பாடல் #1041: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)
மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதன மாகச் சமைந்த குருவென்றும்
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பரிந்தது பார்த்தே.
விளக்கம்:
பாடல் #1040 இல் உள்ளபடி சாதகர் பெற்ற இறைவனின் மாபெரும் அருளானது தமக்குள்ளே இருக்கும் மூலாக்கினியை பஞ்ச பூதங்களும் கருவியாகக் கொண்டு வளர்ந்து முழுமை அடைந்து குருவாக இருந்து தமக்குள்ளே வழிகாட்டுகிறது. அப்படி குரு காட்டிய வழிகாட்டுதலின் படி நவகுண்டமாகிய உடலானது ஏழு உலகங்களுக்கும் அதனதன் தன்மைகளுக்கு ஏற்றார் போல மாறிச் செல்கிறது. அங்கே குரு கூறிய செயலை செய்யும் பொழுது அந்த உலகம் அவர் முன்பு வணங்கி நிற்பதை பார்க்கலாம்.
கருத்து: பஞ்ச பூதங்களும் சாதகரின் உடலுக்குள்ளிருக்கும் மூலாக்கினியை வளர்ந்து கொண்டே இருக்கும். அது முழுமை அடையும் போது குருவாக நின்று ஏழு உலகங்களுக்கும் செல்ல வழிகாட்டுகிறது. அதன்படி நவகுண்டமாகிய உடலுடன் ஏழு உலகங்களுக்கும் அதனதன் தன்மைக்கேற்ப மாறி செல்லலாம். அங்கே சாதகர் செய்யும் செயலுக்கு அந்த உலகங்கள் சாதகரை வணங்கி நிற்கும்.