.

ஒலைச் சுவடியில் உள்ள திருமந்திர பாடலை எளிதாக படிக்க பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள
மேனி இரண்டும் மிகார விகாரியா
மேனி இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என்று
மேனி இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ கூத்தே.

விளக்கம்:

இறைவனது சொரூபமும் உயிர்களுடைய ஆன்மாவின் சொரூபமும் ஒன்றை விட்டு ஒன்று விலகிவிடாமல் மூச்சுக்காற்றோடு சேர்த்து ஜெபிக்கும் போது இறைவனது சொரூபமும் சாதகருடைய ஆன்மாவின் சொரூபமும் ஒன்றுக்கு ஒன்று அளவில் மாறுபடாமலும் ஒன்றோடு ஒன்று வேறுபடாமலும் இருக்கும். இறைவனது சொரூபமானது ஊ ஆ ஈ ஏ ஓ ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களாகவும் உயிர்களுடைய ஆன்மாவின் சொரூபமானது ஈ ஓ ஊ ஆ ஏ ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களாகவும் இருக்கின்றது. சாதகர்கள் இந்த மந்திரங்களை உச்சரிக்காமல் ஜெபிக்கும் போது இரண்டு சொரூபமும் ஒன்றாக கலப்பதே திருக்கூத்து ஆகும்.

குறிப்பு: இறைவனது சொரூபம் அனைத்திலும் கலந்திருக்கும் பேரொளியாகும். ஆன்ம சொரூபம் என்பது ஒவ்வொரு உயிர்களுடைய சிறிய ஒளி உருவமாகும். இறைவனது பேரொளியும் ஆன்மாவின் சிறிய ஒளியும் ஒன்றாக பாவித்து சாதகம் செய்யும் போது இறையருளால் ஆன்ம ஒளியானது பேரொளியால் காந்தம் போல் கவர்ந்திழுக்கப்பட்டு ஒன்றாக கலப்பதே திருக்கூத்தாகும்.

பாடல் #910

பாடல் #910: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஆனந்த மென்றென் றறைந்திட மானந்த
மானந்த மாயீயூ யேயோமென் றைந்திட
மானந்த மஞ்சு மாதாயிடு மானந்த
மானந்த மம்மிரீ மம்க்ஷமா மாகுமே.

ஒலைச் சுவடியில் உள்ள திருமந்திர பாடலை எளிதாக படிக்க பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனந்தம் என்று என்று அறைந்த இடம் ஆனந்தம்
ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓம் என்ற ஐந்து இடம்
ஆனந்தம் அஞ்சும் அது ஆயிடும் ஆனந்தம்
ஆனந்தம் அம்-ஹ்ரீம்-ஹம்-க்ஷம்-ஹாம் ஆகுமே.

விளக்கம்:

பாடல் எண் 909 இல் உள்ளபடி கிடைத்த பேரின்பம் என்று அழைக்கப்படுகின்ற அனைத்தும் அடங்கியிருக்கும் இடமே பேரின்பமாகும். இந்த பேரின்பம் ஆ, ஈ, ஊ, ஏ, ஓம் ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களில் அடங்கியிருக்கின்றது. இந்த ஐந்து மந்திரங்களும் பேரின்பத்தின் வடிவமாக இருக்கின்றது. இந்த ஐந்து மந்திரங்களின் ஒலி வடிவமாக அம், ஹ்ரீம், ஹம், க்ஷம், ஹாம் ஆகிய ஐந்து பீஜங்கள் இருக்கிறன.

பாடல் #909

பாடல் #909: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலுமேற்
சூக்கும மான வழியிடைக் காணலாஞ்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாஞ்
சூக்கும மான சிவனதா னந்தமே.

விளக்கம்:

பாடல் #908 இல் உள்ளபடி திருக்கூத்தின் சூட்சுமமாக இருக்கும் சிவயநம மந்திரத்தை அறிந்து எட்டாயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில் உச்சரிக்காமல் மூச்சுக்காற்றோடு சேர்த்து ஜெபிக்கும் சாதகர்கள் இறைவனை அடையும் சூட்சுமமான பாதையை காண்பார்கள். அந்த பாதையில் செல்லும் சாதகர்கள் தங்களின் பல ஜென்மங்களாக தொடரும் சூட்சுமமான வினைகளை அழித்துவிடலாம். வினைகள் அழிந்த பின் இறைவனை உணர்ந்து பேரின்பத்தில் திளைத்திருக்கலாம்.